Ad

புதன், 5 மே, 2021

’ஆட்டோகிராஃப்’ கோமகன் மரணம்... கொரோனா தொற்றால் உயிர் பிரிந்தது!

இயக்குநர் சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் இடம்பெற்ற ’'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!’' பாடலில் ‘'மனிதா உன் மனதைக் கீறி விதை போடு உரமாகும்’' என்கிற வரிகளைப் பாடி சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கோமகன். பிறவியிலேயே விழித்திறன் சவால்கொண்ட கோமகன் கொரோனா தொற்று காரணமாக இன்று நள்ளிரவு 1 மணியளவில் மரணமடைந்தார்.

கோமகனின் பூர்வீகம் நாகர்கோவில். ஆரம்பத்தில் சென்னை மாதவரத்தில் இயங்கும் தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் வேலைசெய்துவந்தார். அந்த மையத்தில் மொபிலிட்டி இன்ஸ்ட்ரக்டராக, (விழித்திறன் சவால் கொண்டவர்களுக்கு ஸ்டிக் வைத்து நடக்கப் பயிற்சி தருபவர்) பணிபுரிந்த அனிதா என்பவருடன் காதல் மலர, இருவரும் வீட்டின் எதிர்ப்பையும் மீறித் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மோனஸ், மோவின் என இரு மகன்கள் உள்ளனர்.

சிறு வயது முதலே நன்றாகப் பாடும் திறமை பெற்றிருந்த கோமகன் முழுவதும் விழித்திறன் சவால் கொண்டவர்களை உள்ளடக்கிய ‘கோமகனின் ராகப்ரியா’ எனும் இசைக்குழுவையும் நடத்தி வந்தார்.

மு.க.ஸ்டாலினுடன் கோமகன்

சில இடங்களில் இந்த இசைக்குழு பாடுவதைப் பார்த்த இயக்குநர் சேரன் தன்னுடைய ‘ஆட்டோகிராஃப்' படத்தில் கோமகனுக்கு வாய்ப்பளித்தார்.

‘ஆட்டோகிராஃப்’ படத்துக்குப் பிறகு ஓரிரு படங்களுக்கு இசையமைக்கவும் செய்த கோமகனுக்கு, சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் அரசு வேலை கிடைத்தது.

அந்தப் பணியையும் பார்த்துக் கொண்டு அவ்வப்போது இசைக் கச்சேரி, சில படங்கள் என இயங்கிக் கொண்டிருந்த கோமகன் கொரோனா முதல் அலை முழுக்க வீட்டிலிருந்தே பணி புரிந்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கிய போது விருது பெற்றவர்களில் கோமகனும் ஒருவர். கோவிட் முதல் அலை முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் மறுபடியும் பணிக்குச் சென்றிருக்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன் கோவிட் அறிகுறி தெரிய தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனால் சிகிச்சையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் ஐ.சி.எஃப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் ஆக்ஸிஜன் அளவு தொடர்ந்து குறைந்து வந்ததால் வென்ட்டிலேட்டரிலேயே இருந்தவர் இன்று நள்ளிரவு 1 மணியளவில் மரணமடைந்தார்.

விழித்திறன் சவால் கொண்டிருந்தாலும், வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடாமல் தன் கடும் உழைப்பால் உயர்ந்து, எளிய மனிதர்களுக்கு நம்பிக்கை அளித்த கோமகனின் இறப்புச்செய்தி பலரையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.



source https://cinema.vikatan.com/tamil-cinema/visually-challenged-autograph-movie-singer-komagan-died-due-to-corona

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக