Ad

வியாழன், 13 மே, 2021

புத்தம் புது காலை : லாக்டெளன் ஸ்பெஷலாக ரெயின்போ கேக் செய்யலாமா... நெகிழவைக்கும் கேக் கதை!

எந்த ஒரு விழாவாக இருந்தாலும் இன்று கேக் வெட்டி கொண்டாடுவது என்பது வழக்கமாகிவிட்டது. கேக் இல்லாமல் அந்த விழாவே இல்லை என்றளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரையும் கவரக்கூடியது கேக். ஆனால், போர் உருவானதால் ஒரு கேக் உருவான கதை தெரியுமா உங்களுக்கு? அதிலும் குழந்தைகளுக்குப் பிடித்த கலர்ஃபுல்லான இந்த ரெயின்போ கேக் உருவான கதை கேக்கை விட சுவையாக இருக்கிறது.


அதென்ன ரெயின்போ கேக்... அதைச் செய்வது எப்படி என்று பார்த்தபடியே அந்த வரலாறையும் பார்த்துவிடுவோம்!

ரெயின்போ கேக் செய்யத் தேவையான பொருட்கள்:
கேக் செய்ய : 10 முட்டைகளின் வெள்ளைக் கரு, 320 கிராம் கேக் பவுடர், 240 கிராம் சர்க்கரை, 12 கிராம் பேக்கிங் பவுடர், 2 டீஸ்பூன் வெனிலா எசென்ஸ், ஏழு வகையான உணவு வண்ண சேர்க்கைகள், 40மிலி எண்ணெய்.


ஐசிங் செய்ய : 60 கிராம் ஐசிங் சுகர், 125 கிராம் வெண்ணெய், வெனிலா எசென்ஸ்.

rainbow cake

கேக் செய்ய இருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றையும் ஒரு பாத்திரத்தில் சிறிது சிறிதாக சேர்த்து, கட்டிகளின்றி கலவையாக கலந்து கொண்டு, எண்ணெய் தடவிய ஏழு கப்களில் கேக் கலவையுடன் விரும்பும் நிறங்களை தனித்தனியாக சேர்த்து, ஏழு கப்களை கேக் டிரேயில் வைத்து, 180° செல்சியஸில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.
காத்திருக்கும் நேரத்தில், வெண்ணெய் மற்றும் ஐசிங் சுகர் கலவையை ஒன்றாக சேர்த்து, அதன் க்ரீம் பஞ்சு போல வரும்வரை பீட் செய்து, கடைசியாக வெனிலா எசென்ஸை சேர்க்கவும்.


இப்போது கேக் கப்களில் ரெடியாக இருக்கும் கேக்குகளை ஒரு டிரேயில் வைத்து, ஒவ்வொரு வண்ண கேக்கிற்கு இடையே க்ரீமைத் தடவி, ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி, மிகுதியிருக்கும் க்ரீமை நிறங்கள் தெரியா வண்ணம் கோட் செய்து, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்க, வெண்மை நிற வெளிப்புறமும், உள்ளே ஒளிந்திருக்கும் வானவில்லுமாக வண்ணமயமான, சுவைமிகுந்த ரெயின்போ கேக் ரெடி.

தேடிப்பார்த்தால், இதில் நிறங்களைச் சேர்க்க, பீட்ரூட், தக்காளி, மஞ்சள் போன்ற இயற்கை உணவுப்பொருட்களை உபயோகிக்கும் ரெசிபிக்களும் நிறையவே உள்ளன.
உண்மையில் எகிப்தில் தோன்றி, இங்கிலாந்து மக்கள் இங்கே வந்தபோது கேக்கும் இங்கே வந்ததென்றாலும், இந்த வண்ணமயமான ரெயின்போ கேக்கிற்கு நெகிழ்ச்சியான ஒரு வரலாறும் உண்டு என்று கூறும் ப்ரெஞ்சு சமையல் வரலாறு, Juan's Rainbow Cake உருவான கதையை நமக்குச் சொல்கிறது.


இரண்டாம் உலகப் போரில், ஜெர்மனி மீது பிரான்ஸ் போர்த்தொடுக்க, போருக்குப் போன தனது காதல் கணவன் போர்முடிந்து திரும்புகையில் அவனை வரவேற்க, அவனுக்குப் பிடித்தமான ஸ்ட்ராபெர்ரி கேக்கைத் தயாரித்துக் காத்திருந்தாள் ஹுவான் (Juan).

முதல் நாளின் பகலும் போனது, இரவும் போனது... தனது கணவன் வீடு திரும்பவில்லை. கேக்கைப் பத்திரப்படுத்திவிட்டு தூங்கச்சென்ற ஹூவான், மறுநாள் மீண்டும் கணவனுக்காக காத்திருந்த வேளையில் தனக்குப் பிடித்த பிஸ்தா கேக்கைச் செய்கிறாள். மாலை வரை காத்திருந்த பின்பும் அவன் வரவில்லை.
இரண்டாவது கேக்கையும் பாதுகாத்துவிட்டு, மூன்றாம் நாள் இருவருக்கும் பிடித்தமான ஆரஞ்சு கேக்கைத் தயாரித்துக் காத்திருந்தாள். மூன்றாம் நாளும் அவன் வரவில்லை. ஏமாற்றத்துடன் எல்லாக் கேக்குகளையும் எடுத்து வைத்துவிட்டு உறங்கியவளை அடுத்தநாள் அதிகாலை தட்டி எழுப்பினான் அவளது அன்புக் கணவன்.


போரிலிருந்து திரும்பியவன், ஒரு கூடை நிறைய சாக்லெட்டுடன் அவளுக்கு முன் நிற்க, அழுகையுடன் அவனைப் பாய்ந்து அணைத்துக் கொண்டாள் ஹுவான். தான் தயாரித்து வைத்திருந்த மூன்று கேக்குகளையும் அடுக்கி, அவன் வாங்கி வந்த சாக்லெட்களை உருக்கி அதன்மீது ஊற்றி அவனுக்குக் கொடுக்க, ஹுவானின் அன்பிலும் காதலிலும் தெறித்த வண்ணங்களுடன் பிறந்ததுதான் இந்த வானவில் கேக் என்கிறது வரலாறு!

ஆம்... மகிழ்ச்சி என்பது ஒரு கேக் போல என்றால் பெருமகிழ்ச்சி என்பது ஒரு ரெயின்போ கேக் போல!



source https://cinema.vikatan.com/food/interesting-history-behind-rainbow-cakes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக