Ad

செவ்வாய், 25 மே, 2021

தஞ்சை மருத்துவமனைக்கு இலவசமாக 2.5 டன் வாழைப்பழங்கள்; நெகிழ வைத்த விவசாயி!

திருவையாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தஞ்சாவூரில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தினமும் வழங்குவதற்காக 2.5 டன் அளவிலான வாழைப் பழங்களை இலவசமாக வழங்கியுள்ளார். விவசாயின் இந்தச் செயலை நெகிழ்ந்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

வாழை விவசாயி மதியழகன்

திருவையாறு அருகே உள்ள வடுகக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (49) வாழை விவசாயி. தஞ்சாவூர் மாவட்ட வாழை உற்பத்தியாளர் சங்கத் தலைவராகவும் உள்ளார். இவர் தனது வாழைத்தோப்பில் உற்பத்தியான 2.5 டன் அளவிலான ரூ.60,000 மதிப்புள்ள 50,000 பூவம் ரக வாழைப் பழங்களை, வாழைத் தார்களாகவே தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இலவசமாகக் கொடுப்பதற்கு முடிவு செய்து தோட்டகலைத் துறை உதவி இயக்குநர் கலைச்செல்வன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொறுப்பு நமச்சிவாயம் ஆகியோரிடம் வாழைப்பழங்களை ஒப்படைத்தார்.

இதையடுத்து விவசாயி மதியழகனை அதிகாரிகள் பாராட்டியதுடன் அவர் வழங்கிய வாழைத் தார்களை தஞ்சாவூர் உழவர் சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கில் வைத்து பாதுகாப்பதுடன் தினமும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா சிகிச்சை எடுத்து வரும் சுமார் 2,000 பேருக்கு இந்த வாழைப்பழங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மதியழகன் கூறியதாவது, ``விவசாயிகள் பல இன்னல்களுக்கு மத்தியில் ஒவ்வொரு பயிரையும் சாகுபடி செய்து வருகின்றனர். விளைஞ்ச பொருள் யாருக்கும் பயன்படாமல் வீணானால் விவசாயிகளால் தாங்க முடியாது. கடந்த சில நாள்களுக்கு முன்பாக பெய்த கோடை மழையில் வாழைகள் பாதிக்கப்பட்டன. அதே போல் ஊரடங்கு அமலில் இருப்பதால் விளைந்த வாழைத் தார்களை விற்கவும் முடியவில்லை.

இதனால் எங்கள் பகுதியில் பயிரிடப்பட்ட வாழைப் பழங்கள் வீணாகி வருகிறது. அறுவடை செய்து விற்க வழியில்லாததால் வாழைப் பழங்களை மரத்திலேயே பறவைகள் கொத்தித் தின்று வருகிறது. வாழைப் பழங்கள் வீணாவதைப் பார்க்க என் போன்ற வாழை விவசாயிகளுக்கு மனமில்லை. விளைந்த வாழை யாருக்காவது பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என நெனச்சேன். இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வாழைப் பழத்தை வழங்க முடிவு செய்தேன்.

வாழைத்தார்கள்

அதன்படி அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று 2.5 டன் அளவிலான ரூ.60,000 வாழைப் பழங்களை வழங்கினேன். இதே போல், கடந்த ஆண்டும் கொரோனா தொற்றில் பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுப்பதற்காக 1.8 டன் வாழைப் பழங்களை வழங்கினேன். இனி வாழையும் வீணாகாது, என்னோட மனசும் நோகாது வாழைப் பழங்களைக் கொடுத்த பிறகே, எனக்கு முழு மன நிறைவு ஏற்பட்டது'' என்றார்.



source https://www.vikatan.com/news/agriculture/thanjavur-farmer-donated-free-bananas-to-govt-hospital-for-covid-patients

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக