Ad

திங்கள், 24 மே, 2021

மதுரை: ஆம்புலன்ஸ் தாமதம்.. சரக்கு வாகனத்தில் கொண்டுச் செல்லப்பட்ட நோயாளி பலி! -அதிர்ச்சி சம்பவம்

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வருகிறார்கள்.

கொரோனா பரிசோதனை

அரசு மருத்துவமனைகளில் அனுமதி அளிப்பதும், படுக்கைகள் கிடைப்பதிலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வராததால் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட கொரோனா அறிகுறி கொண்ட நோயாளி மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டியை சேர்ந்த கூலிதொழிலாளியான பரணிமுத்து என்ற 31 இளைஞருக்கு கடுமையான வயிற்றுவலி, காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சோதனை செய்து, அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் வீட்டிலயே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கூறியுள்ளனர்.

மதுரை அரசு கொரோனா மருத்துவமனை

இந்நிலையில் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு வீட்டில் மயங்கிய நிலையில் விழுந்துள்ளார். உடனே அவரை முடுவார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை மீண்டும் பரிசோதனை செய்தவர்கள், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனால் பதற்றமான அவர் உறவினர்கள், மதுரை அரசு கொரோனா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அரசு ஆம்புலன்ஸுக்கு போன் செய்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்கான எந்த பதிலும் வரவில்லை. நேரம் ஆக ஆக பரணிமுத்துவின் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது.

இதற்கு மேல் காத்திருக்க முடியாது என முடிவுக்கு வந்த உறவினர்கள், அங்கு நின்றுகொண்டிருந்த திறந்த வகையிலான சரக்கு ஏற்றும் வாகனத்தில் பரணிமுத்துவை ஏற்றினார்கள்.

திறந்த சரக்கு வாகனத்தில்

வாகனத்தில் மயக்க நிலையில் 30 கிலோமீட்டர் தூரம் எந்தவொரு பாதுகாப்புமில்லாமல் வெயிலில் காய்ந்தபடி மதுரை அரசு கொரோனா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். இதில் கொடுமையாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருக்கு கொரோனா பரிசோதனை முடிவு வெளிவருவதற்குள் உயிரிழந்துள்ளார். இதை பார்த்து உறவினர்கள் கதறினார்கள். ஆம்புலன்ஸ் மட்டும் உடனே வந்திருந்தால் அதில் முதலுதவி வசதிகள் மூலம் பரணிமுத்து பிழைத்திருப்பார் என்று உறவினர்கள் ஆவேசப்படுகிறார்கள்

ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறையுடன் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையும் மதுரை மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.



source https://www.vikatan.com/news/tamilnadu/ambulance-late-corona-symptoms-patient-death-in-madurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக