Ad

வியாழன், 4 நவம்பர், 2021

சென்னை: பள்ளத்தால் பறிபோன உயிர்... சாலை செப்பனிடும் பணியில் 1,000 ஊழியர்கள்!

நவம்பர் 01-ம் தேதி காலை, முகமது யூனுஸ் (31) என்னும் ஐ.டி ஊழியர், சென்னை சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையிலிருந்த பள்ளத்தில் அவரின் இருசக்கர வாகனம் ஏறி இறங்கியதில், நிலை தடுமாறியவர் அருகில் சென்ற பேருந்தின் பக்கவாட்டில் மோதி கீழே விழுந்தார். அப்போது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து காட்சி

முகமது யூனுஸ் பலியான அந்த விபத்து வீடியோ பார்ப்போரையெல்லாம் உறையவைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த விபத்து நடந்து முடிந்து முகமது யூனுஸ் உயிரிழந்திருந்தார். இந்த விபத்துக்கு முக்கிய காரணம் சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளம் தான். மழை காரணமாக அந்த பள்ளத்தில் நீர் நிறைந்திருந்ததால், அந்த பள்ளத்தை முகமது யூனுஸ் கவனித்திருக்க வாய்ப்பில்லை என்றே பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விபத்து நடந்தது சென்னையின் பிரதான சாலையான `அண்ணா சாலை'யில். நாளொன்றுக்குப் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவரும் முக்கிய சாலையிலே பள்ளம் இருக்குமென்றால். மற்ற சாலைகளின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இந்நிலையில், நேற்று (03-11-2021) காலை முதல் சென்னை மாநகராட்சி சார்பில் சாலைகளில் உள்ள பள்ளங்களையும், குழிகளையும் மூடும் பணி நடைபெற்று வருகிறது.

சரிசெய்யப்படும் சாலைகள்

இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சென்னை மாநகராட்சியால், 387 கி.மீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கி.மீ நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றது. தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கித் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளின் மேற்புறங்களில் பள்ளங்களும், போக்குவரத்து சாலைகளில் குழிகளும் ஏற்பட்டுள்ளன. தற்போது மழைக்காலமாக இருப்பினும், சாலைகளைச் சீரமைக்கக் காத்திருக்காமல் உடனடியாக சிறு பள்ளங்கள் மற்றும் குழிகளைச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒரு மண்டலத்திற்கு 10 லட்சம் ரூபாய் என்று 15 மண்டலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் குழிகள் குறித்து மாநகராட்சியின் அதிகாரிகள் மூலம் கள ஆய்வு செய்ததில் 942 சாலைகள் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பள்ளம் மற்றும் குழி உள்ள இடங்களில் தேவையான அளவு ஆழத்திற்குத் தோண்டி எடுத்து, ஜல்லி கலவை, சிமெண்ட் கான்கிரீட் கலவை அல்லது குளிர்ந்த தார் கலவை கொண்டு சரியான முறையில் நிரப்பப்பட வேண்டும்" என்றும் கூறப்பட்டுள்ளது.

சரிசெய்யப்படும் சாலைகள்

மேலும், ``இந்த பணிகளை உடனடியாக செய்துமுடித்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பான இடையூறு இல்லாத போக்குவரத்தினை உறுதிசெய்யவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள 250 மெட்ரிக் டன் குளிர்ந்த தார் கலவை கையிருப்பில் உள்ளது. மேலும் 250 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, தேவையான அளவு ஜல்லி கலவை, சிமெண்ட் கான்கிரீட் கலவை வாங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக" தெரிவித்துள்ளனர். மேலும்,1,000-க்கும் அதிகமான மாநகராட்சி ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மரம் விழுந்து பெண் காவலர் பலி

கடந்த நவம்பர் 02-ம் தேதி காலை நேரத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு அருகே உள்ள பெரிய பழமையான பெருங்கொன்றை மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மரம் விழுந்ததில், அந்த இடத்திலிருந்த முத்தயால்பேட்டை போக்குவரத்து காவலர் கவிதா(40) சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் ஒரு தலைமைக் காவலர் காயமடைந்தார். விபத்து நடைபெற்ற இடத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தலைமைச் செயலகத்தில் விழுந்த மரம்

கவிதாவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், உயிரிழந்த கவிதாவின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சம் வழங்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. சென்னையில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக மரம் வேரோடு சாய்ந்ததாகக் கூறப்பட்டது. விபத்து நடந்தது காலை நேரம் என்பதினால், காவல்துறையினர் மட்டும் பணியிலிருந்துள்ளனர். மேலும், கனமழை காரணமாகச் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களிலும், மரக்கிளைகளும், காய்ந்த மரக்கிளைகளும் முறிந்து விழுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில், மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சென்னை மாநகராட்சிக்கு உட்பட 34,224 சாலைகளில் சுமார் 1,75,309 மரங்கள் உள்ளன. மாநகராட்சி சார்பில் பருவமழை காலத்துக்கு முன்னதாகவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாநகராட்சியில் 6 நவீன ஹட்ராலிக் இயங்கித்திரங்களும், 2 மரம் அறுக்கும் இயந்திரங்களும் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் 15 மண்டலங்களிலும் 371 கையால் இயக்கம் மர அறுவை இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது" என்றும்

அகற்றப்பட மரம்

மேலும், ``கடந்த மூன்று மாதங்களாகப் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விழும் நிலையிலிருந்த சுமார் 19,025 மரக்கிளைகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற விழும் நிலையில் உள்ள மரக்கிளை குறித்த தகவலை 1913 என்ற உதவி எண்ணுக்கும், 044-2561 9206, 2561 9207 மற்றும் 2561 9208 என்ற மாநகராட்சி கட்டுப்பட்டு அறை எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: Tamil News Today: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக்கு வாய்ப்பு! - சென்னை வானிலை ஆய்வு மையம்

தற்போது சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னை சாலைகளில் உள்ள பள்ளங்களையும், குழிகளையும் சரிசெய்வதும். பாதுகாப்பற்ற விழும் நிலையில் மரம் மற்றும் மரக்கிளைகள் அகற்றுவதும் வரவேற்கத்தக்கது தான். இவர்கள் இந்த பணிகள் முன்பே செய்திருந்தால், அந்த இரண்டு உயிர்களும் காப்பாற்றப்பட்டிருக்கும் என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது!



source https://www.vikatan.com/news/accident/chennai-corporation-1000-employees-repairing-the-road-at-a-cost-of-15-crore-rupees

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக