கோவிட் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்த காலத்தில் டீக்கடைகளிலும் ஹோட்டல்களிலும் யூஸ் அண்டு த்ரோ கப்புகள், தட்டுகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இப்போது மீண்டும் கண்ணாடி தம்ளர்கள், பலரும் பயன்படுத்தும் தட்டுகளுக்கு மாறிவிட்டனர். அவற்றை வெந்நீரிலும் கழுவுவதில்லை. இது கோவிட் தொற்று அபாயத்தை அதிகரிக்குமா? வெளியிடங்களில் டீ, காபி, சாப்பாடு சாப்பிடுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?
- தர்ஷன் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.
``கோவிட் வைரஸ் தொற்றானது காற்று மற்றும் சுவாசத்துளிகள் மூலமே பரவுகிறது. கோவிட் தொற்று பாதித்த ஒரு நபர் தும்மும்போதோ, இருமும்போதோ அவர் வாயிலிருந்து வெளியேறும் எச்சில் துளிகள் காற்றில் கலந்து, அதன் மூலம் மற்றவர்களுக்கும் அந்தத் தொற்று பரவும். கோவிட் வைரஸ் தொற்றுள்ள ஒரு நபர் உபயோகித்த டம்ளர், ஸ்பூன், தட்டு போன்றவற்றை சரியாகச் சுத்தம் செய்யாமல் மற்றவர்கள் உபயோகிக்கும்போது அந்த நபருக்கும் தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம்.
அதனால்தான் கொரோனா தொற்றி தனிமைப் படுத்திக்கொண்டவர்களை அவர்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மற்றவர் உபயோகிக்காதபடி தனியே வைத்திருக்கச் சொல்லி அறிவுறுத்தப்படுகிறார்கள். தொற்றுள்ள நபர்கள் பயன்படுத்தும் பொருள்களை முறையாகச் சுத்தம் செய்த பிறகே மற்றவர்கள் உபயோகிக்க வேண்டும். குறிப்பாக, பாத்திரங்கள். முடிந்தவரை அவற்றை வெந்நீரில் கழுவிப் பயன்படுத்துவது சிறந்தது.
Also Read: Covid Questions: மாஸ்க் அணிவதால் முகமெல்லாம் பருக்கள்; என்னதான் தீர்வு?
இந்த விதியானது வீடுகளுக்கு மட்டுமல்ல, ஹோட்டல்கள், சாலையோரக் கடைகள், டீக்கடைகள் என எல்லா இடங்களுக்கும் பொருந்தும். எனவே, கொரோனா காலத்தில் நீங்கள் வெளியில் எந்த இடத்தில் டீ, காபி குடித்தாலும், உணவருந்தினாலும் அங்கே பயன்படுத்தப்படுகிற டம்ளர், தட்டு, ஸ்பூன் போன்றவை முறையாகச் சுத்தம் செய்யப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அப்படிச் செய்யாத பட்சத்தில் கேட்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. கூடியவரையில் டிஸ்போசபிள் தட்டு, கப், டம்ளர் போன்வற்றை உபயோகிப்பது கூடுதல் பாதுகாப்பு."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/will-covid-spread-through-by-using-tea-glasses-and-tea-stalls
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக