பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண் ஜெயபாரதி. இவர் திருவாரூர் மாவட்டம், கடாரம் கொண்டானில் வசித்துவந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்த இவர், தனது குழந்தை மற்றும் பெற்றோருடன் இங்குள்ள வீட்டில் வசித்துவந்தார். தபால்துறையில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய ஜெயபாரதி, கடந்த மே 21-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை வீடு திரும்பும்போது கார் மோதி உயிரிழந்ததாக, அவரின் பெற்றோருக்கு காவல்துறையினரிடமிருந்து அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. ஆனால், இவரது பெற்றோர், தங்கள் மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்கள். இந்த வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில், ஜெயபாரதி, கார் மோதி மரணம் அடையவில்லை. இது திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது.
திருவாரூர் அருகே தப்பாளம்புலியூரில் சாலை விபத்தில் ஜெயபாரதி உயிரிழந்ததாக முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவரின் பெற்றோரோ, அமெரிக்காவில் வசிக்கும் ஜெயபாரதியின் கணவர் விஷ்ணு பிரகாஷின் தூண்டுதலால் தங்கள் மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தார்கள். இந்தக் கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள். சிசிடிவி கேமராக்கள் மூலம் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ஜெயபாரதியை ஒரு சரக்கு வாகனம் தொடர்ச்சியாகக் கண்காணித்ததும், தப்பாளம்புலியூர் சாலை அருகே ஜெயபாரதி சென்றுகொண்டிருந்தபோது கொலையாளிகள், இவர் மீது அந்த வாகனத்தை மோதிக் கொலை செய்ததும் தெரியவந்திருக்கிறது. இது திருவாரூர் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயபாரதியும், அமெரிக்காவில் வசிக்கும் அவரின் கணவர் விஷ்ணு பிரகாஷும் கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களுக்குள் தொடர்ந்து கருத்து மோதல்கள் இருந்துவந்திருக்கின்றன. ஜெயபாரதியை விவகாரத்து செய்ய, விஷ்ணு பிரகாஷ் முயன்றிருக்கிறார், ஆனால் இதற்கு ஜெயபாரதி சட்டபூர்வமான ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதோடு, விஷ்ணு பிரகாஷ் குறித்து அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு ஜெயபாரதி ஒரு புகாரை அனுப்பியிருக்கிறார். இதனால் விஷ்ணு பிரகாஷ் வேலை இழக்கும் சூழல் உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் ஜெயபாரதியின் மீது விஷ்ணு பிரகாஷ் கடும் கோபமடைந்து, அவரைக் கொலை செய்யும் முடிவுக்குச் சென்றிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்தபடியே தனது உறவினர்களான ஜெகன், ராஜா, செந்தில்குமார் மூலம் ஜெயபாரதியைத் தீர்த்துக்கட்ட விஷ்ணு பிரகாஷ் பிளான் போட்டிருக்கிறார்.
ஜெயபாரதியின் மீது வாகனத்தை மோதி, உயிரிழக்கச் செய்தால், அது விபத்து வழக்காக முடிந்துவிடும் எனத் திட்டமிட்டு, பழைய சரக்கு வாகனத்தை 50,000 ரூபாய் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். பிரசன்னா என்பவர் இந்த வாகனத்தை ஓட்டியிருக்கிறார். ஜெயபாரதியை ஒரு நாள் முழுவதும் பின்தொடர்ந்து கண்காணித்திருக்கிறார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜெயபாரதி அஞ்சலகத்தில் பணி முடித்து, மாலை தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிந்தபோது, அவர்மீது சரக்கு வாகனத்தை மோதியதோடு, மிகக் கொடூரமாக, அங்கிருந்த பனை மரத்தோடு உடலை நசுக்கி, சிதைத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து கொலையாளிகள் சம்பவ இடத்திலிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்கள். இந்தக் கொலையில் மிக முக்கியப் பங்குவகித்த, சரக்கு வாகன உரிமையாளர் செந்தில்குமார், ஓட்டுநர் பிரசன்னா ஆகியோரைக் காவல்துறையினர் உடனடியாகக் கைதுசெய்தார்கள்.
இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த விஷ்ணு பிரகாஷின் உறவினர்களான ராஜா, ஜெகன், செந்தில்குமார் ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்து, அவர்களைக் கைதுசெய்ய காவல்துறையினர் தேடிவருகிறார்கள். இந்தக் கொலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அமெரிக்காவிலுள்ள ஜெயபிரகாஷ், கொலையாளிகளுக்கு பல லட்சம் ரூபாய் பணம் அனுப்பியிருப்பது தெரியவந்திருக்கிறது. இது குறித்தும் ஆதாரங்கள் திரட்டப்பட்டுவருகின்றன.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக, அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகத்துக்குத் தகவல் தெரிவித்து, விஷ்ணு பிரகாஷை கைதுசெய்து, இங்கு அழைத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருவதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள். கொலை செய்யப்பட்ட ஜெயபாரதி, பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் சந்தானத்தின் உறவினர் என்பதால், இந்தக் கொலைச் சம்பவம் பொதுமக்களால் கூர்ந்து கவனிக்கப்படுவதோடு, பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.
source https://www.vikatan.com/news/crime/actor-santhanams-relative-lady-was-murdered-what-happened
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக