நாட்டில் கொரோனா உச்சத்தில் இருந்த போது மகாராஷ்டிராவில் தான் அதிகப்படியான கொரோனா பாதிப்பு இருந்தது. தினமும் 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் மகாராஷ்டிரா அரசு திணறியது. கொரோனா பாதிப்புகள் மட்டுமல்லாது உயிரிழப்புகளும் கொரோனா இரண்டாவது அலையின் போது அதிகமாக இருந்தது. இதனால் கொரோனா உயிரிழப்புகள் மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே சென்றது. இரண்டாவது அலை ஃபிப்ரவரியில் தொடங்கி இப்போது படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது.
கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையில் மகாராஷ்டிராவில் இது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டிவிட்டது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 56 லட்சத்தை தாண்டிவிட்டது. நாட்டில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் கர்நாடகா இருக்கிறது. கர்நாடகாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டிவிட்டது. மூன்றாவது இடத்தில் டெல்லி இடம் பெற்றிருக்கிறது. டெல்லியில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. 14 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. கொரோனா பட்டியலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடத்தில் இருந்தாலும் நாட்டில் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியிருக்கிறது. 3 லட்சத்தில், 90 ஆயிரம் பேர் மகாராஷ்டிராவில் மட்டும் உயிரிழந்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலையின் தொடக்கத்தில் மும்பையில் அதிக பாதிப்பு இருந்தாலும், பின்னர் அதனை மாநகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்தி விட்டது. மும்பையில் மட்டும் 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். புனே, நாசிக், நாக்பூர் போன்ற நகரங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததோடு உயிரிழப்புக்களும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கிறது.
தற்போதுதான் பாதிப்பு எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் வரும் 1-ம் தேதியில் இருந்து தற்போதுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. மேலும் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் 18 மாவட்டங்களில் வீடுகளில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் திட்டத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது.
வீட்டில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துவதால் கொரோனா தொற்று அதிகமாகிக்கொண்டே செல்கிறது. எனவே 18 மாவட்டங்களில் மட்டும் யாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் உடனே அவர்களை அரசு கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read: மஹாராஷ்டிரா: மராத்தா சமூகத்துக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!
மேலும் கர்ப்பிணிப்பெண்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மும்பை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு சிகிச்சை நிபுணரிடம் கடிதம் பெற்று வருவதோடு தாங்களும் கைப்பட எழுதிக்கொடுக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலூட்டும் தாய்மார்கள் எந்த வித நிபந்தனையும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொரோனா தடுப்பூசி சப்ளை செய்ய மும்பை மாநகராட்சி சர்வதேச அளவில் டெண்டர் கோரியிருந்தது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மூன்று கம்பெனிகள் தடுப்பூசியை சப்ளை செய்வதாக டெண்டர் கொடுத்துள்ளன.
source https://www.vikatan.com/news/general-news/90000-killed-in-corona-in-maharashtra
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக