சென்னை கே.கே.நகரில் பி.எஸ்.பி.பி தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் பணியாற்றும் வணிகவியல் ஆசிரியர் ஒருவர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றனர். இதுதொடர்பாக கடந்த 23.5.2021-ல் பள்ளியின் டீனுக்கு முன்னாள் மாணவிகள் தரப்பில் ஒரு பரபரப்பான புகார் மனு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த மனுவில் `` கடந்த 20 ஆண்டுகளாக வணிகவியல் துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவர் உடற்கல்வி வகுப்புகளையும் நடத்தி வந்தார். அப்போது மாணவிகளிடம் அநாகரீகமான கேள்விகளை கேட்டு தர்மசங்கடத்துக்குள்ளாக்கி வருகிறார். மேலும் மாணவிகளின் உருவதோற்றம் குறித்து கேலி செய்து வருகிறார்.
மாணவர்கள், ஆசிரியர் புனிதத்தை தாண்டி அவர் செயல்பட்டு வருகிறார். தொடர்ச்சியாக மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார். பாலியல் நோக்கத்தோடு கேட்ககூடாத கேள்விகளைக் கேட்டு வருகிறார். சக மாணவ, மாணவிகள் முன்னிலையில் மாணவிகளின் நடத்தைகளை விமர்ச்சிக்கிறார். நாகரீகமாக உடைகளை அணிந்த மாணவிகளை தரக்குறைவாக பேசுகிறார். இந்த ஆசிரியரின் நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் புகாரளித்திருக்கின்றனர். ஆனால் பள்ளி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெயரளவுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பி வைத்திருக்கின்றனர். அதனால் அந்த ஆசிரியர் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகளைக் கொடுத்துவருகிறார்.
மேலும் மாணவிகளிடம், என்னைப்பற்றி புகார் செய்தால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என மிரட்டி வந்துள்ளார். ஊரடங்கு காலக்கட்டத்தில் நடந்த ஆன்லைன் வகுப்புகளில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் அரைகுறை ஆடையுடன் கிளாஸ் நடத்துகிறார். அதனால் மாணவிகள் தர்மசங்கடத்துக்குள்ளாகியிருக்கின்றனர். அதோடு மாணவிகளின் போட்டோஸ்களை வாட்ஸ்அப்பில் அனுப்பும்படி ஆசிரியர் கூறியிருக்கிறார். ஆசிரியருக்கு போட்டோக்களை அனுப்பிய மாணவிகளில் சிலரிடம் `நீ அழகாக இருக்கிறாய்' என்று கூறியிருக்கிறார்.
ஒரு மாணவியிடம் `நீ என்னுடன் படம் பார்க்க வா' என்று ஆசிரியர் தெரிவித்திருக்கிறார். அதனால் மாணவிகள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வேதனையடைந்திருக்கின்றனர். மாணவிகளின் செல்போன் நம்பர், அவர்களின் பெற்றோர் செல்போன் நம்பர், வீட்டின் முகவரி என அனைத்து விவரங்களும் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் இருக்கிறது. தன்னைப்பற்றி பள்ளி நிர்வாகத்துக்கு புகரளித்தால் மதிப்பெண்களை குறைத்துவிடுவேன் என மாணவிகளை மிரட்டிவருகிறார். அவரின் செயல்பாடுகள் சட்டத்துக்கு விரோதமானது. ஆசிரியரால் பாதிக்கப்பட்டு தற்போது பள்ளியில் படித்துவரும் மாணவிகளுக்கு நாங்கள் முழு உறுதுணையாக இருப்போம்.
Also Read: கும்பகோணம்: பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை?!; அதிரவைத்த புகார்! - இளைஞர்களைத் தேடும் போலீஸார்
பள்ளியில் நடந்த பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை வெளிப்படையாக இல்லை. அது, பள்ளி மாணவிகள் சம்பந்தப்பட்ட பிரச்னை. அனைவரும் 18 வயதுக்குட்பட்டவர்கள். எனவே உடனடியாக ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை பள்ளி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றனர். மேலும் மாணவிகள் அளித்த புகாரில் 6 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. 1. சம்பந்தப்பட்ட ஆசிரியரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். 2. அவரை வகுப்புகள் நடத்த அனுமதிக்கக்கூடாது. 3. கல்வி சம்பந்தமான பணியில் ஈடுபடுத்தக்கூடாது.
4. விடைத்தாள்களை திருத்த அனுதிக்கக்கூடாது. 5. பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கமிட்டி அமைத்து சுதந்திரமாகவும் நேர்மையாகவும் விசாரணை நடத்த வேண்டும். 6. விசாரணை கமிட்டிக்கு முன் ஆசிரியரை ஆஜர்படுத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவிகளின் எதிர்கால நலன்கருதி அவர்களின் பெயர் உள்ளிட்ட எந்தவித தகவல்களும் வெளியில் வரக்கூடாது" என கூறியிருக்கிறார்கள்.
`இவரைப் போன்றவர்களுக்கு எந்தக்கல்வி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடாது.எங்களின் கோரிக்கைகளுக்கு நியாயமான முறையில் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். மாணவிகளுக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது' எனவும் முன்னாள் மாணவிகள் தங்களின் புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
மாணவிகளின் புகார் மனுவை பாடகி சின்மயி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தி.மு.க. எம்.பி கனிமொழியும் இந்தப் புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
பிரபல பள்ளியின் ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்த நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க பல தடவை முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. பள்ளி நிர்வாகத்தின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிட தயாராக இருக்கிறோம்.
source https://www.vikatan.com/news/crime/student-complaint-against-teacher-in-chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக