Ad

புதன், 26 மே, 2021

தேனி: முகக்கவசம் அணியாமல் வந்த போலீஸ்; அபராதம் விதித்த எஸ்.பி!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கெனவே கடந்த சில நாட்களாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், கடந்த 24-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மிக அத்தியாவசியத் தேவைகள் தவிர பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என காவல்துறையினரும் அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பைக்கை பறிமுதல் செய்து ஓட்டிச் சென்ற போலீஸ்

விதியை மீறி தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவர்களுக்கும், மாஸ்க் அணியாதவர்களுக்கும் போலீஸார் கடுமையாக எச்சரித்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர். திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக வெளி மாவட்டங்களுக்குச் செல்பவர்கள் உரிய இ-பதிவு சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர். தேனியில் ஆயுதப்படை போலீஸார் ஒருவர், மாஸ்க் அணியாமல் பைக்கில் சென்றதால், அவருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார் தேனி எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி.

தேனி, அரண்மனைப்புதூர் விலக்கு அருகில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி வாகனத் தணிக்கைப் பணிகளை ஆய்வுசெய்து கொண்டிருந்தார். அப்போது, தேனி சாலையை நோக்கி வந்த பைக்கை போலீஸார் நிறுத்தினர். பைக்கை ஓட்டி வந்தவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். ஆனால், மாஸ்க் அணியவில்லை. ”ஏன் மாஸ்க் போடலை?” என போலீஸார் கேட்க, “சார் நான் போலீஸ் ரஞ்சித்குமார்.என்னோட மாஸ்க்க்கில் கயிறு அறுந்திருந்ததால் போடவில்லை” என்றார் அந்த நபர். அங்கிருந்த எஸ்.பி., “கயிறு அறுந்தா என்ன? போலீஸ்னா மாஸ்க் போடக்கூடாதா? மக்கள் மத்தியில முன் மாதிரியா இருக்க வேண்டிய நம்ம டிபார்ட்மென்ட் ஆளே இப்படி இருந்தா எப்படி? அவரவர் பாதுகாப்பிற்காகத்தானே மாஸ்க் போடச் சொல்றாங்க?” எனக் கேட்டுள்ளார் சாய்சரண் தேஜஸ்வி.

போலீஸ் ரஞ்சித்தை அழைத்துச் செல்லும் மற்றொரு போலீஸ்

அத்துடன், அபராதம் விதித்ததுடன் பைக்கை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். உடனே, ஆயுதப்படை காவலரிடம் மாஸ்க் அணியாததற்காகவும், ஊரடங்கு விதியை மீறியதற்காகவும் ரூ.2,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது. போலீஸ் ரஞ்சித், எஸ்.பி., ஆயுதப்படையில் போலீஸாகப் பணிபுரிந்து வருகிறார். ”மாஸ் போடாம யாரு வந்தாலும் அபராதம் போடங்க” எனச் சொல்லி விட்டுக் கிளம்பினார் எஸ்.பி. போலீஸாருக்கு அபராதம் விதித்த சம்பவம் போலீஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/tamilnadu/theni-sp-who-fined-the-police-for-not-wearing-the-mask

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக