Ad

திங்கள், 24 மே, 2021

'' ‘அண்ணாத்த’ மட்டும்தான் என்னோட ஒரே கவலை… இனி நடிப்பேனா எனத் தெரியாது!’’ ஐதராபாத்தில் கலங்கிய ரஜினி

கொரோனா பரவல் நெருக்கடிகளுக்கு இடையிலும் வாக்கு கொடுத்தபடி ‘அண்ணாத்த' படத்தில் தன்னுடைய பணிகளை முழுவதும் முடித்துக் கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘அண்ணாத்த'. 2019-ம் ஆண்டின் இறுதியில் ஷூட்டிங் தொடங்கிய இப்படம் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தடைகளை சந்தித்து இப்போது கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. இப்படத்துக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 80 நாட்கள் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

கடைசியாக இப்போது ஐதராபாத்தில் ஏப்ரல் 9-ம் தொடங்கி தொடர்ந்து 32 நாட்கள் நடித்து தன்னுடைய பகுதியை முடித்திருக்கிறார் ரஜினி. படத்தின் ஷூட்டிங் இன்னும் 10 நாட்களே மீதம் இருக்கிறது. மீனா, நயன்தாரா சம்பந்தப்பட்ட அந்தக் காட்சிகள் கொரோனா பரவல் குறைந்ததும் கொல்கத்தாவில் படமாக்கப்பட இருக்கிறது என்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் நடக்கும்போதே எடிட்டிங் பணிகளும் நடந்ததால் படம் கிட்டத்தட்ட முழுமையாகவே இருக்கிறதாம். அதனால் திட்டமிட்டபடி இந்தாண்டு நவம்பர் 4-ம் தேதி தியேட்டர்களில் படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

`அண்ணாத்த’ படக்குழுவுடன் ரஜினி

ஷூட்டிங்கின் இறுதிநாளில் படக்குழுவினரிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் ரஜினி. அப்போது ‘’இன்னும் ஒன்றிரண்டு படங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், உடல் ஒத்துழைக்குமா, என்னால் தொடர்ந்து நடிக்கமுடியுமா எனத் தெரியவில்லை. ‘அண்ணாத்த' என் கரியரில் முக்கியமான படமாக இருக்கும். இந்தப் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே கவலையாக இருந்தது. இப்போது ‘அண்ணாத்த' படம் நல்லபடியாக முடிந்திருக்கிறது. எல்லோரும் வீட்டுக்குப் போய் பத்திரமா இருங்கள். மீதி இருக்கும் வேலைகளை கொரோனா குறைந்த பிறகு செய்யலாம். உங்கள் பாதுகாப்பும், உங்கள் வீட்டில் இருக்கிறவர்களின் பாதுகாப்பும்தான் முக்கியம். படம் லேட் ஆனதைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம்’’ என்று பேசியிருக்கிறார் ரஜினி.

‘அண்ணாத்த’ படத்தைப் பொறுத்தவரை பாடல், சண்டைக்காட்சிகள் என அனைத்து படப்பிடிப்பும் திட்டமிட்டபடி முடிந்துவிட்டதாம். படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு நிச்சயம் தியேட்டர்களுக்கு வந்துவிடும் என்கிறார்கள்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/rajinikanth-becomes-emotional-on-the-last-day-of-annathe-shoot

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக