தமிழகத்தில், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதியதாக செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இந்த 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிக்காக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இந்த தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த மாதம் 14-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் ஆணையர் பழனிகுமார், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவித்தார். அதேபோல மீதம் உள்ள மாவட்டங்களில் காலியாக உள்ள 789 இடங்களுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தலும் 9-ம் தேதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மொத்தம் 27,791 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் நிறைவு, வேட்பு மனுக்கள் பரிசீலனை, சின்னம் ஒதுக்குதல், பிரச்சாரம் என அடுத்தடுத்து தேர்தல் களம் சூடு பிடித்து நடைபெற்று வந்தது. 9 மாவட்டங்களில் இன்று (06.10.2021) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள இடங்களில், (04.10.2021) மாலையோடு பிரசாரங்கள் நிறைவு பெற்றன. வாக்குப்பதிவு நடைபெற உள்ள மையங்களுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள், அழியாத மை, வாக்குச்சாவடி அலுவலர்களின் கொரோனா தடுப்பு பணிகளுக்கான 13 வகையான பொருட்களை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச்செல்லும் பணிகள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றன.
9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட... 12,252 - கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்; 1,577 - கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள்; 755 - ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (ஒன்றிய கவுன்சிலர்); 78 - மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் (மாவட்ட கவுன்சிலர்) என மொத்தம் 14,662 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 7,921 வாக்குச்சாவடிகளில் (06.10.2021) நடைபெற உள்ளது.
Also Read: உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் ஸ்கோர் செய்யும் கட்சி எது? - அரசியல் விமர்சகர்கள் அலசல்
இந்த தேர்தலுக்காக 17,130 போலீஸாரும், 3,405 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம் (மாலை 5.00 - 6.00) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் கொரோனா தொற்று அறிகுறி உள்ளோர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
எந்த பதவிக்கு எந்த நிற சீட்டு?
-
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - வெள்ளை நிறம்.
-
கிராம ஊராட்சி மன்ற தலைவர் - இளஞ்சிவப்பு நிறம்.
-
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (ஒன்றிய கவுன்சிலர்) - பச்சை நிறம்.
-
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் (மாவட்ட கவுன்சிலர்) - மஞ்சள் நிறம்.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் போட்டியிடும் இடத்தில் 2-வார்டு வரும் பகுதிகளில் மட்டும் லேசான நீலநிற சீட்டு பயன்படுத்தப்படும்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பது எப்படி?
ஒரு வாக்காளர், மேற்கண்ட 4 பதவிகளுக்கான வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பூத் ஸ்லிப் வழங்கப்பட்டிருக்கும். பூத் ஸ்லிப் கிடைக்கப்பெறாதவர்கள், வாக்குச்சாவடி முன்பு அமர்ந்திருக்கும் வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தச் சீட்டை அடையாள ஆவணமாக பயன்படுத்த இயலாது. வாக்காளர் அடையாள அட்டையை அடையாளமாகக் காண்பிக்கலாம். அதைத் தவிர, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள... ஆதார் கார்ட், ஓட்டுநர் உரிமம், 100 நாள் வேலை அட்டை போன்ற 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அடையாளமாக காண்பித்து ஒரு வாக்காளர் வாக்களிக்கலாம்.
Also Read: உள்ளாட்சித் தேர்தல்: லட்சக்கணக்கில் ஏலம்போன ஊராட்சித் தலைவர் பதவிகள்?! - விழுப்புரத்தில் பரபரப்பு
வாக்குச்சாவடியின் உள்ளே சென்றதும் வாக்குச்சாவடி முகவர்கள் அமர்ந்திருப்பர். அவர்கள் முன்னிலையில், முதலாம் நிலை வாக்குச்சாவடி அலுவலரிடம் மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை வாக்காளர் காண்பிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து இரண்டாம் நிலை வாக்குச்சாவடி அலுவலரிடம் சென்றால் இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்படும். அவர்களைத் தொடர்ந்து வரிசையாக அமர்ந்திருக்கும் வாக்குச்சாவடி அலுவலர்கள், 4 வெவ்வேறு வாக்குச்சீட்டுகளை நான்கு வண்ணங்களில் அளிப்பார்கள். வாக்காளர் வாக்களித்த பின் சீட்டை மடிக்கும்போது பிழை நடைபெறாமல் இருப்பதற்காக... எப்படி சீட்டை மடிக்க வேண்டும்? என்று வாக்களிக்கும் முன்னதமே சீட்டுகள் மடித்துத் தரப்படும். அதைப் பெற்றுக் கொண்ட வாக்காளர், வாக்குப் பதிவு செய்யும் இடத்திற்குச் சென்று வாக்குப்பதிவு செய்ய வேண்டும். வாக்குப்பதிவு செய்த சீட்டுகளை ஏற்கனவே மடித்து கொடுத்ததை போலவே மடித்து, வாக்குச்சாவடி அலுவலர் முன்வைக்கப்பட்டிருக்கும் ஒரே வாக்குப் பெட்டியில் வாக்களித்த 4 சீட்டுகளையும் போடவேண்டும்.
வரும் 9ம் தேதி அன்று, 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 10,329 - கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்; 1,324 - கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள்; 626 - ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்; 62 - மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 12,341 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் 6,652 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. அன்றைய தினமே மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள 789 இடங்களுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறும்.
source https://www.vikatan.com/news/tamilnadu/9-district-local-body-elections-started-today
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக