Ad

செவ்வாய், 4 மே, 2021

அ.தி.மு.க-வின் தோல்விக்கு பா.ஜ.க உடனான கூட்டணிதான் காரணமா?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சி அமைக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அ.தி.மு.க தான் போட்டியிட்ட 179 தொகுதிகளில் 63-இல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. 11-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மிக மோசமாகத் தோல்வியைச் சந்தித்துள்ளனர். மேற்கு மண்டலம் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் அ.தி.மு.க அதிக இடங்களைக் கைப்பற்றாததே இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கிறது. இது தவிர வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டால் தென் மாவட்டங்களில் அ.தி.மு.க-மீது கடும் அதிருப்தி ஏற்பட்டதும், பா.ஜ.க உடனான கூட்டணியும் அ.தி.மு.க தோல்விக்கு அடிப்படைக் காரணங்கள் என அரசியல் வட்டாரத்தில் தற்போது பரவலாகப் பேச்சு எழுந்துள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர்களில் எம்.ஆர்.காந்தி, நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீநிவாசன், சரஸ்வதி ஆகிய நான்கு பேர் வெற்றிபெற்றுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பா.ஜ.க உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவைக்குச் செல்ல உள்ளனர். ஆனால், 23 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இந்த வகையில் அ.தி.மு.க கூட்டணியில் வாக்கு இழப்பு என்பது பா.ம.கவிடமே நடந்திருக்கிறது.

பா.ஜ.க சுவர் விளம்பரம்

அ.தி.மு.கவுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்தது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக, 1998 நாடாளுமன்றத் தேர்தலிலும் இருகட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. 18 இடங்களிலும் பா.ஜ.க. மூன்று இடங்களிலும் வெற்றிபெற்றன. பின்னர் 2004-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மீண்டும் அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால், அந்தக் கூட்டணி தோல்வியில் முடிவடைந்தது. இதற்குப் பிறகு, ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணி அமைத்ததில்லை. 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க., அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க விரும்பிய நிலையிலும் ஜெயலலிதா ஆர்வம் காட்டாததால் பா.ஜ.க. தனித்தே போட்டியிட வேண்டியிருந்தது.

Also Read: பா.ஜ.க-வின் பாய்ச்சலுக்கு இடையேயும் திரிணாமுல் காங்கிரஸ் வென்றது எப்படி? - 5 காரணங்கள்!

ஜெயலலிதா மறைவுக்குப்பின் முதல்வரான எடப்பாடி கே. பழனிச்சாமி பல்வேறு காரணங்களுக்காக மத்திய அரசைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2019-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைந்தது. ஆனால், அந்தக் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. அந்தக் கூட்டணியின் தோல்விக்கு, பா.ஜ.க. மீது தமிழ்நாட்டில் நிலவிய கடுமையான எதிர்ப்பு மனநிலை ஒரு காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனாலும் தற்போது சட்டப்பேரவை தேர்தல் வரை இவ்விரு கட்சிகளின் கூட்டணி தொடர்ந்தது. தமிழகத்தில் தங்கள் மீது இருக்கும் அதிருப்தியைப் போக்க 2019க்கும் 2021க்கும் இடையில் வேல் யாத்திரை உட்பட பல்வேறு வழிகளில் பா.ஜ.க முயன்றபோதும் அவையெல்லாம் பெரும் தோல்வியிலேயே முடிந்தன.

காஸ் சிலிண்டரின் விலை உயர்வு

ஜி.எஸ்.டி., பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையேற்றம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்கள், எட்டுவழிச்சாலை, மீத்தேன் திட்டம் எனப் பல திட்டங்கள் மக்கள் மத்தியிலிருந்த எதிர்ப்பையும் மீது தமிழக மக்கள் மீது திணிக்கப்பட்டன. அதுமட்டுமல்ல தமிழ் மொழிக்கும், பண்பாட்டிற்கும் உரிய மதிப்பை மத்திய அரசு தரவில்லை என்ற எதிர்ப்பு மனநிலையும் மக்களிடம் இருந்தது.

இந்தியாவில் பா.ஜ.க மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பது தெரிந்தும் அ.தி.மு.க கூட்டணியில் வைத்துக்கொண்டிருப்பதாக விமர்சிக்கப்பட்டது. தற்போது வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகள் அந்த விமர்சனத்திற்கு மேலும் வலுசேர்த்திருக்கிறது. உண்மையில் அ.தி.மு.க-வின் தோல்விக்கு பா.ஜ.க தான் காரணமா என மூத்த பத்திரிகையாளர் கணபதியிடம் பேசினோம் “தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க உடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து பா.ஜ.க தேர்தலைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது. அப்படித்தான் 2001-இல் தி.மு.க கூட்டணியில் இருந்தபோது சில தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் சென்றனர். தற்போது அதே சூழல் திரும்பியுள்ளது. எனவே, பா.ஜ.க-வை இங்கிருக்கும் மக்கள் எப்போதும் எதிரியாக பார்க்கவில்லை. ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க பல மக்கள் விரோத செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது. அது மக்களிடையே குறிப்பாகத் தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவேதான் பா.ஜ.க-வும் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்ட அ.தி.மு.க-வும் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தார்கள்.

கணபதி

அ.தி.மு.க-வின் தோல்விக்கு பா.ஜ.க-வை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டுப் பிரச்னையைப் பெரிதாக்கி, 10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு என்ற அறிவிப்பைத் தேர்தலுக்கு முந்தைய சில நாட்களில் அறிவிக்க வைத்த பா.ம.க-வும் தான் முக்கிய காரணம். இதனால், பா.ம.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் வன்னியர்கள் வாக்குகள் கிடைத்தனவே தவிர அந்தக் கட்சியில், கூட்டணியில் இருக்கும் பிற சமூகத்தினர் வாக்குகள் குறிப்பாக முக்குலத்தோர் வாக்குகள் கிடைக்கவில்லை. அ.தி.மு.க-வின் தோல்விக்கு இதையும் சேர்த்துத்தான் நாம் பார்க்க வேண்டும்” என்றார்.

Also Read: `கொங்கு மண்டலத்தை தி.மு.க அசைக்க முடியாதது ஏன்?' - ஓர் அலசல்

பா.ஜ.க மூத்த நிர்வாகி நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்…

தமிழகத்தில் பா.ஜ.க மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. பா.ஜ.க மீது எதிர்க்கட்சிகள் மக்களிடத்தில் திட்டமிட்டுப் பரப்பிய பொய்ப் பிரசாரங்கள் இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் தவிடுபொடியாகியிருக்கின்றன. அடுத்தடுத்து தமிழகத்தில் தவிர்க்க முடியாத கட்சியாக பா.ஜ.க உருவாகி வருகிறது. அது எதிர்க்கட்சிகளிடத்தில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெற்றிபெற்ற பின்னரும் எங்கள் மீது அச்சத்தினால் தோல்விக்கு காரணம் பா.ஜ.க தான் என எதிர்க்கட்சிகள் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர். தி.மு.க வெற்றிக்கு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் காரணம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா? அதுபோலத்தான் எங்கள் மீதான விமர்சனத்தையும் பார்க்க வேண்டும்.

நாராயணன் பாஜக

எங்களின் தோல்விக்கு பா.ஜ.க-தான் காரணம் என்று சொன்னால் அதற்காக வருத்தப்படலாம். அது குறித்து விவாதிக்கலாம். அப்படியில்லாமல் காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்க்கட்சிகள் செய்யும் பொய்ப்பிரசாரத்திற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது நேர விரயம்” என முடித்துக்கொண்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-alliance-is-the-reason-for-admk-loss-in-this-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக