Ad

திங்கள், 24 மே, 2021

நாளைய சந்திர கிரகணத்தில் இவையெல்லாம் கடைபிடிக்க வேண்டியதில்லை!

பிலவ வருடத்தின் முதல் சந்திர கிரகணம் நாளை 26.5.21 அன்று புதன்கிழமை நிகழ இருக்கிறது. கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் அமெரிக்கப் பகுதிகளில் இந்த கிரகணத்தைக் காணமுடியும். பகல் 2.17க்குத் தொடங்கி இரவு 7.19 வரை நீடிக்கும் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது.

ஜோதிட சாஸ்திரத்தின்படி சந்திரகிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகியன மிகவும் முக்கியமாகக் கருதப்படுகின்றன. புராணத்தின் படி ராகு கேது ஆகிய பாம்புகள் சந்திர சூர்யர்களை விழுங்குவதால் கிரகணங்கள் ஏற்படும் என்று சொல்வதுண்டு என்றாலும் ஜோதிட சாஸ்திரப்படி சந்திரன், கேது ஆகிய இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் வரும்போது பௌர்ணமி திதி வருமானால் அந்த நாளே சந்திரகிரகணம் எனப்படும். கேதுபகவான் தற்போது விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். நாளை சந்திரனும் விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்க இருக்கிறார். இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதேபோன்று சூரியனும் ராகுவும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும்போது ஏற்படும் அமாவாசை திதி நாளில் சூரியகிரகணம் ஏற்படும்.

முழுமையான சந்திர கிரகணம்

பொதுவாக கிரகண காலங்களில் வழிபாடுகள் செய்யப்படுவதில்லை. ஆலயங்கள் மூடப்பட்டிருக்கும். கிரகணங்கள் முடிந்த பின்பு புண்ணியாஜனம் முடித்து அதன்பிறகே ஆலயங்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்படும். அதேவேளையில் கிரகண காலம் என்பது மிகவும் புண்ணியமான காலமாகவும் கருதப்படும். அந்த வேளையில் செய்யும் மந்திர ஜபங்களும், தர்ப்பணம் முதலிய பித்ரு காரியங்களும், தானங்களும் மிகுந்த பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை. அதனால் கிரகண வேளையில் மந்திர ஜபம் செய்வது, தர்ப்பணம் செய்வது ஆகியவற்றைப் பலரும் மேற்கொள்வார்கள். கிரகணம் நிகழும் நட்சத்திரத்தின் அடிப்படையில் தோஷமடையும் நட்சத்திரங்களைக் குறிப்பிட்டு அந்த நட்சத்திரக்காரர்கள் உரிய பரிகாரம் செய்வதும் நடைபெறும்.

கிரகணத்தின்போது, சந்திரனும் சூரியனும் ஒரே நேர்க்கோட்டில் பூமியோடு 180 டிகிரியில் சஞ்சரித்திருக்கும். இந்த நிலையில், ஆன்மகாரகன் சூரியன் மற்றும் மனோகாரகன் சந்திரன் ஆகியோர் அதீத உணர்வு நிலையில் இருப்பார்கள். அந்தத் தருணத்தில் உடலையும் உள்ளத்தையும் வேறு எந்தப் பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது. இந்த நேரத்தில் அனைவரும் ஆன்ம சக்தி பெறக்கூடிய தியானத்தில் ஈடுபட்டால் ஆன்மா வலிமையடையும். மேலும், இந்த கிரகண காலத்தில் சந்திரனின் ஈர்ப்புத் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். அதனால் முன்பே சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையென்றால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும் என்பதும் நம்பிக்கை.

சுரேஷ் சாஸ்திரிகள்

இதேபோன்று நாளை நிகழ இருக்கும் சந்திர கிரகணத்துக்குக் கடைப்பிடிக்க வேண்டிய அனுஷ்டானங்கள் எவை என்பது குறித்து நங்கநல்லூர் சுரேஷ் சாஸ்திரிகளிடம் கேட்டோம்.

"பொதுவாக கிரகண காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அனுஷ்டானங்கள் குறித்து நம் சாஸ்திரங்கள் விரிவாகக் கூறியிருக்கின்றன. ஆனால் நாளை நிகழ இருக்கும் கிரகணத்துக்கு அவை பொறுந்தாது. ஏன், பிலவ ஆண்டில் நிகழும் எந்த கிரகணத்துக்கும் அனுஷ்டானங்கள் செய்யத் தேவையில்லை என்று பஞ்சாங்க வாக்கியம் கூறுகிறது. மேலும், இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் காணக்கூடியதில்லை. எனவே சாஸ்திர ரீதியாக இந்தச் சந்திர கிரகணத்துக்கு எந்த நியமங்களும் இல்லை. நாளை குரு பூர்ணிமா ஆகையால் அவர்வர் தங்களின் குருமார்களை மனதார தியானித்து வணங்கி வந்தாலே போதும் அனைத்து நன்மைகளும் ஏற்படும்” என்றார்.



source https://www.vikatan.com/spiritual/astrology/what-we-should-do-on-tomorrows-lunar-eclipse

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக