Ad

திங்கள், 24 மே, 2021

முழு ஊரடங்குக்காக ஒரு நாள் தளர்வு... மு.க.ஸ்டாலின் அரசின் முதல் சொதப்பலா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே 10-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு அறிவித்தது. ஆனாலும், தினசரி புதிய தொற்று எண்ணிக்கை அதிகரித்துவந்த காரணத்தால், மே 24-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்துவது என்று தமிழக அரசு முடிவுசெய்தது. அதன் ஒரு பகுதியாக, வெளியூர்களுக்கு செல்ல விரும்புவோருக்காக இரண்டு நாள்கள் பேருந்துகளை இயக்குவது என்றும் அரசு முடிவுசெய்தது.

காசிமேடு மீன் சந்தையில் மக்கள் கூட்டம்

தமிழக அரசு அறிவித்தபடி, மே 22, மே 23 ஆகிய இரு தினங்களுக்கு வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒரு வார காலம் முழு ஊரடங்கு என்பதால் மே 23-ம் தேதியன்று அனைத்துக் கடைகளும் திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், மே 22-ம் தேதி பிற்பகலில், ``இன்று இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கும்” என்ற அறிவிப்பை தமிழக அரசு திடீரென அறிவித்தது. அப்போது முதல் மளிகைக் கடைகளிலும் காய்கறிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.

Also Read: Vikatan Poll: கடந்த சனி, ஞாயிறு கொடுக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு குறித்து உங்கள் கருத்து?!

தலைநகர் சென்னையில் கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் சனிக்கிழமை இரவு காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மறுநாள் காலையில் 6 மணிக்கு சில்லரை விற்பனை கடைகளில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை செய்வதற்காக நள்ளிரவில் சில்லரை வியாபாரிகள் கோயம்பேட்டில் திரண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை (மே 23) காலை 6 மணிக்கு மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் என அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டன. சலூன்களும் திறக்கப்பட்டன. மீன் கடைகள் உள்ளிட்ட இறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டன. காலை முதலே தமிழகம் முழுவதும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் நீண்ட வரிசையில் நின்று உணவுப்பொருள்களைப் பலர் வாங்கினர் என்றாலும், பெரும்பாலான இடங்களில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் திரண்டனர். பெருந்தொற்றுப் பரவல் குறித்த அச்சத்தை அது ஏற்படுத்தியது.

ஊரடங்கில் போக்குவரத்து

காய்கறிகளின் விலை தாறுமாறாக அதிகரித்ததைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கோயம்பேடு காய்கறி சந்தையில் குறைந்த அளவுக்கு காய்கறிகள் இருப்பு இருந்ததாலும், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் காய்கறி வாங்க வந்ததாலும் விலை உயர்ந்ததாக காரணம் சொல்லப்பட்டது. கோழிக்கறி, ஆட்டுக்கறி விலையும் வழக்கத்தைவிட கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை கூடுதலாக விற்கப்பட்டன. வழக்கமாக ரூ.800-க்கு விற்கப்படும் ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.900 முதல் ரூ.1,000 வரை விற்கப்பட்டது. விலைகள் அதிகரித்தபோதிலும் புலம்பிக்கொண்டே மக்கள் உணவுப்பொருள்களை வாங்கிச்சென்றனர்.

Also Read: முழு ஊரடங்கு, முழு குழப்பம், தெளிவில்லாத அறிக்கை, திண்டாடும் விவசாயிகள்... தேங்கும் விளைபொருள்கள்!

காய்கறிகள், பழங்கள், இறைச்சி விலைகள் கடுமையாக உயர்ந்தது குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன. ஊடகங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டன. அதையடுத்து, விலைகளை உயர்த்தி விற்பனை செய்தால் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும், விலைகள் குறையவில்லை.

மீன் வியாபாரம்

இந்த நிலையில், ஒரு வார காலம் முழு ஊரடங்கு என்கிற முடிவை சரியாகத் திட்டமிடாமல் தமிழக அரசு எடுத்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து, தலைமைச்செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நியமனம் ஆகியவை தொடங்கி, ஸ்டாலின் அரசு எடுத்துவரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பாராட்டிக்கொண்டிருந்த பலரும்கூட, முழு ஊரடங்கு தொடர்பாக தமிழக அரசு எடுத்த முடிவை சமூக ஊடகங்களில் விமர்சிக்கத் தொடங்கினர். எதிர்க் கட்சியினரும் ஸ்டாலின் அரசை விமர்சித்தனர்.

Also Read: 'திராவிட வெறுப்பு கருத்துகளுடன் பாடப் புத்தகங்கள்... '- தோண்டியெடுக்கும் ஸ்டாலின் அரசு!

``தமிழக வரலாற்றிலேயே மக்களைத் தவிக்கவிட்டு தடுமாற்றமடையச் செய்த காய்கறிகள் விலையேற்றம்” என்று பா.ஜ.க மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரிடம் பேசினோம். ``பொறுப்பற்ற தமிழக அரசின் தவறான முடிவால் உணவுப்பொருள்களை வாங்குவதற்கு மக்கள் அலைமோதிய நிலை ஏற்பட்டது. காய்கறிகள் விலை தாறுமாறாக ஏறியது. தமிழக அரசின் திட்டமிடாத ஊரடங்கால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

நாராயணன் திருப்பதி

மேலும், தமிழக அரசு ஊரடங்கை தவறாகக் கையாண்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கான ஒரே தீர்வு தடுப்பூசி மட்டும்தான். ஆனால், ஊரடங்கை காரணம் காட்டி தடுப்பூசி செலுத்துவதைத் தள்ளிப்போடுவது மிகவும் தவறான செயல். முழு ஊரடங்கை அமல்படுத்தியதால் காவல்துறை கெடுபிடி காரணமாக, கொரோனா பரிசோதனைக்கு செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கோவையில் கொடீசியா ஏற்பாடு செய்த தடுப்பூசி முகாம்களுக்கு ஊரடங்கைக் காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்தது கண்டிக்கத்தது” என்று கொந்தளித்தார்.

Also Read: மிஸ்டர் கழுகு: அவப்பெயரை தேடித்தரும் ‘அண்ணா நகர்’ கும்பல்! - எச்சரிக்கையாக இருப்பாரா ஸ்டாலின்?

இந்த விவகாரம் குறித்து தி.மு.க-வின் செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``தி.மு.க அரசு அமைந்த உடனேயே கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் அனைத்தும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த ஓராண்டு காலத்தில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு, தளர்வுகளற்ற ஊரடங்கு என அனைத்துக்கும் மக்கள் பழக்கப்பட்டுவிட்டனர். ஆகவேதான், முதலில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கும் பிறகு தளர்வுகளற்ற ஊரடங்கையும் தமிழக அரசு அறிவித்தது.

வெளியூர் பேருந்துகளை இயக்கியதில் எந்தத் தவறும் கிடையாது. முக்கியமான காரணங்களுக்காக வெளியூர் செல்வதற்கு அனுமதி கிடைக்காமல் இருந்தவர்கள், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்டுத்தி ஊர்களுக்கு போகட்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதிலும், சமூக இடைவெளி உள்பட அனைத்து விதிமுறைகளும் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

ஊரடங்கு நேரத்தில் வீதிகளில் வண்டிகளில் வந்து காய்கறிகள், பழங்கள் விற்கப்படுவதற்கு எந்தத் தடையும் இருக்காது. இதைக் கடந்த ஓராண்டு காலமாகப் பார்த்திருக்கிறோம். அது மக்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆகவேதான், தளர்வுகளற்ற ஊரடங்கு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, உங்கள் பகுதிகளுக்கு காய்கறிகளும் மளிகைப்பொருள்களும் வாகனங்கள் மூலம் கொண்டுவந்து விற்கப்படும் என்ற விபரத்தைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டனர். அது ஒரு தகவல் இடைவெளிதான். அதைப் புரிந்துகொள்ளாமல் மக்கள் கடைகளில் திரண்டிருக்கிறார்கள். அந்த ஓர் அம்சத்தை அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தால், கூட்டத்தைத் தவிர்த்திருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

Also Read: 'ஜக்கி வாசுதேவுக்காக கொந்தளிக்கும் ஹெச்.ராஜா' - பின்னணி என்ன?

மற்றபடி, சரியான திட்டமிடல் இல்லை என்று அரசின் மீது எதிர்க் கட்சியைச் சேர்ந்த சிலர் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. ஏனென்றால், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் காய்கறிகளையும் பழங்களையும் மளிகைப்பொருள்களையும் குடியிருப்புப் பகுதிகளுக்கே கொண்டுசென்று விற்பனை செய்வதெல்லாம் திட்டமிடல் இல்லாமலா? காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் கொண்டுவரும் வாகனம் பற்றி அறிந்துகொள்ள தொடர்பு எண்களும் தரப்பட்டுள்ளன. எனவே, தி.மு.க அரசின் நிர்வாகம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்றார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

``அரசுக்கு கெட்டபெயர் ஏற்படும் என்கிற தயக்கத்தால், ஊரடங்கு விதிகளை மீறி தேவையின்றி சாலைகளில் நடமாடுபவர்களிடம் கடுமையான நடந்துகொள்ள வேண்டாம் என்று காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் தயங்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?” என்ற கேள்வியை முன்வைத்தோம்.

அதற்கு,``ஊரடங்கு விதிகளை மீறியதாக மே 22-ம் தேதி மட்டும் தமிழகத்தில் 3,980 வழக்குகளை காவல்துறை பதிவுசெய்துள்ளது. 3,446 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊரடங்கை மீறும் பொதுமக்களிடம் காவல்துறையினர் கடினமாக நடந்துகொள்வது தேவையில்லைதான். ஆனாலும், காவல்துறையினர் மென்மையாக நடந்துகொள்வதை தங்களுக்கு சாதமாக எடுத்துக்கொண்டு அத்துமீறலில் ஈடுபடுபவர்களிடம் நிச்சயமாக இனிமேல் காவல்துறையினர் கறார் காட்டுவார்கள்” என்றார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.



source https://www.vikatan.com/government-and-politics/news/is-restriction-free-lockdown-on-may-23-may-2021-a-failure-for-dmk-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக