Ad

புதன், 20 அக்டோபர், 2021

Rashmi Rocket விமர்சனம்: டாப்ஸியின் அசத்தல் பெர்பாமன்ஸ்... பாலின சோதனைகள் இன்னமும் அவசியமானவையா?

விளையாட்டு வீராங்கனைகளை கேலிக்குள்ளாக்கும் பாலின சோதனைகள் இன்னும் அவசியமா என்கிற கேள்வியை எழுப்புகிறது ஜீ5யில் வெளியாகியிருக்கும் Rashmi Rocket.
ரேஷ்மி ராக்கெட் | Rashmi Rocket

கிராமத்தில் மின்னல் கால்களுக்கான சொந்தக்காரர் ரேஷ்மி. யாரையும் வீழ்த்தும் மின்னல் கால்கள் ரேஷ்மிக்கு இயற்கை தந்த கொடை. கடந்தகாலத்தில் நிகழ்ந்த சிறு விபத்தால், ஓட்டப் பாதையை தேர்ந்தெடுக்காமல் விலகியிருக்க விரும்புகிறார். ஆனாலும், காலம் மீண்டும் ரேஷ்மியை ஓட்டத்துக்குள் நுழைக்கிறது. எந்தவித பயிற்சியும் இல்லாமல், காடுகளிலும், மேடுகளிலும் ஓடிக்கொண்டிருந்த ரேஷ்மியின் கால்கள் பதக்கங்களை வெல்கின்றன. சோதனைகளும் அதனுடன் இணைந்தே வருகின்றன. பதக்கங்கள் வென்ற ரேஷ்மிக்கு திடீரென பாலின சோதனைகள் நடத்தப்படுகின்றன. உச்சமடைந்த புகழ், ஒரேநாளில் சரிவை நோக்கிப் பாய்கிறது. அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதாக நகர்கிறது ரேஷ்மி ராக்கெட்.

சமூகத்தில் பேசப்படவேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தைப் பேசி கவனம் ஈர்க்கிறார் கதையாசிரியர் நந்தா பெரியசாமி. இனி சில மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்படலாம் என்னும் அளவுக்கு எல்லா மொழிகளிலும் பேசப்படவேண்டிய கதை. வாழ்த்துகள் ப்ரோ.

நம் சமகாலத்தில் பார்த்து வியந்த ஆளுமைகளான தடகள வீராங்கனைகள் சாந்தி, டூத்தி சந்த் போன்றவர்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தங்கள் நம் கண் முன்னர் விரிகின்றன. சாந்திக்கும், டூத்தி சந்த்துக்கும் பாலின சோதனைகள் நடத்தப்பட்டு அவர்களின் வாழ்வு கேள்விக்குள்ளானதுதான் இந்தப் படத்துக்கான ஆணிவேராக இருந்திருக்க வேண்டும். அதிலும் சாந்திக்குத் தரப்பட்ட பரிசுப் பணத்தைக்கூட தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன. அப்போதைய முதல்வர் கருணாநிதி, "ஓடியது அந்தக் கால்கள்தானே" எனத் தெரிவித்து பரிசுப் பணத்தைத் திரும்ப வாங்க மறுத்தது, கடந்த காலத்தில் நிகழ்ந்த அறம்.

ரேஷ்மி ராக்கெட் | Rashmi Rocket
வீராங்கனைகளைக் காக்க இந்திய ஒலிம்பிக் அசோஷியன் எந்த முனைப்பும் காட்டவில்லை என்பதும் கடந்தகால வரலாறு. அதை நினைவுப்படுத்தும் வகையில் திரைக்கதை எழுதப்பட்டிருப்பது சிறப்பு. அதே சமயம், இதை வெறும் இருவரின் மோதலாக நகர்த்திய விதம் சற்று சறுக்கல்.

Also Read: Venom: Let There Be Carnage விமர்சனம்: அட படத்தைவிடுங்க பாஸ், அந்த எண்டு கிரெடிட்ஸ் மட்டுமில்லன்னா?!

டாப்ஸியின் சினிமா தேர்வுகள் அதிசயிக்க வைக்கின்றன. பிங்க், முல்க், தப்பட், மன்மர்ஸியன், கேம் ஓவர், நீவெவரூ எனக் கடந்த சில ஆண்டுகளில் கதையில் தன் பாத்திரத்துக்கான முக்கியத்துவம் இருக்கும் படங்களையே பெரும்பாலும் தேர்வு செய்கிறார். வெயிலில் சுற்றி தன் நிறத்தை மாற்றிக்கொள்வது; தடகள வீராங்கனைகளுக்கான உடல் அமைப்பு; ஹேர்ஸ்டைல் என பல மெனெக்கெடல்கள் இப்படத்தில் தெரிகின்றன. சில காட்சிகளே வந்தாலும், டாப்ஸியின் அம்மாவாக வரும் சுப்ரியா பதக் சின்ன சின்ன எக்ஸ்பிரசன்களில் கவர்கிறார். வழக்கறிஞராக வரும் அபிஷேக் பேனர்ஜியிடம் மற்றுமொரு அசத்தல் பெர்பாமன்ஸ். அமித் திரிவேதியின் இசை படத்துக்கு பெரும்பலம்.

ரேஷ்மி ராக்கெட் | Rashmi Rocket
பெண்களில் சிலருக்கு இருக்கும் ஹார்மோன் வித்தியாசங்களால் பாலின சோதனைகள் நடத்துவது எவ்வளவு ஆபத்தும், அபத்தமும் நிறைந்தது என்பதைப் பேசுகிறது படம். உலக அளவில் பல அமைப்புகள் இதையெல்லாம் தடை செய்யக்கூறியும் இன்னும் இந்த அவலம் தொடர்வது ஏன் இன்னும் கேள்வியை தீர்க்கமாக முன்வைக்கிறது.

படத்தின் இறுதிக்காட்சியில் அபிஷேக் பேனர்ஜி சொல்லும் ஆண் உதாரணங்களில் அத்தனை யதார்த்தம். ஒருவருக்கு இயற்கையாவே இருக்கும் சில விஷயங்களுக்காக ஒருவரை ஒரு பாலினத்திலிருந்து பிரித்து வைப்பது அறமல்ல என்பதைச் சொல்வதுடன், இது தொடர்ந்து எந்தவித வாய்ப்புகளும் இன்றி சுயமாக மேல் எழும் நபர்களின் மீது மட்டும் ஏன் நடக்கிறது என்னும் கேள்வியையும் கேட்கிறது இந்த 'ரேஷ்மி ராக்கெட்'!



source https://cinema.vikatan.com/bollywood/rashmi-rocket-speaks-about-the-absurd-gender-tests-in-sports

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக