Ad

திங்கள், 4 அக்டோபர், 2021

வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என தடைபட்ட சேவைகள்... ஓர் இரவில் சரிந்த மார்க்கின் சொத்துமதிப்பு!

பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான பிரபல சமூக வலைதள சேவைகளான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூன்றுமே தொழில்நுட்ப கோளாற்றால் நேற்று இரவு செயலிழந்தன. ஐந்து மணிநேரத்துக்கும் மேல் தடைப்பட்ட இந்த சேவைகளால் அதன் பயனாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதன் விளைவாக பேஸ்புக் நிறுவனர் மற்றும் CEO மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது.

Whatsapp | Facebook |Instagram

நேற்று இந்த சேவைகள் தடைப்பட்ட சில மணிநேரங்களில் அவரது சொத்துமதிப்பு சுமார் 7 பில்லியன் டாலர் அளவில் சரிந்திருக்கிறது. அதாவது சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபாய். இதன் விளைவாக உலக பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு இறங்கி, பில் கேட்ஸுக்கு பின் சென்றிருக்கிறார் மார்க். இப்போது அவரது சொத்து மதிப்பு சுமார் 120 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்புதான் அவரது சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பும் நேற்று சுமார் 5% சரிந்திருக்கிறது. ஒரு மாதத்தில் பேஸ்புக்கின் மதிப்பு சுமார் 15% சரிந்திருக்கிறது.

Also Read: சிறு குறு தொழில்நிறுவனங்களுக்கு கடன் உதவி; ஃபேஸ்புக் செய்யப்போவது என்ன?

பிரான்செஸ் ஹவ்கென் | Frances Haugen

நேற்றைய சரிவுக்கு தொழில்நுட்ப கோளாறு மட்டும் காரணம் கிடையாது. பேஸ்புக்கின் 'Civic Integrity Unit'-ல் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் பிரான்செஸ் ஹவ்கென் அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியும் பேஸ்புக்கிற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ''நீங்கள் நினைப்பதை விட மோசமான விஷயங்கள் பேஸ்புக்கில் நடக்கின்றன'' என அவர் அளித்த பேட்டியில் லாபத்திற்காக வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகளையும், போலி செய்திகளையும் தெரிந்தே கண்டுகொள்ளாமல் பேஸ்புக் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். ஏற்கனவே பேஸ்புக்கின் இந்த போக்கை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை அவர் வெளியிட்டிருந்தார். பேஸ்புக் இதை மறுத்தாலும் அதன் நம்பகத்தன்மையின் மீது இன்னும் பல கேள்விகள் இதனால் எழுந்திருக்கின்றன. அமெரிக்க அரசும் இது குறித்து விசாரிக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

"பிறருடன் தொடர்பில் இருப்பதற்கு எங்கள் சேவைகளை நீங்கள் எவ்வளவு நம்பியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். இன்று நடந்த கோளாற்றுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என நேற்றைய தொழில்நுட்ப கோளாறுக்கு தனிப்பட்ட முறையில் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் மார்க்.


source https://www.vikatan.com/technology/tech-news/disruption-in-facebook-whatsapp-instagram-mark-zuckerberg-loses-billions-in-a-night

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக