Ad

திங்கள், 24 மே, 2021

நன்மைகள் அருளும் நரசிம்ம ஜயந்தி... வழிபாடு செய்வது எப்படி?

மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் ஒரு கணத்தில் நிகழ்ந்ததும் உக்கிரமானதும் நரசிம்ம அவதாரம். ஆனால் அதுதான் கருணை மிகுந்த அவதாரம் என்கிறார்கள் ஞானிகள். பிரகலாதனுக்குப் பல்வேறு துன்பங்களைத் தந்தான் அவன் தந்தையான இரண்ய கசுபு. அத்துன்பங்களில் எல்லாம் உடன் இருந்து அவனைக் காத்துவந்தார் பகவான் விஷ்ணு. ஒரு கட்டத்தில் தந்தைக்கும் மகனுக்கும் கருத்து யுத்தம் ஏற்பட்டது. ‘பகவான் எங்கிருக்கிறான்?’ என்று கேட்டான் இரண்ய கசுபு. பிரகலாதனோ ‘இறைவன் இந்தப் பிரபஞ்ச வடிவானவன். தூணிலும் துரும்பிலும் நிறைந்திருப்பவன்’ என்று பதில் சொல்கிறான்.

ஏதேனும் ஒரு தூணை அல்லது ஒரு துகளைக் காட்டி இதில் பகவான் விஷ்ணு இருக்கிறானா என்று அசுரன் கேட்டால் அதற்கு பிரகலாதனும் ‘ஆம்’ என்று சொல்லிவிடுவான் என்பதை பகவான் அறிவார். அதனால் இந்த உலகின் அனைத்துத் துகள்களிலும் அந்தக் கணத்தில் பிரசன்னமாகியிருந்தார் என்கின்றன ஞான நூல்கள்.

நரசிம்மர் தரிசனம்

இரண்யனோ ஒரு தூணைக்காட்டி,‘இந்தத் தூணில் உன் ஹரி இருக்கிறானா...’ என்று கேட்டான். பிரகலாதனும் ‘ஆம்’ என்று சொல்ல இரண்யன் அந்தத் தூணை உடைக்க முயன்றான். அப்போது தூணிலிருந்து பகவான் விஷ்ணு நரசிம்மமாய் வெளிப்பட்டு அவனை வதம் செய்தார். இவ்வாறு பக்தனின் வாக்கைப் பரிபாலனம் செய்வதற்காக பகவான் விஷ்ணு புரிந்த அவதாரம் நரசிம்ம அவதாரம் என்பதால் இந்த அவதாரத்தை எண்ணி வணங்கினால் அந்தக் கணத்தில் பகை விலகும் என்பது நம்பிக்கை.

மேலும், இதில் மறைபொருள் ஒன்று உண்டு என்பர். அதாவது வென்றது நரசிம்மரின் வலிமை என்பதை விட தோற்றது இரண்யன் அல்லது அதர்மம் செய்பவனின் கருத்து என்பது மிகவும் பொறுந்தும் என்பார்கள். நம் வாழ்விலும் நாம் நல்ல கருத்துகளை உறுதியாக நம்புவோம் என்றால் அதனால் பிரகலாதனுக்கு ஏற்பட்டதைப்போலப் பல துன்பங்கள் நமக்கு ஏற்படலாம். ஆனால் முடிவில் இறைவனின் அருளால் நன்மையான கருத்துகளே வெற்றிபெறும் என்பதை விளக்கும் அவதாரமாகவே நரசிம்ம ஜயந்தி விளங்குகிறது.

யானைமலை யோக நரசிம்மர்

ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை வழிபட உகந்த நாள் நரசிம்ம ஜயந்தி. வைகாசி மாதம் வரும் சுக்லபட்ச சதுர்த்தசி மற்றும் சுவாதி நட்சத்திரம் இணைந்த நாளே நரசிம்ம ஜயந்தியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சுவாதி நட்சத்திரம் நேற்று அமைந்தது. சதுர்த்தசி திதி இன்று அமைகிறது. எனவே சிலர் நேற்று மாலை முதலே நரசிம்ம ஜயந்தி வழிபாடு செய்துவருகிறார்கள். பலர் இன்றே நரசிம்ம ஜயந்தி வழிபாடுகள் செய்கிறார்கள்.

நரசிம்ம ஜயந்தி அன்று காலை முதலே வழிபாடுகள் செய்வது நல்லது. சிலர் உபவாசம் இருந்து மாலையில் வழிபாடு செய்வார்கள். உபவாசம் இருக்க முடியாதவர்கள் திரவ உணவுகளை உட்கொண்டு பூஜைகள் செய்தும் வழிபடலாம்.

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்

ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்

ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்

ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

என்னும் ஸ்லோகத்தை நாள் முழுவதும் வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் சொல்வது நல்லது. மாலையில் நரசிம்ம சுவாமி அல்லது பெருமாள் படத்துக்கு துளசி சாத்தி, பானகம், நீர்மோர் ஆகியன நிவேதனம் செய்வது விசேஷம்.

நரசிம்மர்

இன்று செவ்வாய்க்கிழமை. நரசிம்ம சுவாமியை வணங்கினால் நவகிரகங்களில் செவ்வாயினால் உண்டாகும் தோஷங்கள் துன்பங்கள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். இந்த கொரோனா காலத்தில் நம் அனைவருக்கும் தேவை நல் ஆரோக்கியம். அந்த ஆரோக்கியத்தை நரசிம்ம சுவாமி அனைவருக்கும் அருள வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

இன்று நரசிம்ம பூஜை செய்ய உகந்த நேரம் : மாலை 4.07 மணி முதல் 6.41 மணிவரை



source https://www.vikatan.com/spiritual/gods/glory-of-narasimha-jayanthi-how-to-worship

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக