தொடர்ந்து 9வது முறையாக காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார். தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், பல தொகுதிகளில் முன்னிலை நிலவரங்கள் ட்விஸ்ட் அடித்து வருகிறது. அந்தவகையில், காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன், காலை 11.30 மணி நிலப்வரப்படி அ.தி.மு.க வேட்பாளர் ராமுவைவிட சுமார் 3,000- வாக்குகளில் பின்னடைவில் இருக்கிறார்.
இதுபற்றி நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர் ஒருவர், “துரைமுருகன் தோற்க வேண்டும் என்பதுதான் தி.மு.க-வினரின் எண்ணமும் கூட. இவர் ஒருவரால் காட்பாடி தொகுதியில் வேறெந்த ஒரு தி.மு.க நிர்வாகியாலும் முன்னிலைக்கு வர முடியவில்லை என்பது நிதர்சன உண்மை. ஒவ்வொரு தேர்தலின்போதும் சிலர் காட்பாடியைக் கேட்க, தி.மு.க தலைமையோ அடுத்தத் தேர்தலில் பார்க்கலாம் என்று சொல்லிவிடும். இப்படிச் சொல்லியே கடந்த 9 தேர்தல்களாக துரைமுருகன் மட்டுமே அத்தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். இது ஒரு காரணம் என்றாலும், அ.தி.மு.க-வினருடனும், முதல்வர் எடப்பாடியுடனும் நெருங்கியத் தொடர்பில் துரைமுருகன் இருப்பதும் தி.மு.க-வினரின் கோபத்துக்கு காரணம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க உத்தேச அமைச்சரவைப் பட்டியல் என்ற ஒரு செய்தி வெளியானபோதுகூட துரைமுருகன் பெயர் அதில் இடம்பெற்றிருந்தது. இன்னும் எத்தனை காலத்துக்குதான் துரையே எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவுமே இருப்பார்? என்பது தி.மு.க தொண்டர்களின் ஆதங்கம். அதனால், துரை தோற்றால் அதற்கு முதல் காரணம் சொந்தக் கட்சியினரின் சூழ்ச்சி என்று தான் எடுத்துக்கொள்ள முடியும். அடுத்து, உடல்நலக்குறைவு காரணமாகவும், கோவிட் பரவலாலும் அவ்வளவாக பிரசாரத்துக்கே துரை செல்லவில்லை. ’எம்.ஜி.ஆர் போல படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்’ என்று அடிக்கடி தனது ஆதரவாளர்களிடம் துரைமுருகன் சொல்லிவந்தாராம். ஆனால், தி.மு.க-வினர் கூடயிருந்தே குழிபறித்துவிட்டனர்” என்றார்.
இன்னும் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படவில்லை. இது வெறும் முன்னிலை நிலவரம் தான் என்பதால் முழுமையான முடிவுக்கு அனைத்து தரப்பினர் காத்திருக்கிறார்கள்!
source https://www.vikatan.com/news/politics/reason-behind-dmk-general-secretary-duraimurugan-trail
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக