Ad

புதன், 12 மே, 2021

ஸ்டெர்லைட் ஆலை: `இப்போது 5 மெட்ரிக் டன்; விரைவில் 35 மெட்ரிக் டன்!’ - தொடங்கியது ஆக்ஸிஜன் விநியோகம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், சில இடங்களில் சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் சூழலும் நிலவியது. பெரும்பாலான தொழிற்சாலைகள் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகிறார்கள். இந்நிலையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1,050 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் நிலையம் உள்ளது.

ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி

மருத்துவ பயன்பாட்டிற்காக நாள் ஒன்றுக்கு 1,000 மெட்ரிக் டன் வரை ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தர தயாராக இருக்கிறோம். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்” என வேந்தாந்தா நிறுவனம் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி மத்திய, மாநில அரசுக்கும் கடிதம் அனுப்பியதுடன் உச்சநீதி மன்றத்தில் இடைக்கால மனுவையும் தாக்கல் செய்தது. அந்த மனு, கடந்த ஏப்ரல் 22-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, “ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் ஆலையைத் திறக்க அனுமதிக்கலாம்” என மத்தியரசு தரப்பிலும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்ஸிஜன் உற்பத்திக்காக அனுமதி அளிப்பது தொடர்பாக, கடந்த 23-ம் தேதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் கருத்துக் கேட்புக்கூட்டம் நடந்தது. ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது, ஆட்சியரின் முன்பே ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் மோதிக் கொண்டனர். கல்வீச்சுத் தாக்குதலும் நடந்தது. இந்நிலையில், ”ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதிக்க 95 சதவீதம் மக்களின் எதிர்ப்பு உள்ளது” என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு அறிக்கை அனுப்பபட்டது.

ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்

இதையடுத்து, ஏப்ரல் 26-ம் தேதி, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக்கூட்டத்தில், ’ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவப் பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் தயாரிக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கலாம்’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், தமிழக அரசும் அனுமதி அளித்தது. அத்துடன், உச்ச நீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்ஸிஜன் உற்பத்திக்காக அனுமதி அளித்ததுடன் 5 பேர் கொண்ட நிபுணர் குழுவுடன், 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவும் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த மே 5-ம் தேதி, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்புக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, மே 6-ம் தேதி மின் இணைப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஆக்ஸிஜன் உற்பத்திக்கான முதல்கட்டப் பணிகள் நடந்தன. இரண்டு நாட்கள் சோதனை முறையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நடந்தது. இந்நிலையில், முதல்முறையாக, மருத்துவ பயன்பாட்டிற்காக இன்று காலை 8 மணிக்கு 5 மெட்ரிக் டன் அளவு ஆக்ஸிஜன் டேங்கர் லாரி மூலம் முதல்கட்டமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நெல்லை அரசு மருத்துவமனையில் நிரப்பப்படும் ஆக்சிஜன்

ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட டேங்கர் லாரியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.செந்தில் ராஜ் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் செந்தில்ராஜ், “கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக இலவசமாக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து மருத்துவமனைகளுக்கு வழங்கிட, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மத்திய, மாநில அரசுகள் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் அனுமதி கேட்டிருந்தது.

இதையடுத்து, மருத்துவ பயன்பாட்டிற்காக மட்டும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கண்காணிப்புக் குழுவினரின் ஆய்வுக்குப் பிறகு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த நிலையில், முதல்கட்டமாக 5 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அந்த ஆக்ஸிஜன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 மெட்ரிக் டன் அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து பெற முடியும்.

டேங்கர் லாரியிலிருந்து மருத்துவமனை சிலிண்டரில் நிரப்பப்படும் ஆக்ஸிஜன்

பின்னர், உற்பத்தி அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, ஏற்கெனவே கூறப்பட்டது போல நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 35 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனையும் தயார் செய்ய ஆலை நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது உற்பத்தி செய்து அனுப்பப்பட்டுள்ள ஆக்சிஜன், ஆய்வகப் பரிசோதனையில் 98% தூய்மைத் தன்மை உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை, தேவையைப் பொறுத்து எந்தெந்த பகுதிகளுக்கு அனுப்புவது என்பதை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் முடிவு செய்யும். அதன்படி, அனுப்பி வைக்கப்படும்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/initiation-of-oxygen-supply-at-the-thoothukudi-sterlite-plant-the-first-phase-is-the-production-of-5-metric-tons

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக