மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆட்சி அமைக்க 148 தொகுதிகளைக் கைப்பற்றினால் போதும் என்ற நிலையில், மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளைக் கைப்பற்றித் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவிருக்கிறது. கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும், கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு 1,737 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். மம்தா பானர்ஜியின் வலதுகரமாக இருந்த சுவேந்து அதிகாரி பாஜக பக்கம் சென்று தற்போது மம்தாவை வீழ்த்தியிருக்கிறார். நந்திகிராம் சுவேந்து அதிகாரியின் கோட்டை என்பதால் மம்தாவால் அங்கு வெற்றிபெற முடியவில்லை.
இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் மம்தா தோற்றதால் விரக்தியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு பதிலடியாகவும், திரிணாமூல் காங்கிரஸ் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றி விட்டது என்ற விரக்தியிலும் பாஜக தொண்டர்கள் மிகப்பெரிய அளவில் வன்முறையை அரங்கேற்றியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் பல இடங்களில் வெடித்துள்ள மோதலால் கடந்த 36 மணி நேரத்தில் வன்முறை காரணமாக 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மேற்கு வங்க போலீஸார் தெரிவிக்கின்றனர். அதில் ஒன்பது பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்று திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மாற்றுக் கட்சியினர் இருவர் வன்முறையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. நிலவும் பதற்றமான சூழல் காரணமாக ஆயிரக்கணக்கான போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினரிடையேயான வன்முறை தொடர்பாக இணையத்தில் வெளியாகிக்கொண்டிருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் மேற்கு வங்க அரசியலின் பதற்றநிலையை மேலும் அதிகரித்துவருகின்றன. இதற்கிடையே வன்முறையைப் பயன்படுத்தி பாஜக-வினர் சிலர் சமூக ஊடங்ககளில், தங்கள் கட்சியின் பெண் தொண்டர்கள் இருவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு அதிக அளவில் பகிர்ந்துவருகின்றனர். அதன் காரணமாக, பாஜக-வினர் கடும் கொந்தளிப்பில் காணப்படுகின்றனர். ஆனால், மேற்கு வங்க போலீஸார் பாஜக பெண் தொண்டர்கள் அப்படி யாரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையில் வன்முறையில் ஒன்பது பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, பாரதிய ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்ற, இன்று தேசியளவில் தர்ணாவில் பாஜக ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். வன்முறையில் கொல்லப்பட்ட பாஜக-வினரின் இல்லங்களுக்குச் சென்று உறவினர்களிடம் ஆறுதல் சொன்னபோது நட்டா இதை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மாநிலத்தில் வன்முறையை நிறுத்துவது தொடர்பாக மேற்கு வங்க கவர்னர் ஜெகதீப் தங்கர், டிஜிபி மற்றும் மாநில உள்துறை செயலாளருடன் கடந்த திங்கள்கிழமை முதல் தொடர்ந்து ஆலோசனை நடத்திவருகிறார். இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கவர்னர், "மாநிலத்தில் நிலைமையைச் சீராக்கத் தொடர்ந்து முயன்றுவருகிறோம். சம்பவம் தொடர்பாக மாநில முதல்வருடன் ராஜ் பவனில் ஒரு மணி நேரம் பேசினேன். பிரதமர் நரேந்திர மோடி வன்முறை தொடர்பாகத் தனது வருத்தத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டார்" என்று பதிவிட்டுள்ளார்.
ஒன்பது பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டிருப்பது குறித்தும், பாஜக அலுவலகங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருப்பது குறித்தும் விளக்கமளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யும் அக்கட்சியின் மாநிலச் செய்தி தொடர்பாளருமான டெரெக் ஓ பிரையன், "மேற்கு வங்கத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கும் வன்முறைச் சம்பவங்கள் அனைத்தும் பாஜக-வின் உட்கட்சி மோதல்களே... மேலும், தேர்தல் முடிவுகளை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் வெறுப்பில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்" என்று கூறியிருக்கிறார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவியேற்றார். மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அப்போது ஆளுநர், `மாநிலத்தில் நிலவும் பதற்ற சூழலை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்,
source https://www.vikatan.com/government-and-politics/politics/14-persons-died-in-west-bengal-during-the-violence
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக