Ad

வியாழன், 13 மே, 2021

வேலூர்: செல்போன் திருடியதாக சந்தேகம் - சிறுவனை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூரம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள தேவரிஷிகுப்பம் கிராமத்தில் வசித்து வந்த சௌந்தரராஜ்-ராஜகிரி தம்பதியர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டனர். இவர்களின் 14 வயதுடைய ஒரே மகன் குடியாத்தம் ராமாபுரத்திலுள்ள தனது பாட்டி ஆனந்தியம்மாளின் வீட்டில் தங்கி 9-ம் வகுப்பு படித்துவருகிறான். இந்த நிலையில், நேற்று மதியம் ராமாபுரத்திலுள்ள ஒருவரது வீட்டில் செல்போன் மாயமாகியிருக்கிறது. சிலர், இந்தச் சிறுவன் மீது சந்தேகப்பட்டிருக்கிறார்கள். பாட்டி வீட்டிலிருந்த சிறுவனை வீடு புகுந்து குண்டு கட்டாக தூக்கிச்சென்ற ஒரு கும்பல், சிறுவனை அரை நிர்வாணப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

சிறுவனின் உடம்பில் ஏற்பட்ட காயங்கள்

பின்னர், அங்குள்ள ஒரு புளிய மரத்தில் கட்டிவைத்து கேபிள் வயரால் சரமாரியாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறி துடித்திருக்கிறான். இந்த கொடுமையை கண்ணில் பார்த்து துடித்துப்போன அப்பகுதி மக்கள், உடனடியாக குடியாத்தம் சப்-கலெக்டர் ஷேக் மன்சூருக்குத் தகவல் கொடுத்தனர்.

Also Read: `நான்கு மாதங்களில் நிறுத்தப்பட்ட 73 சிறுமிகளின் திருமணங்கள்!' - வேலூர் அதிர்ச்சி

அவரின் உத்தரவின்பேரில், தாசில்தார் மற்றும் காவல்துறையினர் சம்பவ பகுதிக்கு விரைந்துச் சென்று சிறுவனை மீட்டுள்ளனர். சிறுவனின் உடல் முழுவதும் சாரை சாரையாக ரத்த வீக்கம் காணப்படுகிறது. உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்டதால் குடியாத்தம் அரசு மருத்துமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். சிறுவனுக்குப் பெற்றோர் இல்லை. அதேபோல், பாதுகாவலர்கள் என்ற முறையில் ஒருவரும் சிறுவனுக்கு ஆதரவாக போலீஸில் புகாரளிக்க முன்வரவில்லை.

சிறுவனின் உடம்பில் ஏற்பட்ட காயங்கள்

இதையறிந்த குடியாத்தம் டி.எஸ்.பி ஸ்ரீதரன், சிறுவனைத் தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரதராமி போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிந்து சிறுவனைத் தாக்கிய மூன்றுப் பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதேசமயம், ‘போலீஸ் புகாரெல்லாம் வேண்டாம்; வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்’ என்று சிறுவனை அரவணைத்து வரும் வயதான மூதாட்டியை எதிர்தரப்பு கும்பல் மிரட்டி வருவதாகவும் சொல்கிறார்கள். இந்த விவகாரத்தில் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சிறுவனுக்கும், அவரின் பாட்டிக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.



source https://www.vikatan.com/social-affairs/crime/gudiyatham-cellphone-theft-attack-on-boy-police-investigation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக