Ad

செவ்வாய், 25 மே, 2021

புத்தம் புது காலை : ஒரு சிறுமியின் வருகைக்காக ஏன் காத்திருந்தார் கெளதம புத்தர்?!

அந்த சிறிய கிராமத்திற்கு வருகை தருகிறார் கௌதம புத்தர். உலகப்பிரசித்தி பெற்ற தத்துவ ஞானி ஒருவர் தங்களது கிராமத்திற்கு வருகை புரிந்ததால் பெருமகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள் அனைவரும், அவரை வரவேற்று, அவரை இருக்கையில் அமரவைத்து, அவரது ஆசிகளுக்காகவும், சொற்பொழிவுக்காகவும் காத்திருந்தனர்.

ஆனால், புத்தரோ, தான் பயணித்து வந்த சாலையையே தேடலுடன் திரும்பத்திரும்ப பார்த்துக் கொண்டிருந்தார்.

"யாரேனும் வருவதற்காக காத்திருக்கிறீர்களா?" என்று ஊர் பெரியவர் ஒருவர் கேட்க,"ஆம்..." என்று பதிலளித்த புத்தர் மீண்டும் சாலையை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

"இந்த கிராமத்தின் முக்கியஸ்தர்கள் அனைவருமே இங்கு கூடியுள்ளனர்... நீங்கள் உங்கள் உரையைத் தொடங்கலாமே" என்று மீண்டும் கேட்கிறார் பெரியவர்.

"இல்லை.. நான் வரும்போது என்னைச் சாலையில் சந்தித்த அந்தச்சிறுமி தனது தந்தைக்கு உணவளித்துவிட்டு வரும்வரை என்னைக் காத்திருக்கச் சொன்னாள். கட்டாயம் வந்துவிடுவாள். அவள் வந்தபிறகு தொடங்கலாம்!" என்றபடி காத்திருக்கிறார் புத்தர்.

இறுதியாக ஓடோடி வந்தாள் அந்தச் சிறுமி!

இலங்கையின் புத்தர் கோவில்களில் ஒன்று

"மன்னிக்க வேண்டும்... சிறிது தாமதமாகிவிட்டது!'' என்றவள்,

''ஆனால், தங்களது வருகைக்காக நான் கடந்த பத்தாண்டுகளாகக் காத்திருக்கிறேன் தெரியுமா?" என்று சொன்ன சிறுமி தொடர்ந்து பேசினாள். "எனக்கு நான்கு வயதிருக்கும் போது, உங்களைப்பற்றி ஒருமுறை எனது தந்தை சொன்னார். அன்றிலிருந்து இன்றுவரை எப்போது உங்களைப் பார்ப்பேன் என்று ஆவலோடு காத்திருந்தேன்!" என்றாள்.

சிறுமியைப் பார்த்து புன்னகைத்த புத்தர் சொன்னார், "குழந்தையே... காத்திருந்தது வீண் போகவில்லை. இன்று என்னை இங்கு அழைத்து வந்ததே உனது தேடல்தான்!" என்றார்.

புத்தருடைய வார்த்தைகள் எப்போதும் பொருளுடையவை என்று தெரியும் என்பதால், அன்று இரவு புத்தரைச் சந்தித்த அவருடைய சிஷ்யர் ஆனந்தா, "குருவே... அவ்வளவு பெரியவர்கள் இருந்த ஊரில், உண்மையாகவே அந்தச் சிறுமியின் ஆவல்தான் உங்களை இவ்வளவு தூரம் அழைத்து வந்ததா?" என்று கேட்க, புத்தர் சிரித்தபடி சொன்னார்.

"வேறென்னவாக இருக்க முடியும் ஆனந்தா... இங்கு பெரியவர் என்ன, சிறியவர் என்ன... தாகம் இருப்பவர்களைத்தானே நீர் திருப்திப்படுத்த முடியும்? அதுபோல என்னை எதிர்நோக்கி இருப்பவர்களின் ஈர்ப்புதானே என்னை அங்கே செல்லவேண்டும் என்று முடிவெடுக்க வைக்கிறது" என்றவர் தொடர்ந்து பேசினார்.

"உண்மையில் கற்பதும், கற்பிப்பதும் ஒருங்கிணைந்த செயலாக இருக்கும்போது, மானுடத்தின் தேடல் முழுமையடைகிறது. சீடன் குருவைத் தேடுகிறான். குரு, சீடனுக்காக காத்திருக்கிறார். இப்போதோ, பிறகோ அவர்கள் சந்திக்கப் போகிறார்கள். இவரின் ஜோதியை அவன் ஏற்று நடக்கப்போகிறான். உடலாகிய விளக்குகள்தான் இரண்டு. உள்ளே எரியும் ஜோதி ஒன்றுதானே!" என்றார்.

புத்தர்

ஆம்...

"எதை நீ தேடிக் கொண்டிருக்கிறாயோ... அது உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறது" என்கிறார் ரூமி. "மாணவன் தயாராக இருக்கும்போது, குரு அங்கே நிச்சயம் தோன்றுகிறார். அதே மாணவன் தயாரானதும், குரு போய்விடுகிறார்" என்கிறார் லாவோட்சு.

புத்தரும் அப்படிப்பட்ட ஒரு குரு. தான் போகும் இடங்களில் எல்லாம் தனது ஞான ஜோதியால், மெய்யறிவு, நம்பிக்கை, எனும் விளக்குகளை பற்றவைத்துக் கொண்டேதான் போனார். எத்தனை விளக்குகளை பற்ற வைத்தாலும் தன் ஒளியை சிறிதும் இழக்காத தீபம் போல அவரும் சுடர்விட்டுக் கொண்டே தான் இருந்தார்.

புத்தர் என்ற சொல்லுக்கே ஒளி பொருந்தியவர் என்றுதான் பொருளாம். அதனால் தான் புத்தர் பிறந்த தினம், புத்தர் ஞானம் பெற்ற தினம், புத்தர் இறையடி சேர்ந்த தினம் என்ற மூன்றும் ஒளி பொருந்திய பௌர்ணமி தினத்தில் அதுவும் வைகாசி பௌர்ணமியிலேயே நிகழ்ந்ததுள்ளது போல!

இன்று புத்த பூர்ணிமா!



source https://www.vikatan.com/news/general-news/remembering-buddha-on-buddha-purnima-day

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக