Ad

புதன், 12 மே, 2021

தினமும் 100 பேருக்கு உணவு; `அன்பு இல்லம்' எனும் கனவு - `திருப்பூரின் அன்னலட்சுமி' லீலா! #SheInspires

நாம் செயல்படுத்தும் கனவு நம்முடையதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை. நம் பெற்றோர், உடன்பிறந்தோர், நம் பிள்ளைகள் என யாருடையதாகவும் இருக்கலாம். அப்படி, திருப்பூரைச் சேர்ந்த லீலா ஜெகன் செய்து வரும் சேவைக்குப் பின்னால் இருப்பது, அவரின் அப்பாவின் கனவு. என்றாலும், அந்தச் சேவைகளால் மட்டுமே தான் சந்தோஷமாக இருப்பதாகக் கூறுகிறார்.

தினமும் குறைந்தபட்சம் 100 பேருக்காவது இலவச உணவு அளித்திட வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கி வரும் லீலா, கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக ஆதரவற்றோர், தெருவோரத்தில் வசிப்பவர்கள், முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள், ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள் காப்பகத்தில் உள்ளவர்கள் என இவர்களில் யாருக்கேனும் சிலருக்கு தினமும் உணவளித்து வருகிறார். இதனாலேயே தன்னார்வலர்கள் மத்தியில் `திருப்பூரின் அன்னலட்சுமி' என்று அழைக்கப்படும் லீலாவிடம் பேசினோம்.

லீலா

``கணவரை இழந்ததுக்கு அப்புறம் உறவினர்களும் சுற்றமும் மறுமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தினாங்க. அதுலயிருந்து என்னை விடுவிச்சுக்கிறதுக்காக, அதுவரை சின்ன அளவில் செய்துட்டு இருந்த உணவு வழங்கும் சேவையை இன்னும் அதிகமா செய்யத் தொடங்கினேன். நான் எப்போதும் என்னை பிஸியா வெச்சுக்க ஆரம்பிச்சேன். அதுக்கு அப்புறம் யாரும் என்னை மறுமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தலை. என் விருப்பம் சேவைதான்னு புரிஞ்சுக்கிட்டாங்க. என் அதிகபட்ச மன நிம்மதியும் சந்தோஷமும் மனுஷங்களோட ஒரு வேளை பசியைப் போக்குறதுலதான் இருக்கு'' என்று திடமாகப் பேச ஆரம்பித்தார் 35 வயதாகும் லீலா ஜெகன்.

``நான், தம்பி, அம்மா, அப்பானு சின்ன குடும்பம். வீட்டிலேயே தலையணை, மெத்தை போன்றவற்றை செய்து விற்பனை செய்தார் அப்பா. அப்பாவுக்கு சேவை செய்யும் எண்ணமும் நோக்கமும் நிறைய. ஆனா, பெரிய அளவுல செய்றதுக்குப் போதுமான வருமானம் இல்லாததால, தினமும் கொஞ்சம் பேருக்காவது உணவு வழங்கி வந்தார். அவர்கூட நானும் போவேன். சமூகத்தின் மீதான அக்கறையும், நம்மால முடிஞ்ச அளவுக்கு யாருக்காச்சும் உதவணும் என்ற எண்ணமும் எனக்கும் தோன்றியது.

10-ம் வகுப்புவரை மட்டுமே என்னை படிக்க வெச்சாங்க. அதுக்கு மேல குடும்ப சூழ்நிலை காரணமா படிக்க முடியலை. பின் திருமணம், குழந்தைகள்னு வாழ்க்கை போச்சு. இன்னொரு பக்கம், தொடர்ந்து நான் தினமும் சிலருக்காவது உணவு வழங்கி வந்தேன். டிராவல்ஸ் வெச்சிருந்த என் கணவர், என்னை ஊக்கப்படுத்தினார். சில நாள்கள்ல, வீட்ல சமைக்கிற உணவை என்னால பசியோட இருக்கிறவங்கிட்ட சேர்க்க முடியாம போகும்போது, அவரே எடுத்துட்டுப் போய் கொடுப்பார்.

லீலா

ஆனா, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்துல என் கணவர் இறந்துட்டார். எல்லாரும் மறுமணம் செய்யச் சொன்னப்போ, அதுவரை சின்ன அளவுல செய்துட்டு வந்த உணவு வழங்கும் சேவையை இன்னும் விரிவா செய்யத் தொடங்கினேன். கணவரோட பென்ஷன் பணம் வாங்குறதுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போவேன். அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்தவர், எனக்கு வயசு குறைவா இருப்பதைக் கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியகத்திலேயே பணி வழங்கினார்.

அதுக்கு அப்புறம் அலுவலக வேலை நேரம் தவிர்த்த நேரங்கள்ல, காப்பகங்களுக்குப் போக ஆரம்பிச்சேன். உணவு மட்டும் கொடுக்காம அவங்க கூட நேரமும் செலவிடுவேன். நான் மட்டும் போகாம, என் குழந்தைகளையும் அங்க அழைச்சுட்டுப் போக ஆரம்பிச்சேன்'' என்று கூறும் லீலாவுக்கு 9-ம் வகுப்புப் படிக்கும் ஒரு மகனும், 6-ம் வகுப்புப் படிக்கும் ஒரு மகளும் உள்ளனர்.

லீலா

Also Read: ``யூடியூப்தான் என் சந்தை... மாசம் 1.5 லட்சம் வருமானம்!" - கிராமத்தில் கலக்கும் ராஜாத்தி #SheInspires

``என் சேவையைப் பார்த்த பலரும் என்னோட சேர்ந்து செயலாற்ற தொடங்கினாங்க. எங்கப்பா, `நாம செய்ற உதவியை யார்கிட்டயும் சொல்லக் கூடாது'னு சொல்லுவார். எனக்கும் அதுவே பழகியதால, நான் உணவு வழங்குறதை யாருக்கும் கூறாமல் தவிர்த்தேன். இதனால என்னால் சிறிய அளவில் மட்டுமே சேவை செய்து வர முடிஞ்சது. என்கூட வேலைபார்க்கிறவங்க, நண்பர்கள் எல்லாம் என் சேவைகள் குறித்து பதிவிட்டு, உதவி கேட்கச் சொல்லிச் சொன்னாங்க. அதன் மூலம் இன்னும் பலர் என்னோட சேர்ந்து ஆதரவற்றோர்க்கு உதவ வாய்ப்பு உண்டாகும்னு சொன்னாங்க. நானும் அதேபோல பதிவிடத் தொடங்கினதும், உதவிகள் நிறைய கிடைக்க ஆரம்பிச்சது. நேரில் வந்து உதவிட முடியாதவங்க, உணவளிக்கத் தேவையான நிதியை என்னை நம்பி கொடுக்க ஆரம்பிச்சாங்க'' என்றவர், கொரோனா காலத்திலும் சிறப்பாகச் சேவையாற்றி வருகிறார்.

கொரோனா காலகட்டத்தில் மிக அதிகமான நிதி பெற்று அதிகமான சிறுவர், சிறுமிகள் காப்பகத்துக்கு, முதியோர் இல்லங்களுக்கு, தெருவோரங்களில் வசிப்பவர்களுக்கு என, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 300 பேர் வரை, அலுவலக நேரம் தவிர்த்த காலை, மாலை நேரங்களில் உணவளித்து வருகிறார். இதனால் இவரை `திருப்பூரின் அன்னலட்சுமி' என அன்புடன் அழைக்கின்றனர் மக்கள். உணவு மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், மற்ற தேவைகள், படிப்பதற்கு தேவையான பொருள்கள் என அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். இதற்காக தான் வாங்கும் 14,000 ரூபாய் சம்பளத்தில் 2,000 ரூபாயை சேவைகளுக்கு என ஒதுக்கி வைத்துக்கொள்கிறார். மேலும், உதவும் உள்ளங்களிடம் இருந்து கிடைக்கப் பெறும் பண உதவியை இதற்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்.

லீலா

Also Read: மூலிகை நாப்கின், சிறுதானிய உணவுகள்... சமூக சேவையோடு ஒரு சக்ஸஸ் பிசினஸ்! #SheInspires

``என் கனவு, எங்கப்பாகிட்ட இருந்துதான் ஆரம்பமாச்சு. இப்போ அவர் என்னுடன் இல்லைன்னாலும் அவர் எண்ணத்தையும் செயலையும் நான் தொடர்ந்துட்டு வர்றது நிறைவா இருக்கு. ஆதரவற்ற சிறுவர், சிறுமிகளை என் குழந்தைகளாவும், முதியோர் இல்லங்களில் இருக்கும் முதியோர்களை என் பெற்றோராவும் எண்ணி வாழ்ந்து வர்றேன். இதிலிருக்கும் மனநிம்மதிக்கு ஈடில்லை'' என்றார் லீலா.

தற்போது தாய் வீட்டில் தன் அம்மா, தம்பியுடன் வசித்து வரும் லீலாவுக்கு, ஆதரவற்ற முதியோர், சிறுவர், சிறுமிகள், மனநலம் பாதிக்கப்பட்டோர் என அனைவருக்குமான ஓர் `அன்பு இல்லம்' கட்ட வேண்டும் என்பதே எண்ணம்.

நிறைவேற அன்பு வாழ்த்துகள் லீலா!



source https://www.vikatan.com/news/women/story-of-tiruppur-leela-who-feeds-100-persons-a-day-she-inspires

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக