Ad

செவ்வாய், 26 அக்டோபர், 2021

இந்து அறநிலையத்துறை கல்லூரிகளில் `இந்துக்களுக்கு மட்டுமே பணி!'- என்ன சொல்கிறார் அமைச்சர் சேகர் பாபு?

ிஇந்து சமய அறநிலையத்துறையால் தொடங்கப்படும் கல்லூரிகளில், `இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்' என்ற தமிழக அரசின் அறிவிப்பால் பெரும் சர்ச்சையே வெடித்தது. இந்த அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது. `மதச்சார்பற்ற அரசு எனச் சொல்லிக்கொள்ளும் தி.மு.க மதத்தீண்டாமையைக் கடைபிடிக்கிறது' என்றெல்லாம் பல்வேறு தரப்பினர் கண்டனக்குரல் எழுப்பினர். அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி, கொளத்தூர் கபாலீசுவர் கல்லூரிப் பணிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, முதலமைச்சரின் கைகளால் 11 பேருக்கான பணிநியமன ஆணையும் அதிரடியாக வழங்கப்பட்டிருக்கிறது. பெரும் சர்ச்சைக்குள்ளான இந்த விவகாரம் தற்போது ஐகோர்ட் வரை சென்று சூடுபிடித்திருக்கிறது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை மானியக்கூட்டத்தில், `இந்துசமய அறநிலையத்துறை சார்பாக 10 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார். முதல்கட்டமாக, சென்னை, திண்டுக்கல், நாமக்கல், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நான்கு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும், நடப்பு ஆண்டு முதலே மாணவர் சேர்க்கையும் நடைபெறும் என அரசாணையும் வெளியிடப்பட்டது. அரசின் இந்த முடிவை அனைத்து தரப்பினரும் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து, சென்னை கொளத்தூரில் `அருள்மிகு கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரி' எனும்பெயரில் புதிய கல்லூரியைத் தமிழ்நாடு அரசு தொடங்கியது. இந்தக் கல்லூரிக்கான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த அக்டோபர் 13-ம் தேதி வேலைவாய்ப்பு - விளம்பர அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், `இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்' என ஹைலைட் செய்யப்பட்ட நிபந்தனை இடம்பெற்றிருந்தது. அதுதான் பிரச்னைக்கான பிள்ளையார் சுழியிட்டது.

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம்

இந்த அறிவிப்பு வெளியானது முதலே ஆசிரியர் சங்கங்கள், அரசியல் கட்சிகள், சிறுபான்மையினர் என பல்வேறு தரப்பினர் மிகக்கடுமையாக எதிர்த்தனர். குறிப்பாக திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, ``இந்த அறிவிப்பு அரசமைப்புச் சட்ட நடைமுறைக்கே விரோதமானது! என கண்டனம் செய்தார். மேலும், ``இது அர்ச்சகர் நியமனம் போன்ற இந்து கோயில் பணிக்கான வேலையல்ல, அனைவருக்கும் கல்வி சொல்லிக்கொடுக்கும் கல்லூரிப்பணி, அரசுப்பணி! இங்கு, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையில் அனைத்து மதத்தவரும் விண்ணப்பிக்க உரிமை உண்டு. இதுபோன்ற சட்ட விரோத குறைபாடுகள் தொடக்கத்திலேயே களையப்பட வேண்டும்" என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

கி.வீரமணி

அதேபோல, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ``தமிழ்நாட்டிலுள்ள எந்தவொரு அரசு கல்லூரியிலும் கடைபிடிக்கப்படாத மதத்தீண்டாமை திமுக அரசின் இந்துசமய அறநிலையத்துறைக் கல்லூரி கடைபிடிக்கிறது. அரசு சார்பில் தொடங்கப்பட்ட கல்லூரியில் ஒரு மதத்தினர் மட்டும் பணிபுரிய வாய்ப்பளித்து, மற்ற மதத்தினர் பணிபுரிய தடைவிதிப்பது தி.மு.க-வின் மதச்சார்பின்மை முகமூடியைத் தோலுரிக்கிறது" என விமர்சித்தார்.

சீமான்

மேலும், ``முதல்வரின் சொந்தத்தொகுதியில் தொடங்கப்பட்ட கல்லூரியில் நடக்கும் மதத்தீண்டாமை, முதலமைச்சருக்கே தெரியாமல் நடக்கிறதா? திமுக, பெரும்பான்மை மதவாதத்தைக் கையிலெடுக்கிறதா? எனவும் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

இதனால் அதிருப்தியடைந்த சுஹைல் என்பவர், இந்த அறிவிப்புக்கு இடைக்கால தடைவிதிக்கக்கோரி, அக்டோபர் 19-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், ``தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எனக்கு தமிழக அரசின் பணிகளில் நியமனம் செய்ய மதம் தடையாக இருக்கக்கூடாது. இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டப் பிரிவு 16 மற்றும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் எதிரானது!" எனக் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

மேலும், ``இந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து, எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில் புதிதாக அறிவிப்பு வெளியிட இந்துசமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்" எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பணிநியமன ஆணைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியபோது

இதனைத்தொடர்ந்து, மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே அக்டோபர் 21-ம் தேதி, கபாலீசுவரர் கல்லூரிப் பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்பட்ட உதவிப் பேராசிரியர்கள், நூலகர், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட 11 பேருக்கான பணிநியமன ஆணைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகளால் உடனடியாக வழங்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த நிலையில், அக்டோபர் 22-ம் தேதி, இந்த வழக்கு விசாரணை நீதிபதி சி.சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ``கல்லூரிப் பணிநியமனம் தொடர்பான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 10-ன் படி, இந்து சமய அறநிலையத்துறை நிதி மூலம் நடத்தப்படக்கூடிய நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்!" என்று திட்டவட்டமாக வாதாடினார்.

தமிழக அரசியலில் அனல் தகித்துக்கொண்டிருக்கும் இந்த விவகாரம் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் பேசினோம்.

அமைச்சர் சேகர்பாபு

``1959-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு இந்து சமய - அறநிலைக்கொடைகள் சட்டம், பிரிவு 10-ன் படி, திருக்கோயில் வருமானத்திலிருந்து சம்பளம் பெறக்கூடியவர்கள் அனைவரும் இந்துக்களாகவே இருக்கவேண்டும். இந்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே காபாலீசுவரர் கல்லூரிக்கு பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவொன்றும் அரசு உதவிபெறும் கல்லூரியல்ல. முழுக்க முழுக்க கபாலீசுவரர் கோயில் வருமானத்தில் நடத்தப்படும் கல்லூரி. இங்கு கல்வி கற்க வருபவர்கள் எந்த மதத்தினராக வேண்டுமானலும் இருக்கலாம், ஆனால் ஊதியம் வாங்கும் பணியாளர்கள் இந்துக்களாகத்தான் இருக்கவேண்டும்!" என்றார்.

அமைச்சர் சேகர் பாபு

Also Read: `இந்து சமயம்' பெயர் நீக்கப்பட்ட அறநிலையத்துறை அலுவலக போர்டு - போர்க்கொடி தூக்கிய இந்து அமைப்புகள்!

மேலும், ``நாங்கள் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 10-ஐ பின்பற்றியிருக்கிறோம். தற்போது இதுசம்மந்தமான வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றிருப்பதால், இதுபற்றிய ஆழமான கருத்துக்களை தெரிவிக்கமுடியாது. இனி நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதைப் பின்பற்றியே இந்து சமய அறநிலையத்துறையும் செயல்படும்" என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

இதுசம்மந்தமாக சட்ட நிபுணர்களிடம் பேசியபோது, ``அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 16 (1),(2)-ன் படி, அரசின் கீழுள்ள பொதுப்பணி வேலைவாய்ப்புகளில் அனைத்து குடிமகன்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்படவேண்டும். மதம், இனம், சாதி, பாலினம், வம்சாவளி, வசிப்பிடம் ஆகிய காரணங்களுக்காக பாகுபாடு காட்டக்கூடாது. எனவே, இந்த அடிப்படை உரிமையை மீறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானது" என்றனர்.

சட்டம் என்ன சொல்கிறது?

மேலும், ``இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறநிலையச் சட்டப்பிரிவு 10-ல் கூறியிருப்பது முழுக்க கோயில் நிர்வாகம் தொடர்பானது; தவிர அறநிலையத்துறையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் போன்ற வழிபாடு தவிர்த்த பிறபணிகள் தொடர்பானது அல்ல! கோயில் நிர்வாகம் இந்துக்களுக்கு மட்டுமானது, அதைச் சார்ந்து இயங்கும் கல்வி நிறுவனங்கள் அனைவருக்கும் பொதுவானது" எனவும் தெரிவித்திருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை சட்டமா? இல்லை இந்திய அரசியலமைப்புச் சட்டமா? எதனடிப்படையில் தீர்ப்புவரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-p-k-sekar-babus-explanation-on-hr-ce-department-job-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக