தஞ்சாவூரில் தொழில் அதிபர் ஒருவர் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை பங்கு தாரர்களாக சேர்த்து கொண்டு ராஹத் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கி, பேருந்துகளை இயக்கி வந்தார். அவர் திடீரென இறந்து விட்ட நிலையில் அவரின் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்திருந்தவர்கள் தங்கள் பணத்தை அவரின் குடும்பத்தினரிடம் கேட்டு வருகின்றனர். மேலும் அந்த தொழில் அதிபர் தங்களை மோசடி செய்திருப்பதாகவும், குடும்பத்தினர் ஏமாற்ற நினைப்பதாகவும் பணம் திரும்பி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து போராடி வருவது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் ரஹ்மான் நகரில் வசித்து வந்தவர் கமாலுதீன். இவருடைய மனைவி ரேஹானா பேகம். இவர்களுக்கு அப்சல் ரஹ்மான், ஹாரிஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த இருபது வருடங்களாக டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வந்த கமாலுதீன் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கி நல்ல முறையில் செயல்படுத்தி வந்தார். இதற்காக தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்து வந்த இஸ்லாமியர்களிடம் அவர்களின் விருப்பத்திற்கேற்ப பங்குதாரர்களாக சேர்த்து கொண்டு டிராவல்ஸ் நடத்தி வந்ததுடன் பங்குதாரர்களின் முதலீட்டிற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் லாப பணத்தை திருப்பி கொடுத்து வந்தார்.
இந்நிலையில் கொரோனா முதல் அலை பாதிப்புக்கு பிறகு பங்குதாரர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. நிலமையை புரிந்து கொண்ட பங்குதாரர்களும் ஒரு வருடம் வரை பணம் கேட்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கமாலுதீனிடம் பல பங்குதாரர்கள் தங்கள் முதலீட்டு பணத்தினை கேட்க தொடங்கியுள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களாகவே கடும் மன உளைச்சலில் தவித்த அவர் உடல் நல குறைப்பாட்டால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ம் தேதி உயிரிழந்தார்.
இறுதி சடங்குகள் உள்ளிட்ட காரியங்கள் முடிந்த பிறகு பங்குதாரர்கள் பலர் எங்களுக்கு லாப பணம் வேண்டாம் முதலீடு செய்த பணத்தை மட்டும் திருப்பி கொடுங்கனு கமாலுதீன் குடும்பத்தினரிடம் கேட்டதற்கு அவர்கள் முறையான பதிலை தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் தங்கள் பணத்தை மீட்டு தரும்படி முதலமைச்சர் தனி பிரிவு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி ரவளி பிரியா ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர். ராஹத் நிறுவனத்தில் சுமார் 12,000 பங்கு தாரர்கள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கமாலுதீன் மோசடி செய்திருப்பதாக கூறி தங்கள் பணத்தை கேட்டு போராடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சையது அமீருதீன் என்பவரிடம் பேசினோம், ``கமாலுதீன் ஒரு பேருந்துக்கு 16 பேர் வீதம் பங்குதாரர்கள் சேர்த்து கொண்டு பேருந்தின் ரிஜிஸ்டர் எண்ணை குறிப்பிட்டு எந்த பேருந்தில் யாரெல்லாம் முதலீடு செய்திருக்கிறார்கள் என பத்திரம் கொடுத்து பேருந்துகளை வாங்கி செயல்படுத்தி வந்தார். பேருந்தின் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகள் போக மீதி உள்ள லாபத்தினை ஒவ்வொரு மாதமும் பங்கு தாரர்களுக்கு கொடுத்து வந்தார். இதனை சரியாக செய்து வந்ததால் பெரும் நம்பிக்கை ஏற்பட்ட இஸ்லாமியர்கள் பலரும் அவருடைய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.ரூ 1 லட்சம் முதல் 5 லட்சம் வரையும் பலர் கூடுதலாகவும் முதலீடு செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் பெரும் வளர்ச்சியடைந்த ராஹத் நிறுவனத்தில், தற்போது 140 பேருந்துகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மொத்தம் 12,000 பங்குதாரர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா பரவல் தொடங்கிய பிறகு பங்குதாரர்களுக்கு லாப பணம் கொடுக்க முடியவில்லை. ஒரு வருடம் வரை யாரும் பணம் கேட்கவில்லை. அதன் பிறகும் கமாலுதீன் பணம் தராமல் இருந்தார். இதனால் பங்குதாரகள் பலரும் தங்கள் பணத்தை திருப்பி கேட்டோம். அவரும் தருவதாக கூறி வந்தார். இந்நிலையில் திடீரென அவர் இறந்து விட்டார்.
இதையடுத்து அவரது குடும்பத்தாரிடம் பணம் கேட்டதற்கு எங்களுக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது. யாரிடம் கொடுத்தீற்களோ அவர்களிடமே போய் கேளுங்கனு பதில் கூறினர். இதனை தொடர்ந்து பேருந்துகளின் ரிஜிஸ்டர் நம்பரை வைத்து ஒரு பேருந்துக்கு எத்ததை பங்கு தாரர்கள் இருக்கிறார்கள் என கணக்கெடுத்தோம். ஒரு பேருந்துக்கு 16 பேர் என்பது தான் எங்களிடம் அவர் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது ஒரு பேருந்துக்கு 100 பேர் வரை பங்குதாரர்களாக சேர்த்து மோசடி செய்ததிருப்பதுடன் யாருக்கும் இதனை தெரியாமல் மறைத்து மோசடி செய்திருக்கிறார் என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தோம்.
மேலும் 140 பேருந்துகளில் 100 பேருந்துக்கு மேல் வங்கியில் கடன் வாங்கியிருக்கிறார். நாங்கள் கொடுத்த பணத்தினை பேருந்தில் முதலீடு செய்யாமல் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். மேலும் சிபிஎஸ்இ பள்ளி, பண்ணை வீடு, பிரிண்டிங் பிளக்ஸ், ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட பல தொழிகளில் முதலீடு செய்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள், சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.
நாங்க பணம் கேட்டு அலைந்து கொண்டிருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை 2,000 பேர் ஒன்றாக சேர்ந்து ராஹத் பங்குதாரர்கள் குரூப் என்ற ஒன்றை தொடங்கி அதன் மூலம் பல்வேறு புள்ளி விவரங்களை எடுத்துள்ளோம். இன்னும் ஆயிரகணக்கானவர்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடதக்கது. நாங்கள் ஐந்து பிரிவுகளாக பிரிந்து பங்கு பணத்தை பெற போராடி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
வேறு சிலரோ, ``கும்பகோணத்தில் தங்கள் நிறுவனத்தில் பணம் செலுத்தினால் இரட்டிபாக பணம் தருவதாக கூறி ரூ 600 கோடி மோசடி செய்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இச்சம்பவம் கமாலுதீனிடம் முதலீடு செய்தவர்களிடம் அச்சத்தையும் வரவழைத்தது. அதற்கேற்றார் போல் அவரும் பணம் தர முடியாமல் சிக்கி கொண்டார். இந்நிலையில் பணம் கேட்டு பலரும் நெருக்க, `நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன் ஒரே நேரத்தில் எல்லோரும் பணம் திருப்பி கேட்டால் என்னால் எப்படி தர முடியும். குறிப்பிட்ட நேரம் கொடுங்கள். நிலமை சீரான பிறகு பணத்தை கொடுக்கிறேன்’ என உறுதி கூறியதாக சொல்லப்படுகிறது.
நிலைமை எல்லை மீறிப்போக கமாலுதீனுக்கு நெருக்கமான சிலர், `நீங்க எதுவும் குழப்பிக்காதீங்க. மஞ்சள் நோட்டீஸ் விட்டு நாம சிக்கலிருந்து எளிதாக மீண்டு விடலாம்’ என யோசனை கூற உடனே பதறியவர், `நம்மை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி தரனும். ஓடி ஒளியக்கூடாதுனு சொல்லியிருக்கிறாராம். மருத்துவமனையில் இருந்த போதும் நம்மக்கிட்ட உள்ள சொத்துக்களை விற்று எல்லோருக்கும் பணம் கொடுத்துடனும் எனவும் கூறியதாகவும் பேசப்படுகிற நிலையில் அவரது குடும்பத்தார் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை என புலம்பினர்.
Also Read: ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வழக்கு; லஞ்சம் பெற்றதாக போலீஸாரையும் விசாரிக்க முடிவு?!
கமாலுதீன் தரப்பில் பேசுவதற்கு பல வகையில் முயற்சி செய்தோம். அவரின் மகனுக்கும் போன் செய்தோம். ஆனால் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவர்கள் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளித்தால், அதனை உரிய பரிசீலனைக்குப் பின் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்..
கமாலுதீனுக்கு நெருக்கமாக இருந்த சிலர், ``கொரோனா அலை தொடங்குவதற்கு முன்பு வரை எந்த பிரச்னையும் இல்லை. போக்குவரத்து முடங்கிய பிறகு எல்லாமே தலை கீழாக மாறிவிட்டது. அவர் மறைவிற்கு பிறகு அவரது குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதும் தெரியவில்லை. ராஹத் நிறுவனத்தின் மூலமே கமாலுதீன் குடும்பம் வளர்ந்துள்ளது. அப்படியிருக்கையில் அவர்களிடத்தில் வெளிப்படைதன்மை இல்லாதது ஏன் என புரியவில்லை. இதில் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக பாதிக்கப்பட்டவர்களிடம் உறுதி கூறியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
source https://www.vikatan.com/news/crime/raahath-travels-controversy-complaints-from-share-holders
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக