Ad

செவ்வாய், 4 மே, 2021

புதுச்சேரி: அதிர வைக்கும் கொரோனா மரணங்கள்! - இடைவிடாமல் எரியும் சடலங்கள்

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை புதுச்சேரி மாநிலத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது. இரண்டாம் அலையில் தொடக்கம் முதலே தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு ஆயிரத்தை தாண்டிச் சென்றது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய புதுச்சேரி அரசு, இறுதி வாரத்தில் அத்தியாவசிய கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளையும் மூடும்படி உத்தரவிட்டது. அடுத்தடுத்த தினங்களில் நாடு முழுவதும் தொற்றின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த தீவிர ஆலோசனையில் இருக்கின்றன மத்திய, மாநில அரசுகள்.

புதுச்சேரி மயானம்

புதுச்சேரி அரசு அறிவித்திருந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மே மாதம் 3-ம் தேதியுடன் முடிவடைந்தது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தையடுத்து, மே மாதம் 10-ம் தேதிவரை தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆனாலும் தேவையின்றி வெளியே உலாவரும் மக்களின் அலட்சியத்தால் தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது அரசு.

அதேபோல ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஆய்வின்போது செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை, “சாலைகளில் மக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அத்தியாவசியக் கடைகள் திறந்திருக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. சலுகைகளை மக்கள் தவறாகப் பயன்படுத்தினால் முழுமையான ஊரடங்கிற்கு செல்லும் நிலை ஏற்படும்” என்று எச்சரித்திருக்கிறார். ஆனாலும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி முதலாம் அலையையும் சேர்ந்து இதுவரை 65,117 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல தொற்றின் காரணமாக 883 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், நேற்று முன் தினம் மட்டும் 1,138 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதில் 17 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

அதேபோல நேற்று (மே-4) ஒரே நாளில் 1,819 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதுடன், 18 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது சுகாதாரத்துறை. இந்நிலையில் நாள்தோறும் அதிகரிக்கும் மரணங்களின் எண்ணிக்கையால் வட மாநிலங்களுக்கு நிகராக எரிந்து கொண்டிருக்கின்றன புதுச்சேரி மயானங்கள்.

Also Read: புதுச்சேரி: `கொரோனா 2-வது அலை இளைஞர்களை அதிகமாகத் தாக்குகிறது!’ - துணைநிலை ஆளுநர் தமிழிசை

மே 5-ம் தேதியான நேற்று கருவடிக்குப்பம் இடுகாட்டில் மட்டும் 28 சடலங்கள் எரிக்கப்பட்டன. அதில் 23 சடலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா உயிரிழப்புகளால் பீதியில் உறைந்திருக்கின்றனர் புதுச்சேரி மக்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/due-to-corona-corpses-are-burning-incessantly-in-puducherry-cemeteries

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக