சென்னையில் உள்ள பிரபலமான தனியார் பள்ளியான பி.எஸ்.பி.பி பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ராஜகோபாலன். இவர் ஆன் லைன் வகுப்பில் டவலை மட்டும் அணிந்துக் கொண்டு அரைநிர்வாணமாக பாடம் நடத்தியதாக மாணவிகள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக முன்னாள் மாணவிகள், பள்ளி நிர்வாகத்துக்கு புகார் மனுவை அனுப்பினர். சமூகவலைதளத்தில் வைரலான இந்தப் புகார் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். வீட்டிலிருந்த ராஜகோபாலன், அவரின் மனைவி, அம்மா ஆகியோர் வடபழனி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் அவர்களிடம் துணை கமிஷனர்கள் ஜெயலட்சுமி, ஹரிகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். ஆசிரியர் ராஜகோபாலனின் செல்போன், லேப்டாப்பை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் சில தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தன. அதனால் ராஜகோபாலன், யார், யாருக்கெல்லாம் மெசேஜ்களை அனுப்பினார், அவரின் போன் கால் ஹிஸ்ட்ரி ஆகிய விவரங்களை போலீஸார் சேகரித்திருக்கின்றனர். போலீஸாரின் விசாரணை தீவிரமடைந்ததால் ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக பள்ளிநிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் ராஜகோபாலனிடம் மாணவிகளின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது அவர், தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்ட பேலீஸார், மாணவிகள் தரப்பில் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்ட போட்டோஸ்கள், வாட்ஸ்அப் மெசேஜ்களை ராஜகோபாலனிடம் காண்பித்து கேள்விகளை கேட்டிருக்கின்றனர். அதன்பிறகே ராஜகோபாலன் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரித்த போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``சமூகவலைதளத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு புகார் வெளியானதும் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்றோம். கொரோனா ஊரடங்கு என்பதால் பள்ளி மூடப்பட்டிருந்தது. அதனால் ராஜகோபாலனின் வீட்டுக்குச் சென்று அவரை விசாரணைக்காக அழைத்து வந்தோம். அப்போது அவர் பயன்படுத்திய செல்போன், லேப்டாப்பை பறிமுதல் செய்து ஆய்வு செய்தோம். அப்போது சில மெசேஜ்கள் அழிக்கப்பட்டிருந்தன.
அதுதொடர்பாக ராஜகோபாலனிடம் விசாரித்தபோது அவர் மழுப்பலான பதிலைத் தெரிவித்தார். இதையடுத்து ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்களை காண்பித்து விசாரித்தோம். அதன்பிறகே அவர் சில தகவல்களைத் தெரிவித்தார். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக ராஜகோபால் அளித்த தகவலின்படியும் அவரால் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்திருக்கிறோம். பிறகு அவரை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.
Also Read: சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் - போலீஸ் தீவிர விசாரணை!
ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் பள்ளிக்கல்வித்துறையும் விசாரணை நடத்திவருகிறது. ஆசிரியர் ராஜகோபாலன் எத்தனை ஆண்டுகள் இந்தப் பள்ளியில் பணியாற்றி வருகிறார் என அவரின் முழுவிவரங்களை பள்ளிக்கல்வித்துறை சேகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் ஆசிரியர் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், தைரியமாக துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் புகாரளிக்கலாம் என போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். அவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என போலீஸார் கூறியிருக்கின்றனர்.
ராஜகோபாலன் பயன்படுத்திய செல்போன்,லேப்டாப்பை சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் சென்னை அசோக்நகர் மகளிர் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். சைபர் க்ரைம் போலீஸார் அளிக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும் என அசோக்நகர் மகளிர் போலீஸார் தெரிவித்தனர்.
ஆசிரியர் ராஜகோபாலன் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-school-teacher-rajagopalan-in-pocso-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக