இந்தியா Vs பாகிஸ்தான்… திருவிழாக்களில் சந்தித்துக் கொள்ளும் சொந்தங்கள் போல், ஐசிசி நடத்தும் பெரிய தொடர்களில் மட்டுமே இந்த இரு பெயர்களையும் அருகருகே பார்க்கமுடியும். அதனாலேயே, இந்த மோதல்கள் முன்னிலும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறிவிட்டன. 2019 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் மோத இருக்கின்றன.
இந்தியாவின் கேப்டனாக விராட் கோலி பாகிஸ்தானை சந்திக்கப்போகும் கடைசி டி20 போட்டியாக இது இருக்கும் என்கிற பரபரப்பு ஒருபக்கம். அதேப்போல் இன்னொருபக்கம் பாபர் ஆசம் வழிநடத்தும் முதல் உலகக்கோப்பை என்கிற பரபரப்பு ஒருபக்கம் என இரு இரண்டு மாஸ்டர் கிளாஸ் பேட்ஸ்மேன்களுக்கு இடையேயான போட்டியாகவும் இது மாறியிருக்கிறது.
வரலாறு முக்கியம்!
ஐசிசி தொடர்களில் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் மட்டுமே இந்தியாவைத் தோற்கடித்திருக்கிறது பாகிஸ்தான். மற்ற எல்லா மோதல்களிலும் இந்தியாவே வெற்றிபெற்றிருக்கிறது.
குறிப்பாக, டி20 உலகக் கோப்பை போட்டிகளில், சந்தித்த ஐந்து முறையும், இந்தியாவே வென்றிருக்கிறது. முதல் டி20 உலகக்கோப்பையையே, பாகிஸ்தானை வென்றதுதான் தோனியின் படை சாம்பியன் ஆனது.
துபாய் யாருக்கு பலம்?!
ஐபிஎல் காரணமாக அரபு பிட்ச்களை முழுமையாகப் படித்து கரைத்து குடித்திருக்கிறது இந்தியா. துபாய் பிட்ச் எப்படியெல்லாம் மாறும் என்பது இந்திய பேட்ஸ்மேன்களும், பெளலர்களுக்கும் கிட்டத்தட்ட முழுமையாகப் பழகிவிட்டிருப்பது இந்தியாவுக்குப் பெரிய பலம். கடைசிவரை பதற்றப்படமால் ஆடுவார்கள். மறுபக்கம் பாகிஸ்தானே துபாய் பக்கம் இப்போதுதான் வந்திறங்கியிருப்பதால் அவர்களுக்கு பிட்ச் பல புதுமைகளைப் பரிசாகத் தரலாம். ஆனால், பாகிஸ்தானுக்குதான் அரபு மைதானங்களில் இந்தியாவைவிடவும் அதிகமாக விளையாடிய அனுபவம் இருக்கிறது. அது அவர்களுக்கு உதவலாம். டாஸ் இன்றைய வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகவும் இருக்கலாம்.
மாறா மாற்றங்கள்!
ஷர்துல் தாக்கூரை, இறுதி அணியில் உறுதி செய்து, இந்தியா, தனது ஆயுத பலத்தை அதிகரித்துக் கொண்டது. பாகிஸ்தானோ, கடைசி தருணத்தில், ஹோல்சேல் வியாபாரமாக, பல வீரர்களை உள்ளே கொண்டு வந்து, அணியில் ஆங்காங்கே தெரிந்த ஓட்டைகளை மெழுகு பூசி அடைத்துள்ளது. அனுபவமிக்க ஷோயப் மாலிக், மிடில் ஆர்டரை வலிமையாக்கியதுடன் ஸ்பின்னுக்கும் கை கொடுக்கக் கூடியவர். மேலும், மிகச்சிறந்த ஃபார்மில் உள்ள, ஃபகார் ஸமானை உள்ளே கொண்டு வந்துள்ளதும், அவர்களது ஒட்டுமொத்த பேட்டிங் லைன் அப்பையும் அச்சுறுத்துவதாக மாற்றியுள்ளது. அதிக ஆல் ரவுண்டர்கள் இருப்பது, அவர்களது பேட்டிங் வரிசையை கடைசி வரை நீளச் செய்வதற்கான வாய்ப்பைத் தந்துள்ளதால், ஒருசிலர் சோபிக்கத் தவறினாலும், மற்றவர்கள் தாங்கிப் பிடிப்பார்.
ஓப்பனர்களும் ஃபினிஷர்களும்!
டி20 போட்டியின் அடிநாதமே, பவர்ப்ளே ஓவர்களும், டெத் ஓவர்களும், அதில் சேரும் ரன்ககளும்தான். பெரும்பாலும், ஒட்டுமொத்த அணியின் ஸ்கோரில், 70 சதவிகிதத்திற்கும் அதிகமான ரன்கள் இங்கேதான் சேரும். ஓப்பனிங்கைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு, ரோஹித் - கே.எல்.ராகுல் கூட்டணி, மிகப்பெரிய கோட்டைச் சுவர். இவர்களை வீழ்த்தி, ஊடுருவி, மற்ற பேட்ஸ்மேன்களை பார்ப்பதே, பாகிஸ்தானுக்குச் சவால்தான். அதிலும், ஐபிஎல்-ல் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டென குறை சொல்லியவர்கள் எல்லாம் "வரிசையில் வாருங்கள்" என பயிற்சிப் போட்டிகளில் அடித்து நொறுக்கியிருக்கிறார் ராகுல். அதேப்போல், இதற்கு முன்னதாக, 2019 உலகக் கோப்பையில், பாகிஸ்தானைச் சந்தித்த சந்தர்ப்பத்தில், ரோஹித் அடித்த சதம், பாகிஸ்தானுக்கு இன்னமும் பயம் காட்டிக் கொண்டுள்ளது. மறுபக்கம், பாபர் அசாமுடன் ரிஸ்வான் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. இக்கூட்டணியும் தொடக்கத்திலேயே கோலோச்சக் கூடியதுதான். மொத்தத்தில், இரு பக்கத்திலும், பவர் ப்ளேயில் ஆட்டம் அனல் பறக்கும். குறிப்பாக, இந்தியாவின் வெற்றிக்கான முதல் சாவியாக, பாபரின் விக்கெட்டே இருக்கப் போகிறது.
இந்தியாவுக்கு, இறுதி ஓவர்களில் ரன் வரமளிக்க, டெத் ஓவர்களில் டெவிலாக அவதாரமெடுக்கும் ஜடேஜா இருந்தாலும், ஹர்திக் பாண்டியாவின் சமீபகால ஃபார்ம்தான் கவலைக்குரியதாக இருக்கிறது. போட்டியின் கியரையே மாற்றக் கூடியவரான ஹஃபீஸ், பாகிஸ்தானுக்கான கனகச்சிதமான ஃபினிஷிங் மெட்டீரியல்.
ஆறாவது பௌலர் யார்?
ஐபிஎல் முழுவதிலுமே, ஒரு பந்து கூட வீசாத ஹர்திக் பாண்டியா, இந்தியாவுக்கான ஆறாவது பௌலராக யார் இருக்கப் போகிறார் என்ற கேள்வியை எழுப்பி உள்ளார். பயிற்சி ஆட்டத்தில், கோலியே இரண்டு ஓவர்களை வீசி வெள்ளோட்டம் பார்த்தது, எல்லா நிகழ்தகவுகளையும், இந்தியக் கூடாரம், கணக்கில் எடுக்கிறது என்பதைக் காட்டுகிறது. பாண்டியா பேட்ஸ்மேனாக மட்டுமே தொடர்வாரேயானால் அவருக்கு பதிலாக தாக்கூர் போன்ற மாற்று வீரரைக் களம் இறக்கலாம் என்றும் கருத்துகள் நிலவுகின்றன.
ஆறாம், ஏழாம் இடம்!
இந்தியாவுக்கு, முதல் ஐந்து இடங்களை நிரப்புவதில் எந்தத் தயக்கமும் இருக்கப் போவதில்லை. ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், பன்ட் ஆகியோர்களைத் தொடர்ந்து, ஆறாவது மற்றும் ஏழாம் இடத்தில்தான், குழப்பமே தொடங்குகிறது. காரணம், பௌலிங்கிலும் கை கொடுக்கும் பழைய பாண்டியா காணாமல் போனதுடன், சமீபத்திய ஐபிஎல்லில், 113 என்னும் அவரது ஸ்ட்ரைக்ரேட்டும்தான். இறுதி ஓவர்களில் களமிறங்கும் ஒரு வீரரிடம், அணி எதிர்நோக்குவது இவ்வளவு குறைவான ஸ்ட்ரைக்ரேட்டை அல்ல. பாண்டியா மற்றும் ஜடேஜாதான் பெரும்பாலும் அந்த இடத்தை நிரப்புவார்கள். எனினும், இழந்த ஃபார்மை மீட்டெடுத்து, பட்டாசாக பட்டையைக் கிளப்பி வரும், இஷான் கிஷன், சர்ப்ரைஸ் பேக்கேஜாக, பாண்டியாவுக்கு பதிலாக, இறக்கப்படவும் வாய்ப்புகள் உண்டு. விக்கெட் கீப்பராக, பன்ட்டையே தொடர வைத்து, பேட்ஸ்மேனாக, இஷானை இந்தியா பயன்படுத்தலாம்.
ஆடுவாரா அஷ்வின்?
பல ஆண்டுகளுக்குப் பின், டி20 அணியில், இறங்க அஷ்வினுக்கு இடம் கிடைத்துள்ளது. ஸ்பின்னுக்குக் கை கொடுக்கும் பிட்சுகள் என்பதால், வேரியஷன்களுக்காக அஷ்வின், வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார் ஆகிய ஸ்பின்னர்களை இந்தியா எடுத்திருப்பினும், அது மட்டுமே, அஷ்வினின் வாய்ப்பை உறுதி செய்து விட்டதா என்பது இன்னமும் விடை தெரியாத வினாதான். ஐபிஎல் போட்டிகளில் சொதப்பினாலும், பயிற்சி போட்டிகளில் விக்கெட்டுகள் எடுத்து நம்பிக்கை அளித்துள்ளார் அஷ்வின்.
எதிரணியில் லெஃப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன்கள் ஆடும்போது தவறாமல் அணியில் இடம்பெற வேண்டியவர் அஷ்வின். பாகிஸ்தானிலும் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அவர் இன்றைய போட்டியில் இடம் பெறுவதற்கான சாத்தியகூறுகள் சற்று அதிகமாகவே உள்ளன.
பிரமாண்ட பௌலிங் அட்டாக்!
பாகிஸ்தான், மூன்று வேகப் பந்து வீச்சாளர்களோடும், இரண்டு பிரதான ஸ்பின்னர்களோடும் இறங்க வாய்ப்புகள் உள்ளன. ஷாகீன் ஷா அஃப்ரிடி, பாகிஸ்தானுக்கான அசாத்தியமான ஃபாஸ்ட் பௌலராக உருவெடுத்துள்ளார். அதோடு, இமாத் வாசிம் தவிர்த்தும், முகமத் நவாஸ், முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக், ஷதாப் கான் என பாகிஸ்தானின் வசம், வகை வகையான ஸ்பின் பௌலர்கள் படையும் அவர்களுடைய வெற்றிக் கனவுக்கு, வெளிச்சம் கூட்டுகிறது. உண்மையில், சமபலம் பொருந்திய பாகிஸ்தான் பௌலிங் வெர்ஸஸ் இந்திய பேட்டிங்குக்கு இடையேயான பேட் - பால் யுத்தம்தான் கண்டு களிக்கும் காட்சியாகவும், போட்டியில் யார் முன்னிலை வகிப்பார்கள் என்பதனையே முடிவு செய்வதாகவும் இருக்கப் போகிறது.
கோலியைப் பொறுத்தவரை, பகுதிநேர ஸ்பின்னராக ஜடேஜா இருந்தாலும், வேகம்/சுழல் காம்பினேஷனில் 2 + 2 கணக்கை அவர் பின்பற்ற வாய்ப்புகள் அதிகம். எனினும், அதற்குள் அவர் பிரதியிடப் போகும் பௌலர்கள் யார் என்பது டாஸ் வரை, சஸ்பென்ஸாகவே இருக்கப் போகிறது. பும்ராவின் இடம் மட்டுமே ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. எக்கானமிக்கலாக பந்து வீசுவதற்குப் பெயர் பெற்ற புவனேஸ்வர், பயிற்சி ஆட்டத்தில் கூட எடுபடவில்லை. தனது அறிமுக டி20-ல் இதே பாகிஸ்தானை அவர் பதற வைத்த கதையெல்லாம் பழங்கதையாக, அவரது பிரைம் டைமை அவர் கடந்து விட்டார். இதனால், ஷமி அல்லது தாக்கூரின் பக்கம் கோலியின் பார்வை திரும்பலாம். ஷமியின் அனுபவமா, தாக்கூர் ஏற்படுத்தியுள்ள தாக்கமா என பல விஷயங்களையும் அசைபோட்டே இறுதி முடிவு எடுக்கப்படும் எனினும் ஷமி இருக்க வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில், வருண் சக்ரவர்த்திக்கான இடமும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
மென்ட்டார் தோனி!
ரோலர் கோஸ்டராக விரையும் கோலியின் பயணத்துக்கு, சீட் பெல்டாக, தோனியின் நுழைவு அமைந்துள்ளது. வாத்தி ரெய்டு ஆரம்பம் என சொல்லாமல் சொல்லி, அணிக்குள் வந்திருக்கிறார் அவர். ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி, உற்சாகத்தில் உள்ள அவரது வரவு, அணிக்குள் புது ரத்தத்தைப் பாய்ச்சி உள்ளது என்றே சொல்ல வேண்டும். ஆளுமை ததும்ப, ஸ்டம்புக்கு பின்னால் இருந்து காய்களை நகர்த்திக் கொண்டிருந்த தோனி, இம்முறை, அதனையே, வெளியே இருந்து செய்ய உள்ளார். ஸ்ட்ராடஜிக் டைம் அவுட்களில்,
அவரது காய் நகர்த்தல்கள், அணிக்கு வெற்றியை ஈட்டித் தர வல்லவை என்பதால், இந்தியாவின் கொடி இங்கேதான் சற்றே மேலெழும்புகிறது.
பயிற்சி ஆட்டங்களில், இரண்டில் ஒன்றில் பாகிஸ்தானும், விளையாடிய இரண்டிலுமே இந்தியாவும் வென்றுள்ளன. கிட்டத்தட்ட பல அளவீடுகளில், இந்தியா பாகிஸ்தானை முந்துகிறதுதான். எனினும், பாகிஸ்தானின் அனுபவம் + இளமை படையும் முட்டி மோதி, வீக் எண்ட் போட்டிக்குரிய சர்வலட்சணம் பொருந்தியதாக இதனை மாற்றும். கூடுதலாக, ஐபிஎல் காட்சிப்படுத்தியுள்ள விபரங்கள், அரபு மைதானங்கள், ஊகித்து அறிய முடியாத திருப்பு முனைகளை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளன. பல ஹேர்பின் பெண்டுகளைக் கொண்ட, டி20 போட்டிகளுக்கே உரிய நித்தியமின்மையும் அதோடுகூட சேரப் போவதால், போட்டி சுவாரஸ்யமானதாகவே இருக்கப் போகிறது.
இந்தியாவின் 'பில்லியன் சியர்ஸ் ஜெர்ஸி'யின் வடிவமைப்புக் கதையும், அதில் அமைந்துள்ள வளைவு நெளிவுகளுக்கான காரணங்களும் அனைவருக்கும் தெரிந்தவைதான். இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிகளின் போது, ரசிகர்கள் எழுப்பிய வெற்றிக் கோஷங்களின் ஒலிகள்தான், அந்த நெளிவுகளாக வடிவம் கொண்டு, ஜெர்ஸியில் இடம் பெற்றுள்ளன.
இந்திய அணி, அந்த ஒலித் துடிப்புகளை மீண்டுமொரு முறை உயிர் பெற்று, உரக்க ஒலிக்க வைத்து, வெற்றியோடு தொடரைத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். இந்திய ரசிகர்கள் விரும்புவது நேர்ந்தால், தீபாவளிக்காக வாங்கித் தேக்கியுள்ள, வாண வேடிக்கைகள் அனைத்தும் பத்து நாட்களுக்கு முன்னதாகவே வெடிக்கும் வேலை(ளை) வரும் என்பது தெரிந்த கதைதானே?
கோலியின் உலகக்கோப்பை கனவுக்கான கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்!
source https://sports.vikatan.com/cricket/will-babar-azams-pakistan-beat-powerful-kohlis-team-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக