Ad

செவ்வாய், 4 மே, 2021

'திருவொற்றியூரில் 3-வது இடம்;தோற்றாலும் வென்றாரா சீமான்!'#TNelections2021

கடந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு 12,497 வாக்குகளுடன் ஐந்தாம் இடத்தைப் பிடித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான், இந்த முறை சென்னை திருவொற்றியூர் தொகுதிக்கு மாறிவிட்டார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில்  போட்டியிடுவார் என்றெல்லாம் பேச்சு இருந்த நிலையில், சீமான்  திருவொற்றியூர் தொகுதியைத் தேர்ந்தெடுத்தது ஆச்சர்யமான ஒன்றாகத்தான் பார்க்கப்பட்டது. மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில், வேறு யாரும் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ சீமானாவது  வெற்றி பெற்றுவிட வேண்டும் என இத்தொகுதியில் துடிப்புடன் தேர்தல் பணியாற்றினார்கள் நாம் தமிழர் தம்பிகள். மீனவர், வன்னியர், ஆதிதிராவிடர், நாடார், முதலியார் உள்ளிட்ட சமூகத்தினர் கணிசமாக வசிக்கும் திருவொற்றியூர் தொகுதியில் இதுவரை நடைபெற்ற 12 தேர்தல்களில் தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

சீமான்

கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கே.பி.பி.சாமி 82,205 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் பால்ராஜை  4,865 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதே சமயம், தே.மு.தி.க வேட்பாளர் ஏ.வி.ஆறுமுகம் 13,463 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோகுல் 3,313 வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 15,000 க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள். இந்த அடிப்படையிலும், கட்சிக்கு கிளைக் கட்டமைப்புகள் வலுவாக இருக்கும் தொகுதி என்பதாலுமே, சீமான் திருவொற்றியூரைத் தேர்ந்தெடுத்ததாக கூறப்பட்டது. சீமானுக்கு எதிராக திமுக சார்பில் இத்தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவான மறைந்த கே.பி.பி.சாமியின் தம்பி கே.பி.சங்கர், அ.தி.மு.க சார்பில் ஏற்கெனவே இரண்டு முறை இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த கே.குப்பன் உள்ளிட்ட 22 பேர் போட்டியிட்டாலும் அதிமுக, திமுக, சீமான் உள்ளிட்ட 3 பேருக்கு  இடையில்தான் மும்முனை போட்டி காணப்பட்டது. இதனால் யார் வென்றாலும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெல்லமுடியும் என்ற நிலையே வாக்குப்பதிவுக்கு முந்தைய நிலையாக இருந்தது.

மும்முனைப் போட்டி நிலவும் என எதிர் பார்க்கப்பட்ட திருவொற்றியூர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட போதும் இது காணப்பட்டது. தொடர்ச்சியாக எண்ணப்பட்ட வாக்குகளில் கே.பி.சங்கருக்கு சற்று ஏறுமுகமே காணப்பட்டது . சீமானும் , அதிமுக வேட்பாளர் கே.குப்பன் இருவருக்குமே 2-ஆம் இடத்துக்கான போட்டியில் இருந்தனர். அனைத்து சுற்று வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் திமுக -வின் கே.பி.சங்கர் 88,185 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் குப்பன் 50524 வாக்குகளும், சீமான் 48597 வாக்குகளும் பெற்றனர் . மிக குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் 2-ஆம் இடத்தை இழந்தார். எப்படியும் சீமானை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என விரும்பிய அவரது கட்சியினரும், ஆதரவாளர்களும் சோகத்தில் மூழ்கினர். சென்ற தேர்தலைவிட கட்சியாக வாக்கு சதவிகிதம் அதிகமாகவே பெற்றபோதும் மிகவும் போட்டி நிலவும் என எதிர்பார்த்த திருவொற்றியூரில் சீமான் 3-வது இடத்தையே பெற்றார். ஆனாலும் கட்சியாக இந்தத் தேர்தலில் 3 வது இடத்தை பிடித்தது வெற்றியாகவே அவரது ஆதரவாளர்களால் பார்க்கப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/seeman-a-short-analysis-of-tamilnadu-elections-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக