Ad

வியாழன், 27 மே, 2021

தெரு நாய்களுக்கு உணவு, மாடுகளுக்குத் தண்ணீர்; ஊரடங்கில் தீயணைப்புத் துறையினரின் சபாஷ் முயற்சி!

கொரோனா கால ஊரடங்கு அனைவரையும் வீட்டைவிட்டு வெளியே வராதபடி முடக்கிப் போட்டிருக்கிறது. ஆனால், தெருக்களே வாழ்விடமாக இருந்து வரும் நாய்கள், நகரப் பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு இந்த ஊரடங்கு கடுமையான உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. சில தன்னார்வ அமைப்புகள் இந்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், அரசுத் துறையான தீயணைப்புத் துறையினர் தெரு நாய்களுக்கு உணவிடும் பணியைச் செய்து வருவது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

நாய்களுக்கு உணவு வைக்கும் பணியில்

இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் டி.ஜி.பி சைலேந்திர பாபு பேசியபோது, ``தீயணைப்புத் துறையினர் கடந்த ஆண்டு ஊரடங்கின்போதே தெருவோரத்தில் வசித்த மக்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவை அளித்தனர். இந்த முறை உணவு இல்லாமல் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால், இப்போது போட்டிருக்கும் ஊரடங்கினால் தெரு நாய்கள், மாடுகள் ஆகியவை உணவின்றி தவித்து வருகின்றன. இவற்றுக்கு நம்மால் ஆன உதவியை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தீயணைப்புத் துறையினருக்கும் உணவின்றி வாடும் விலங்குகளுக்கு உணவளிக்க ஊக்கப்படுத்தி வருகிறோம். அதனால் தமிழ்நாடு முழுவதுமுள்ள தீயணைப்புத் துறை வீரர்கள் இந்தப் பணியில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து வரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் பேசியபோது, ``சென்னை போன்ற மாநகரங்களில் சிட்டிக்குள் தெருநாய்கள் அதிகம் இருக்கின்றன. சென்னையைச் சுற்றியுள்ள ஆவடி, செங்குன்றம் போன்ற பகுதிகளில் மாடுகள் நிறைய இருக்கின்றன. தீயணைப்புத் துறையினருக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வேலை. அவர்களுக்காகச் சமைக்கப்படும் உணவைத்தான் தெருநாய்களுக்குக் கொடுக்கின்றனர். கடந்த கொரோனா ஊரடங்கின்போது எங்கயோ ஒரு தீயணைப்பு வீரர் தெருநாய்களுக்கு உணவளித்தார். அந்தப் பணி பெரிய அளவில் வளர்ந்து இன்று தமிழகம் முழுக்க துறை ரீதியாக மேற்கொள்ள உதவியாக இருக்கிறது.

மாடுகளுக்குத் தண்ணீர்

புயல், வெள்ள காலங்களில பல கால்நடைகளை மீட்டு உணவளித்திருக்கிறோம். இந்த அனுபவம் இப்போது கைக்கொடுக்கிறது. இந்த உணவுகளைத் தீயணைப்பு நிலையங்களுக்கு அருகிலேயோ, அவை இருக்கும் இடங்களையோ தேடிக் கொண்டு போய் கொடுத்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள 343 தீயணைப்பு நிலையங்களிலும் உள்ள வீரர்கள் இந்தப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.

சென்னை அடுத்த தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வரும் தீயணைப்பு வீரர் கார்த்திக் பேசியபோது, ``எங்களுக்கு 24 மணி நேரப் பணி. பணியில் இருக்கும்போது எங்களுக்கு சமைக்கும் உணவோடு கூடுதலாகச் சமைத்து தெருநாய்களுக்குக் கொடுக்கிறோம். அதிகம் சோறுதான் சமைப்போம். அதைத்தான் உணவாக கொடுத்து வருகிறோம். எங்கள் தீயணைப்பு நிலையத்துக்கு அருகே உணவை தட்டில் போட்டு வைத்து விடுவோம். நாய்களே வந்து சாப்பிட்டுக்கும்.

காகங்களுக்கு உணவு

இல்லையென்றால் அவை கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு எடுத்துச் சென்று வைத்துவிட்டு வருவோம். அதேபோன்று மாடுகளுக்கு வாழைப்பழம், தர்பூசணி என்று கொடுப்போம். பக்கெட்டில் தண்ணீர் பிடித்து வைத்துவிடுவோம். அவை வந்து குடிச்சிட்டு போயிடும். கோடைக் காலங்களில் வழக்கமாக மாடுகளுக்கு தண்ணீர் வைப்போம். அது இப்போதும் தொடர்கிறது. இப்போது துறை ரீதியாகவும் எங்களை ஊக்கப்படுத்துவதால் இந்தப் பணிகளை ஆர்வத்தோடு செய்து வருகிறோம்” என்றார்.

விலங்குகள் நல ஆர்வலர் சாய் விக்னேஷ் பேசியபோது, ``ஏற்கெனவே எங்களால் இயன்ற அளவுக்கு தெருநாய்களுக்கு உதவியை செய்து வருகிறோம். இது சம்பந்தமாக தீயணைப்புத் துறை டி.ஜி.பி சைலேந்திர பாபுவிடமும் கோரிக்கை வைத்தோம். அவர் துறையினரை ஊக்குவித்து வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை இன்னும் பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

சாய்விக்னேஷ்

ஏனென்றால் தினந்தோறும் பல நாய்கள் உணவின்றியும் நோய்தாக்குதாலும் இறக்கின்றன. அவற்றையெல்லாம் காப்பாற்றி மீட்க வேண்டும். அதேபோன்று வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டுக்கு முன்னால் இதுபோன்று உணவு, தண்ணீர் வைத்தால் இந்த ஊரடங்கின்போது தெரு நாய்கள், மாடுகள், பூனைகள் போன்றவற்றுக்கு உண்ண உணவு கிடைக்கும். இந்தப் பணியில் பொதுமக்களும் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/fire-and-rescue-dept-staffs-help-stray-animals-with-food-during-this-lockdown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக