Ad

வெள்ளி, 14 மே, 2021

கொரோனா வழிகாட்டுதல் ஆவணத்தில் ஜக்கியின் 'ஈஷா' சிவன்... எதிர்ப்பும், திருத்தமும்!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இந்நிலையில், மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தத் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் ஆவணத்தில், ஒவ்வொரு மாநிலத்துக்கான அடையாளமாக, அந்தந்த மாநிலங்களின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

ஆனால், தமிழ்நாட்டுக்கான கொரோனா தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் பக்கத்தில், கோவை ஈஷா மையத்தில் அமைந்திருக்கும் ஆதிசிவன் சிலை இடம்பெற்றிருந்து. இது கடும் விமர்சனங்களைக் கிளப்பியது.

“மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை வைத்துள்ளது இந்திய விமான நிலையங்கள் ஆணையம். வன்மையான கண்டனம். உடனே மாற்று” என நாடாளுமன்ற மதுரை உறுப்பினர் சு. வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

தொடர்ச்சியாக இதுகுறித்த கண்டனங்கள் எழவே, சிறிது நேரத்தில் ஆதிசிவன் படம் மாற்றப்பட்டு, உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு கோபுரப் படத்தோடு தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, “தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை பயன்படுத்தி இருந்த இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதனை நீக்கி உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு கோபுரத்தை வெளியிட்டுள்ளது. அதை வரவேற்கிறேன். இனி தவறியும் இது போன்ற தவறினை இழைக்காதீர்கள்” என்று வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டிருக்கும் மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள்



source https://www.vikatan.com/news/general-news/aais-misrepresentation-of-tn-draws-criticism-from-mp-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக