Ad

வெள்ளி, 22 அக்டோபர், 2021

மரக்காணம் ஒன்றிய சேர்மன் பதவி: திமுக-வில் இரு தரப்பினர் இடையே போட்டி! -மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்தில் மொத்தம் 26 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில், இடங்களை திமுக -17, அதிமுக- 3, சுயேட்சை - 3, பாமக -2 மற்றும் விசிக - 1 ஆகியவை முறையே கைப்பற்றின. மரக்காணம் ஒன்றியத்தில், திமுக கூட்டணி மட்டுமே 18 இடங்களை கைப்பற்றி உள்ளதால், சுலபமாக சேர்மேன் பொறுப்பை பிடிக்கும் நிலை திமுக-விற்கு இருந்தது. விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மஸ்தான், தயாளன் என்பவரை கட்சி சார்பாக மரக்காணம் ஒன்றிய சேர்மனாக போட்டியிட இம்முறை வாய்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.

செஞ்சி மஸ்தான்

இதனிடையே சேர்மேன் பதவியை பிடிப்பதில் உட்கட்சிக்கு உள்ளாகவே குஸ்தி நடைபெற துவங்கியுள்ளது. மரக்காணம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கண்ணனுக்கும், மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளனுக்கும் இடையே பலமான போட்டி ஏற்பட்டுள்ளது. சுயேட்சை, அதிமுக, பாமக கவுன்சிலர்களை தன் பக்கம் இழுத்து வெற்றி பெறும் நோக்கில் கண்ணன் தரப்பு காய் நகர்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நீயா.. நானா.. போட்டி, கடந்த 20-ம் தேதி அன்று ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு செய்யும் போதும் மோதலாக மாறியது. இரு தரப்பினர் இடையே அன்று பயங்கர வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

இதனிடையே இன்று (22.10.2021) மறைமுக தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய நிலையில், ஒரு தரப்பை சேர்ந்த கண்ணன் என்பவர் மனுத்தாக்கல் செய்வதற்கு... மற்றொரு திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்தால் மரக்காணம் திமுக-வில் உட்கட்சிக்கு உள்ளாக இரு தரப்பினர் இடையே உச்சகட்ட வார்த்தை மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் கைக்கலப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர்.

Also Read: பதவிச் சண்டையில் தி.மு.க... உட்கட்சி கும்மாங்குத்து! #DMK #Stalin

சாலை மறியல்

ஒன்றிய சேர்மன் பதவியை பிடிப்பதில் பிரச்னை ஏற்பட்டதால், இன்று நடைபெற இருந்த மறைமுக தேர்தல், தேர்தல் நடத்தும் அதிகாரியால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் தரப்பு மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர். அவர்களிடையே, அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/marakanam-union-chairman-indirect-election-was-postponed-after-clash-between-two-dmk-candidates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக