Ad

புதன், 5 மே, 2021

புத்தம் புது காலை : ''ஈகோ புடிச்சி ஆடலாமா?"... சிக்மண்ட் ஃபிராய்டும், அவரது ஆய்வும் சொல்வது என்ன?

ஒரு முக்கியமான ஆஃபீஸ் மீட்டிங்கில் நீங்கள் இருக்கிறீர்கள். பல்வேறு காரணங்களால் மீட்டிங் சற்று தாமதமாக நேரம் மதியம் இரண்டு மணி ஆகிவிடுகிறது. உங்களுக்குப் பசியெடுக்கிறது...

"எனக்கு பயங்கரப்பசி. உடனே ஏதாவது சாப்பிடணும்..." என்று உங்கள் மனதில் தோன்றியவுடன், நீங்கள் சாப்பிட எழுந்து வெளியே போவதுதான் ID.

"முக்கியமான மீட்டிங் நடந்துட்டு இருக்கல்ல... கொஞ்சம் பொறுமையா இரு!" என்று உங்களது பசியை, உங்கள் மனம் அடக்குவது Ego.

"இத்தனை பெரிய மனுஷங்க மத்தியில, இவ்வளவு முக்கியமான மீட்டிங் நடந்துட்டு இருக்கற நேரத்தில பசிக்குதுன்னு மரியாதை இல்லாம எந்திரிச்சு சாப்பிடப் போறது நல்லாவா இருக்கும், மத்தவங்க உன்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?" என்று உங்கள் மனம், ஒருபடி மேலே சென்று, சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து, உங்களை அறிவுறுத்துவது Super Ego.

"இதெல்லாம் நம்முள் அன்றாடம் நடக்கும் விஷயங்கள் தானே? இதற்கு எதற்கு வேறு புதிய பெயர்கள்?" என்று கேள்வி கேட்பவர்களுக்கான கேள்வி இது. "இன்றைய அறிவியல் உலகிலும் இறைவனை நம்புபவர்கள் இருக்கிறார்களே, எந்தவித அறிவியல் ஆதாரம் இல்லாதபோதும் எப்படி கடவுள், மனம், மனசாட்சி, உயிர் ஆகியவற்றை மனதிற்குள் உருவகப்படுத்தி மனிதர்கள் வாழ்கின்றனர்?" - இதே கேள்வியை நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுப்பிய உளவியலின் தந்தை என போற்றப்படும் டாக்டர் சிக்மண்ட் ஃபிராய்ட், தனது ஆய்வுகள் மற்றும் புரிதல்கள் மூலமாக மனித மனங்களை மனங்களை வகைப்படுத்தியிருக்கிறார். ஐடி, ஈகோ, சூப்பர் ஈகோ என்று மூன்று வகையாகப் பிரித்திருப்பவர், அவற்றின் முக்கியத்துவத்தையும், அவற்றின் தேவைகளையும், 'The Ego and The ID' என்ற தனது புத்தகத்தில், Tripartite Theory-யில் விளக்கமாக எழுதியுள்ளார்.

96

இப்போது சிக்மண்ட் ஃபிராய்ட் வழியாக, இந்த மன இயல்புகளை சற்று ஆழமாகப் பார்ப்போமா?

ID எனும் Instincts and Drives!

ஒரு குழந்தை பசித்ததும் அழுவது போல, ஒரு காட்டுவாசி விரும்பியதும் புணர்வது போல (வேட்டையாடுவது) எந்தவொரு மேல்பூச்சும் இல்லாத மனதின் நேரடி ஆசைகளும், யாரைப் பற்றியும் கவலைப்படாத செயல்பாடுகளும் என்று சொல்லலாம். பசி, தாகம், உறக்கம், மோகம் போன்ற உணர்வுகளை (basic biological reflexes), எந்தவொரு மாற்றமும் இல்லாமல், அப்படியே வெளிப்படுத்தும் நிலை தான் இந்த ID.

Ego எனும் தன்முனைப்பு!

அந்தக் குழந்தை வளர்ந்துவிடுகிறது. அந்த காட்டுவாசி இப்போது நாகரிகம் அடைந்திருக்கிறான். '’யாரோ வந்திருக்கிறார்கள்… பசிக்கிறது என்று அம்மாவிடம் பிறகு சொல்லலாம்!’' என்று குழந்தை யோசிக்கிறது. இத்தனை பேர் ''இருக்கிறார்களே… என்ன நினைப்பார்கள்?'' என்று காட்டுவாசி நினைக்கிறான். இப்படி ஒரு குழந்தையோ, ஒரு மனிதனோ பிறரையும் கருத்தில் கொண்டு தனது உணர்வுகளை, விருப்புவெறுப்புகளை முறைப்படுத்துவது ஈகோ. ஒரு காட்டுவாசி மனிதனை கடமை, ஒழுக்கம், பொறுமை, வெற்றி என்று நெறிப்படுத்துவதுதான் இந்த ஈகோ எனும் தன்முனைப்பு.

Super Ego எனும் அதீத தன்முனைப்பு!

இந்த சூப்பர் ஈகோவால்தான் மனிதனின் நீதி, அறம், இறைநம்பிக்கை, மனசாட்சி எல்லாம் வருகின்றன. குழந்தைக்குப் பிடித்த சாக்லெட் ஒன்றை உட்கொண்ட பிறகு அடுத்ததையும் தானே உட்கொண்டால் தம்பிக்கு இல்லாமல் போய்விடுமே என்று எண்ணத் தோன்றுகிறது. அதையும் மீறி அந்த சாக்லெட்டை தானே தின்றுவிட்டால் தம்பியை நிமிர்ந்து பார்க்க மனசாட்சி தடுக்கிறது. காட்டுவாசிக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. கூடவே அவள் அடுத்தவன் மனைவி என்று மனது தடுக்கிறது. மீறி அவளைக் கைப்பற்றினால் பாவம் என்றும், 'நாளை இறைவனின் சந்நிதியில் இதற்கு என்ன பதில் சொல்லுவேன்?’ என்றும் தனது உந்துதலைத் தாண்டச் செய்கிறது. அதாவது, தான் செய்யும் செயலில் இருக்கும் நீதிநெறிகளை அலசிப் பார்த்து, பாதகங்களை ஆராய்ந்து, எல்லாவற்றிலும் நல்லதைத் தேடும் அதீத நிலைதான் சூப்பர் ஈகோ.

கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதர்களும் அறம் என்று அடுத்தவருக்கு கெடுதல் செய்யாமல் தாண்டுவது இங்கே தான்!

குஷி

மனித மனம் என்பது, ஐடி எனும் காட்டுவாசி, ஈகோ எனும் நாகரிக மனது, சூப்பர் ஈகோ எனும் அறம் மற்றும் இறைநம்பிக்கை ஆகிய மூன்றின் கலவையாகும் என்கிறார் ஃபிராய்ட். மனிதன் வாழ இந்த மூன்றுமே சரிவிகிதத்தில் வேண்டும் என்றாலும், இவற்றுள் எது வலுவடைகிறதோ அதைப் பொறுத்தே அவன் குணமும் அமைகிறது.

எது எப்படியோ… இனிமேல் யாராவது "உங்களுக்கு ஈகோ அதிகம்" என்று பழித்தால் இறங்கிநின்று சண்டை போடாமல், புன்னகையுடன் கடந்து செல்லுங்கள். உங்களது சூப்பர் ஈகோ உங்களை மகிழ்விக்கும்!



source https://www.vikatan.com/health/healthy/sigmund-freuds-theory-on-id-ego-and-super-ego

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக