Ad

புதன், 12 மே, 2021

புதுக்கோட்டை: "7 பேர் விடுதலை; விரைவில் தீர்வு கிடைக்க வழிவகை" -தமிழக சட்டத்துறை அமைச்சர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ஆக்ஸிஜன் சேமிப்பு யூனிட்டினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " தமிழக முதல்வரின் ஆணைப்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளேன். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 667 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு 13ம் தேதி வரை தேவையான ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது. நோயின் தீவிரம் அதிகமுள்ள நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க வழி வகை செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா நோய்த் தொற்றைப் பொறுத்தவரை ஆரம்ப நிலையிலேயே ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மூலம் தொற்றைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சட்டத்துறை அமைச்சர் ஆய்வு

அலட்சியம் காட்டக்கூடாது. ஆரம்ப நிலையில் பார்க்காமல் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவதால் உயிரிழப்பு அபாயம் ஏற்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே அதாவது அறிகுறி தென்பட்ட 4 நாட்களுக்குள் பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மருத்துவமனையில் சாப்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் சரியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 7பேர் விடுதலை விவகாரத்தைப் பொறுத்தவரை கவர்னரிடமிருந்து, குடியரசுத் தலைவருக்கு சென்றுள்ளது. குடியரசுத் தலைவரிடம் தான் முடிவெடுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆனாலும், தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு அதற்கேற்ப விரைவில் தீர்வு கிடைக்க வழிவகை செய்யும்.

நீட் தேர்வு, முல்லைப் பெரியாறு, மேகதாது அணை உள்ளிட்ட தமிழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் காணொளிக் காட்சிகள் வாயிலாகவே நடத்தப்பட்டு வருகிறது. கோடை விடுமுறைக்கு பிறகு நேரடியாக வழக்குகள் விசாரிக்கப்படுகிற போது, தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் துரிதப்படுத்தப்பட்டு நம் வழக்கறிஞர்கள் மூலமாக விரைந்து விசாரணைக்குக் கொண்டு வந்து உரிய தீர்வு காணப்படும்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/tamilnadu-law-minister-ragupathi-visits-pudhukottai-government-hospital

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக