Ad

வியாழன், 27 மே, 2021

லட்சத்தீவு மக்கள் கொந்தளிப்பு: காரணமாக இருக்கும் பிரபுல் கோடா படேல் - யார் இவர்?

கேரளாவுக்கு மேற்கே 200-300 கி.மீ தொலைவில் அரபிக்கடலில் அமைந்துள்ளது லட்சத்தீவு. 32 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கொண்ட லட்சத்தீவு, 36 தீவுகளாக அமைந்துள்ளது. சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்த லட்சத்தீவு, மாநிலங்கள் மறுசீரமைப்பின்போது யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது. இதன் தலைநகராக கவரத்தி இருக்கிறது. லட்சத்தீவின் மொத்த மக்கள்தொகை ஒரு லட்சத்துக்கும் குறைவு. இவர்களில் பெரும்பான்மையோர் மலையாளம் பேசும் முஸ்லிம்கள்.

லட்சத்தீவு மீன்பிடித்தொழில்

மீன்பிடித்தல்... தேங்காய் வணிகம்!

மாட்டிறைச்சிதான் இந்த மக்களின் பிரதான உணவு. மீன்பிடித்தல், மீன் பதப்படுத்துதல், மீன் ஏற்றுமதி ஆகியவை லட்சத்தீவு மக்களின் முக்கியத் தொழில். அங்கு தென்னைமரங்கள் அதிகமாக இருப்பதால் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் வணிகமும் பெரியளவில் மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுலா மூலம் வருவாய் கிடைக்கிறது. பங்கராம் தீவு தவிர லட்சத்தீவின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் மதுவுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இயற்கையான, எளிமையான வாழ்க்கையை அந்த மக்கள் வாழ்ந்துவருகிறார்கள்.

Also Read: `கேரளாவை நம்பியே பிழைப்பு; வெளிநாட்டுப் பயணிகள் வருகை!’ - கொரோனா சுவடே இல்லாமல் சாதித்த லட்சத்தீவு

கொந்தளிப்புக்கான காரணங்கள்!

இந்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியான லட்சத்தீவில் துணைநிலை ஆளுநர் கிடையாது. அங்கு Administrator என்ற பெயரில் தலைமை நிர்வாகி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். லட்சத்தீவை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்துவந்த தினேஷ் ஷர்மா கடந்த டிசம்பர் மாதம் காலமானதால் , குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபுல் கோடா படேல் என்பவர் லட்சத்தீவின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். இந்த நபர்தான் தற்போதைய களேபரத்துக்கு முழு முதல் காரணம். லட்சத்தீவு மக்களுக்கு எதிரான சட்டங்களை அவர் கொண்டுவருவதால்தான், குளிர்ந்த பூமியான லட்சத்தீவு இப்போது சூடாகிக்கிடக்கிறது.

லட்சத்தீவு கடற்கரை

நிலத்தை அபகரிக்க முடியும்!

பிரபுல் கோடா படேல் கொண்டுவந்திருக்கும் புதிய சட்டங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

LDAR (Lakshadweep Development Authority Regulations) எனப்படும் லட்சத்தீவு மேம்பாடு ஆணைய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, லட்சத்தீவில் வசிக்கிற யாரை வேண்டுமானாலும் எந்தக் காரணமும் இல்லாமல் நிலத்திலிருந்து வெளியேற்றவோ, மாற்று இடத்தில் வசிக்கவோ உத்தரவிட முடியும். தற்போது, லட்சத்தீவில் வெளியாட்கள் யாரும் நிலங்களை வாங்க முடியாது. ஆனால், வெளிநபர்கள் அங்கு நிலங்களை வாங்குவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது.

Also Read: மாட்டுக்கறிக்குத் தடை, மதுபானத்துக்கு அனுமதி... முஸ்லிம்கள் நிறைந்த லட்சத்தீவில் என்னதான் பிரச்னை?

காரணமின்றி கைது செய்யலாம்!

PASA (Lakdhadweep Anti-Social Activity Regulations) என்ற சமூக விரோத நடவடிக்கைகள் ஒழுங்கு சட்ட விதிகளின் கீழ் காரணம் எதுவும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் கைதுசெய்து ஓராண்டு சிறையில் அடைக்க முடியும். குற்றங்கள் நிகழாத பகுதியாக லட்சத்தீவு இருந்துவருகிறது. அங்கு எதற்காக இப்படியொரு சட்டம் என்று கேள்வி எழுப்புகிறார்கள் அந்த மக்கள்.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் ஆட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்கிற ஒரு சட்டவிதியையும் கொண்டுவருகிறார்கள்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சித் தடை!

லட்சத்தீவு கால்நடைப் பாதுகாப்பு விதிமுறைகள் (Lakshsadweep Animal Preservation Regulations) புதிதாகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. லட்சத்தீவு மக்களின் முக்கிய உணவாக மாட்டிறைச்சி இருந்துவரும் நிலையில், மாட்டிறைச்சியை நேரடியாகவோ மறைமுகமாகவோ வைத்திருப்பதற்கும் கொண்டுசெல்வதற்கும் எதிராக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று கொந்தளிக்கிறார்கள் லட்சத்தீவு மக்கள்.

இந்தச் சட்டத்தை மீறினால் மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும். ரூ.5 லட்சம்வரை அபராதம் விதிக்கப்படும். லட்சத்தீவு பள்ளிக்கூடங்களில் குழந்தைகளின் மதிய உணவில் மாட்டிறைச்சி உணவு வழங்கப்படுகிறது. இனிமேல் அது வழங்கப்படாது. மேலும், அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாகவும், மதிய உணவு சமைக்கும் ஊழியர்களும் உடற்பயிற்சி ஆசிரியர்களும் பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் அந்த மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

Also Read: `மோடி பதவியேற்ற மே 26 எங்களுக்கு கறுப்பு தினம்!' - வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றிய விவசாயிகள்

மதுபானக் கடைகள் திறப்பு!

அங்கு அமைந்துள்ள 36 தீவுகளில் ஒரே ஒரு தீவைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் மது தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், மதுக்கடைகளையும், மதுபானக் கூடங்களையும் திறப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்படுகிறது. லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக காரணம் சொல்லப்படுகிறது.

மதுபானம்

லட்சத்தீவு தலைமை நிர்வாகியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டு நான்கு மாதங்களாகும் நிலையில், இத்தனை களேபரங்கள். இந்த நிலையில், பிரபுல் கோடா படேலை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முதல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை இந்தியா முழுவதும் முக்கியத் தலைவர்கள் பலர் பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளனர்.

பிரபுல் கோடா படேல் யார்?

பிரபுல் கோடா படேல், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். பிரதமர் நரேந்திர மோடிக்கு இவர் மிகவும் நெருக்கமானவர். தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களின் தலைமை நிர்வாகியாக இருந்துவரும் பிரபுல் கோடா படேலுக்கு, லட்சத்தீவை நிர்வகிப்பதற்கான கூடுதல் பொறுப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. லட்சத்தீவு தலைமை நிர்வாகியாக இருந்த தினேஷ் ஷர்மா கடந்த டிசம்பர் மாதம் காலமானார். அதைத் தொடர்ந்துதான், இவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

பிரபுல் கோடா பிரபு

அமித் ஷா துறைகளை கவனித்தவர்!

இவர், 2007-ம் ஆண்டு குஜராத் மாநிலம் ஹிமாத்நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரின் தந்தையான கோடாபாய் ரஞ்சோபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். அவரை சந்திப்பதற்காக நரேந்திர மோடி அடிக்கடி செல்வதுண்டு. 2010 ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம்பெற்றார். சொரோபுதீன் ஷேக் கொலை வழக்கில் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா சிறை சென்றார். அதன் பிறகு, பிரபுல் கோடா படேலுக்கு அமைச்சராகும் வாய்ப்பை மோடி வழங்கினார். அமித் ஷா கவனித்துவந்த 8 துறைகளில், 6 துறைகள் இவருக்கு வழங்கப்பட்டன.

Also Read: வாட்ஸ்அப், ட்விட்டர் முடக்கப்படுமா? - புதிய விதிமுறைகள்.. மத்திய அரசின் திட்டம் என்ன?

மோடியிடம் மிகுந்த செல்வாக்கு!

பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் பிரபுல் கோடா படேல் இருப்பதால், இவரை 2016-ம் ஆண்டு டாமன் - டையூ தலைமை நிர்வாகியாக மோடி நியமித்தார். பிறகு, தாத்ரா - நாகர் ஹவேலியை நிர்வகிக்கும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டது. அங்கு தலைமை நிர்வாகி என்கிற பதவிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதே வழக்கம். அந்த முறையை மாற்றி, முதன்முறையாக ஐ.ஏ.எஸ் அல்லாத பிரபுல் கோடா படேலை இந்திய அரசு நியமித்தது.

மாலத்தீவு

யாரைக் காப்பாற்றுவார் மோடி?

லட்சத்தீவில் பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் அந்தத் தீவின் அமைதியையும் மக்களின் வாழ்க்கையையும் சீர்குலைக்கும் வகையில் மிக மோசமான சட்டங்களைக் கொண்டுவருகிறார் என்று பிரபுல் கோடா படேல் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. #Savelakshwadeep என்ற ஹேஷ்டேக் மூலமாக புதிய சட்டங்களுக்கு எதிராக சமூகவலைதளங்களில் தீவிரமான பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.

பிரபுல் கோடா படேலை அந்தப் பதவிலியிருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்களும் திரைப்பிரபலங்களும் பிரதமர் மோடியை வலியுறுத்தியிருக்கிறார்கள். பிரதமர் மோடி லட்சத்தீவைக் காப்பாற்றுவாரா, அல்லது தன் நண்பரான பிரபுல் கோடா படேலை காப்பாற்றுவாரா என்பது தெரியவில்லை.



source https://www.vikatan.com/government-and-politics/news/lakshwadeep-people-protest-againt-new-acts-and-praful-khoda-patel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக