Ad

செவ்வாய், 25 மே, 2021

காலையில் திருமணம், மாலையில் மாப்பிள்ளைக்கு கொரோனா... சிறு அலட்சியத்தால் நிகழ்ந்த பெருந்துயரம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சுற்றிலும் பச்சை பசேலென வயல்கள் சூழ்ந்த சிறிய கிராமம் எரவாஞ்சேரி. இங்கு வசித்த அமிர்தலிங்கம் - பவானி என்ற தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை. திருமணமான ஏழாம் ஆண்டே மூன்று குழந்தைகளையும், மனைவியையும், தனியாகத் தவிக்க விட்டுவிட்டு, வேறு ஒரு பெண்ணோடு தலைமறைவாகிவிட்டார் அமிர்தலிங்கம்.

கணவரின் துரோகத்தால் மனம் தளர்ந்துவிடாமல் "மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்கி, அவர்களுக்கு நல்ல வாழ்வை அமைத்துக் கொடுத்து விட்டுத்தான் நான் சாவேன்'' என உறவினர்கள் முன் சபதம் எடுத்து பெரும் பாடுபட்டு குழந்தைகளை வளர்த்திருக்கிறார் பவானி.

பவானி

அன்று முதல் உழைப்பு, உழைப்பு, உழைப்பு மட்டுமே! ரத்த வியர்வை சிந்திய போதிலும் பிள்ளைகளுக்கு வறுமை தெரியாமல் பொத்திப் பொத்தி வளர்த்திருக்கிறார் பவானி. பிளஸ் டூ வரை இரண்டு பெண் குழந்தைகளையும் படிக்க வைத்து நல்லதொரு இடங்களில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுத்தவர் மகனையும் ப்ளஸ் டூ வரை படிக்க வைத்திருக்கிறார். மகன் பாலச்சந்திரன் வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டதால் அவருக்கு டிரைவிங் லைசன்ஸ் எடுத்துக்கொடுத்து உறவினர் உதவியுடன் வேலைக்கு வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். வெளிநாட்டில் பாலச்சந்திரன் நன்றாக சம்பாதிக்க ஆரம்பிக்க பவானி பட்ட கஷ்டங்களுக்கு தீர்வு கிடைத்திருக்கிறது. ஓரளவு வசதியான சூழலுக்கு திரும்பிய பவானி தன் இறுதி ஆசையான மகனுக்கு திருமணம் செய்து வைத்துப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்.

அதன்படி பல இடங்களில் பெண் பார்த்து அது அந்தத் தாய்க்கு திருப்தி அளிக்காததால், இறுதியாக காரைக்கால் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா (பெண்ணின் பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற பெண்ணை மருமகளாக தேர்வு செய்திருக்கிறார். மிக எளிமையான முறையில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அதிகாலையில் அந்தத் திருமணம் நடந்தபோது பவானி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். ஆனால், அதன்பின் நடந்ததுதான் துயரம்.

பாலச்சந்திரன்

"என்னோட அண்ணன் மகன்தான் பாலச்சந்திரன். சென்னையிலுள்ள சொந்தக்காரங்களுக்கும், அவன் கூட்டாளிகளுக்கும் பத்திரிக்கை வைக்கப் போறேன்னு சொன்னான். 'கொரோனா அங்கதான் அதிகமா இருக்குன்னு சொல்றாங்கப்பா. இந்த சமயத்துல நீ அங்கே  போக வேணாம். இங்க உள்ளவங்களை  வெச்சி சிம்பிளா முடிச்சுடுவோம்'னு சொன்னேன். 'சித்தப்பா, ஒரு நாள்தானே... நான் சென்னைக்குப்போய் வச்சுட்டு வந்துடுறேன்னு' போனான். அங்க ஒருநாள் தங்கியிருந்து எல்லாருக்கும் பத்திரிகை வச்சிட்டு வந்தான். அதன்பிறகு அவன் கலகலப்பாவே இல்லை.

'என்னப்பா ஒரு மாதிரியா இருக்க'னு கேட்டதுக்கு 'அலைச்சல்ல டயர்டா இருக்கு. மாத்திரை போட்டா சரியாயிடும்'னு சொல்லி அவனே மெடிக்கலுக்கு  போயி தானாவே மாத்திரை வாங்கிப் போட்டுருக்கான். அப்பவே அவனுக்கு கொரோனா  அறிகுறி இருந்திருக்கும்போல. இதை என்கிட்ட சொல்லியிருந்தா இந்த திருமணத்தையே ரெண்டு மாசம் தள்ளி வச்சிருப்பேன். ஒண்ணுமே  சொல்லல...

காலையில் திருமணம் நடந்தது. மதியத்துக்கு மேல அவனுக்கு ஜூரம், இருமல்  அதிகமாயிடுச்சு. தாங்க முடியாத சூழ்நிலையில மயிலாடுதுறைக்கு அழைச்சிட்டுப் போனோம். அங்க கொரோனா டெஸ்ட் எடுத்து அது உறுதியானதும் திருவாரூர் ஆஸ்பிட்டலுக்கு அனுப்பிட்டாங்க. அங்க  சிகிச்சை பலன் அளிக்கல. இறந்து  போயிட்டான்"  என்று தாங்க முடியா வேதனையில் அழுதார் பாலச்சந்திரனின் உறவினர் கண்ணன்.

கண்ணன்

"பொட்டலமா கட்டிவந்து அவங்க முறைப்படி அடக்கம் செஞ்சாங்க. முகத்தைக்கூட யாரும் பார்க்க முடியல. இடுகாட்டுல எல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தா, அந்த மணப்பொண்ணு 'இனி நான் உசிரோட இருக்க மாட்டேன்'னு சொல்லி ரூம்ல போயி தூக்குமாட்டி தற்கொலை பண்ணிக்க போயிடுச்சு... படாதபாடுபட்டு காப்பாத்தி, 'இப்ப இங்க பொண்ணுக்கு பாதுகாப்பு தர முடியாது. நீங்க அழைச்சிட்டு போயிடுங்க'ன்னு பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட சொன்னோம். அவங்க சீர்வரிசையா கொடுத்த பொருள் எல்லாத்தையும் திருப்பி கொடுத்து அனுப்பி வெச்சோம்.

ஆனா, மகன் இறந்த ஏக்கத்துல மறுநாளே எங்க அண்ணி பவானிக்கு உடம்பு சரியில்ல. திரும்பவும் மயிலாடுதுறை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு ஓடுனோம். ஆனா, அன்னைக்கு சாயங்காலமே அவுங்களும் இறந்து போயிட்டாங்க. அவங்களை கொண்டுவந்து மகனை அடக்கம் செஞ்ச இடத்துக்கு பக்கத்துலயே அடக்கம் செஞ்சுட்டோம். அடுத்தடுத்து ரெண்டு பேரை பறிகொடுத்ததை எங்களால் தாங்க முடியல. பட்ட கஷ்டத்திற்கு சந்தோஷமா வாழ வேண்டிய நேரத்துல கொரோனாவால் ஒரு குடும்பமே போய்ட்டு. இதையெல்லாம் பக்கத்திலிருந்து செஞ்சதாலா எனக்கும் கொரோனா வந்து இப்பதான் குணமாகியிருக்கு" என்று கண்கலங்கினார் கண்ணன்.

ஒரு சிறு அலட்சியம் ஒரு குடும்பத்தையே மொத்தமாக துயரத்தில் மூழ்கடித்திருக்கிறது!



source https://www.vikatan.com/news/general-news/newly-wed-man-ignored-the-symptoms-of-corona-and-spoilt-the-dreams-of-the-family

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக