தங்களின் புதிய 'தனியுரிமைக் கொள்கை' கடந்த மே 15-ல் இருந்து அமலுக்கு வரும் எனத் தெரிவித்திருந்தது வாட்ஸ்அப். அதன்படி தற்போது அது அமலிலும் இருக்கிறது. புதிய தனியுரிமைக் கொள்கைகளைப் பயனர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அவர்களது வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படும் என்று சொல்லப்பட்டது, பின் அப்படி எல்லாம் ஆகாது என வாட்ஸ்அப் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய தனியுரிமைக் கொள்கைகளைப் பயனர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்து வாட்ஸ்அப் பின்வாங்கவில்லை.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு, புதிய தனியுரிமைக் கொள்கைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு வாட்ஸ்அப்பிற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
"வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கைகள் பயனர்களின் தனியுரிமை, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பயனர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காதது போல் இருக்கிறது. மேலும், இந்தக் கடிதத்திற்கு ஏழு நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சரியான விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில் வாட்ஸ்அப்பின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், புதிய தனியுரிமைக் கொள்கைகளை இந்தியாவில் அமல்படுத்துகிறோம் என வாட்ஸ்அப் அறிவித்ததில் இருந்தே, வாட்ஸ்அப்பின் மீது மற்றொரு குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது. ஐரோப்பாவில் வாட்ஸ்அப் பயனர்கள் தனியுரிமைக் கொள்கைகளை வேண்டாம் என்று மறுப்பதற்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் கண்டிப்பாக புதிய தனியுரிமைக் கொள்கைகளைப் பயனர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று வாட்ஸ்அப் கட்டாயப்படுத்துகிறது.
ஐரோப்பாவில் General Data Protection Regulation-ன் கீழ் பயனர்கள் தங்களுக்கு புதிய தனியுரிமைக் கொள்கைகள் வேண்டாம் என்று மறுப்பதற்கான வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது வாட்ஸ்அப். இதனையும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டி, இரு நாட்டுப் பயனர்களுக்கும் இடையில் பாகுபாடு காட்டுகிறீர்களா எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறது.
இதற்கு முன்னர் மே 15-ற்கு பிறகு புதிய தனியுரிமைக் கொள்கைகளை அமல்படுத்த மாட்டோம் என வாட்ஸ்அப் தெரிவித்திருந்தது. தற்போது அனுப்பியிருக்கும் கடிதத்தில் அதனையும் சுட்டிக் காட்டி தள்ளிவைப்பது தீர்வாகாது எனக் குறிப்பிட்டிருக்கிறது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம். வாட்ஸ்அப்புக்கு புதிய தனியுரிமைக் கொள்கைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளக்கூறி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை கடிதம் அனுப்புவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் கடந்த ஜனவரி மாதம் புதிய தனியுரிமைத் கொள்கைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளக் கூறி கடிதம் எழுதியிருந்தது. ஆனால், அதற்கும் வாட்ஸ்அப்பின் தரப்பில் இருந்து முறையான பதில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/technology/tech-news/central-urges-whatsapp-to-withdraw-its-new-privacy-policy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக