Ad

வியாழன், 13 மே, 2021

லாக்டெளனை மீறி டிவி சீரியல் ஷூட்டிங் : அம்மாவைப் பறிகொடுத்த நடிகை, அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்?!

கொரோனா இரண்டாம் அலையின் பரவலைக் குறைக்க தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சிறு பெட்டிக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை எல்லாமே மூடப்பட்டுள்ளன. பால், காய்கறி முதலான உணவுப் பொருட்கள் விநியோகம் மற்றும் மருத்துவப் பணிகளுக்கு மட்டுமே விதிவிலக்கு தரப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு அம்சங்களைப் பொறுத்தவரை சினிமா ஷூட்டிங் தடை செய்யப்பட்டுள்ளது. சீரியல் ஷூட்டிங்கிற்கு மட்டும் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அரசுத் தரப்பிலிருந்து இன்னும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், முழு லாக்டெளன் அமல்படுத்தப்பட்ட மே 10-ம் தேதிக்குப் பிறகும் பல்வேறு டிவி சீரீயல்களின் ஷூட்டிங்குகள் நடத்தபட்டு வருவதாக பொதுமக்கள் நம்மிடம் சொல்ல விசாரணையில் இறங்கினோம்.

''ஆமாங்க... சீரியல் ஷூட்டிங் நடக்கிறது உண்மைதான். நேற்றுகூட (மே-13) ஷூட்டிங் முடிச்சிட்டுத்தான் வந்தேன். ஊரடங்கு அது இதுன்னு பேசினா அடுத்த சில நாட்கள்ல சீரியல்ல நாங்க இருக்க மாட்டோம். அதனால வேற வழியில்லை. போயிட்டுத்தான் வரவேண்டியிருக்கு’' என்றார் அந்த முக்கியமான சேனலின் பிரைம் டைம் சீரியல் ஹீரோ.

டிவி சீரியல் ஷூட்டிங் - மாதிரி படம்

சேனல் வித்தியாசமின்றி எல்லா டிவி சேனல்களுமே ஷூட்டிங்கைத் தொடர்ந்து நடத்தி வருகிறது என்பதுதான் உண்மை நிலவரமாக இருக்கிறது. சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஒரு இடத்தில் சீரியல் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்க, அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து எதிர்ப்புத் தெரிவிக்க இடத்தை மாற்றிக் கொண்டு போயிருக்கிறார்கள். ஈ.சி.ஆர் பகுதியில் நடந்து கொண்டிருந்த ஒரு ஷூட்டிங் குறித்து காவல்துறைக்குத் தகவல் வர, அவர்கள் சென்று எச்சரிக்க, அந்த யூனிட்டும் இடத்தை மாற்றி விட்டார்களாம்.

‘’இப்ப மட்டுமில்ல சார், போன வருஷமும் இதே கூத்துதான் நடந்தது. ரகசியமா ஷூட்டிங் எடுக்கிறவங்க அதுல நடிக்கிற நடிகர், நடிகைகள், அவங்க குடும்பம் பத்தி யோசிச்சுப் பார்க்க மாட்டேங்குறாங்க. போன வருஷம் ஊரடங்கு சமயத்துல ஷூட்டிங் வர மறுத்த காரணத்தால 20 பேருக்கு மேல சீரியல்ல இருந்து தூக்கிட்டாங்க. சின்னச் சின்னப் பெட்டிக்கடைகளைக்கூட திறக்க அனுமதிக்காத அரசு, நூறு பேர் வரைக்கும் கூடுற இந்த சீரியல் ஷூட்டிங் விஷயத்துல ஏன் பாராமுகமா இருக்குனு தெரியலை. ஷூட்டிங்கை நம்பி சிலர் பிழைக்கிறாங்கதான்... ஆனா, அவங்களுக்குமே உயிர் முக்கியமில்லையா’’ என்கிறார் சென்ற லாக்டௌனில் ஷூட்டிங் செல்ல மறுத்த அந்த சீனியர் நடிகை.

கடந்த மே 10-ம் தேதியிலிருந்து தொடர்ந்து ஷூட்டிங் நடந்து வந்ததன் விளைவு ‘பூ’ பெயர் கொண்ட சீரியல் செட்டில் சுமார் 30 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். முதலில் ஹீரோவுக்குத்தான் கொரோனா தொற்று இருந்திருக்கிறது. ஆனாலும், அவரை ஷூட்டிங்கில் தொடர்ந்து கலந்து கொள்ளச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள். அவர் கலந்து கொள்ள அடுத்த சில தினங்களில் ஸ்பாட்டில் இருந்த 30 பேர் வரை கோவிட் பாசிட்டிவ் வந்திருக்கிறது. சத்தமில்லாமல் அனைவரையும் அவரவர் வீட்டில் கொண்டுபோய் இறக்கிவிட்டு வந்த சீரியல் யூனிட் நேற்று மட்டும் ஷூட்டிங்கை நடத்தவில்லை என்கிறார்கள்.

இதேப்போல் பிரபல பார்ட் -2 சீரியலின் ஷூட்டிங்கும் தொடர்ந்து நடந்திருக்கிறது. இதில் உதவி இயக்குநர்கள் சிலருக்கு லேசான அறிகுறிகள் தெரியவந்த பிறகே ஷூட்டிங்கை நிறுத்தியிருக்கிறார்கள்.

நடிகை ரம்யா

‘வேலம்மாள்’ சீரியல் ஹீரோயின் ரம்யாவிடம் பேசினேன். ‘’நான் பேசற மனநிலையில் இப்ப இல்லீங்க. முதல்ல எனக்கு கொரோனா பாசிட்டிவ். என் மூலமா அம்மாவுக்கு வந்தது. ரெண்டு நாள் முன்னாடி அம்மா இறந்துட்டாங்க. எல்லாம் கொஞ்சம் சரியானதும் நான் பேசறேன்’' என முடித்துக் கொண்டார் ரம்யா.

பெப்ஸி, டிவி சேனல்கள் சீரியல் ஷூட்டிங்கிற்கு மட்டும் அரசாங்கத்திடம் அனுமதி கேட்டபோதே, ''இது ரொம்ப முக்கியமா?’' என எல்லா தரப்பு மக்களிடம் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால், அரசின் விதிகளை மதிக்காமல் ரகசியமாக ஷூட்டிங் நடத்தி சின்னத்திரை நடிகர்கள், கலைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன டிவி சேனல்கள். புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இந்த விவாகரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்புமாக இருக்கிறது.



source https://cinema.vikatan.com/television/inspite-of-complete-lockdown-tv-serial-shooting-continues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக