* உலகெங்கும் கொரோனாவுக்கு மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்துகொண்டிருக்கும்போது, கொரோனா தடுப்பூசியின் காப்புரிமை மூலம் பெரும் பணம் சம்பாதிக்க மருந்து நிறுவனங்கள் ஆசைப்படலாமா?
* வெளிநாட்டுத் தடுப்பூசிகளுக்கான அனுமதி விவகாரத்தில் இந்தியா தாமதம் காட்டுவது சரியா?
இந்த இரண்டு கேள்விகளை எழுப்பியபடி, கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் ஏற்படுத்தும் பாதிப்புகளை உலகமே பெரும் கவலையுடன் பார்க்கிறது. இதன் பேரழிவைக் கட்டுப்படுத்த ஒரே ஒரு வழிதான் நம் முன்னே இருக்கிறது. அது, எல்லோருக்கும் மிக விரைவாகத் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வது. நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் அளவுக்கு மருத்துவமனைகளில் இடம் இல்லாதது, தடுப்பூசிகளும் இல்லாதது என இரட்டை தட்டுப்பாடுகளால் இந்தியா தடுமாறிக்கொண்டிருக்கிறது.
தடுப்பூசி போடாவிட்டால், கொரோனா தொற்று மிக அதிகம் பேரை பாதித்து ஏராளமான மரணங்களை ஏற்படுத்திவிடும். அது மட்டுமல்ல, இப்படி நிறைய பேருக்குக் கொரோனா வைரஸ் பரவும்போது, அந்த வைரஸ் பலமுறை உருமாற்றம் அடையும் ஆபத்தும் இருக்கிறது. உருமாறிய கொரோனா இன்னும் பல விபரீதங்களை ஏற்படுத்த வல்லது. உருமாறிய வைரஸ்கள் பற்றி சரியாக ஆய்வுகள் செய்யாத இந்தியா போன்ற தேசத்தில் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.
எனவே, கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு உரிய சிகிச்சைக்கு வழிசெய்வது போலவே, தடுப்பூசிப் பணிகளை விரைவுபடுத்த வேண்டிய கட்டாயமும் அரசுக்கு இருக்கிறது.
அதற்கு இந்தியாவில் தயாராகும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்ஸின் மட்டுமே போதுமானதில்லை. வெளிநாட்டுத் தடுப்பூசிகளும் தேவைப்படும்.
எந்த நாட்டில் உருவான தடுப்பூசியாக இருந்தாலும், அதை இந்தியாவில் பயன்படுத்த சில நிபந்தனைகள் உண்டு. இந்திய மக்களிடம் அதைப் பரிசோதனை செய்ய வேண்டும். அந்தப் பரிசோதனை முடிவுகளை வைத்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய இரண்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் சோதனை நடத்தி அவசரக் கால பயன்பாட்டுக்கு அனுமதி பெற்றன. ஸ்புட்னிக் தடுப்பூசி வெளிநாட்டில் தயாரானாலும், இந்தியாவில் பரிசோதனை நடத்தியபிறகே இந்த அனுமதி கொடுக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இந்தியத் தடுப்பூசிகளை மட்டும் வைத்தே கொரோனாவைக் கட்டுப்படுத்திவிட முடியும் என மத்திய அரசு நினைத்தது. இரண்டாவது அலையின் விபரீதம் உணர்ந்து, வெளிநாட்டுத் தடுப்பூசிகளுக்கான அனுமதியில் சில மாற்றங்களைச் செய்தது. 'இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் அங்கீகாரம் பெற்ற மற்ற நாடுகளின் மருத்துவ அமைப்புகள் அங்கீகரித்தாலே போதும். அதற்கு நாங்கள் உடனே அனுமதி கொடுக்கிறோம்' என்று விதியைத் திருத்தியது. அதேபோல, 'ஆரம்பத்திலேயே இந்திய மக்களிடம் பரிசோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை. அனுமதி கொடுத்த 30 நாட்களுக்குள் அதைச் செய்தால் போதும்' என்றும் விதியை மாற்றியது. ஆனாலும், உலகின் பல நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளை உருவாக்கிவரும் மாடெர்னா மற்றும் ஜான்சன் ஆண்டு ஜான்சன் நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை.
ஃபைஸர் மட்டும் இந்தியாவுக்குத் தடுப்பூசி தர முன்வந்துள்ளது.''எங்கள் தடுப்பூசியை ஏற்கெனவே பல நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் போட்டுக்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் அதிகம் போடப்பட்டது எங்கள் தடுப்பூசிதான். பாதுகாப்பானது என உலகம் முழுக்க நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்பிறகும் இந்தியாவில் பரிசோதனை தேவையில்லை. உடனடியாக அனுமதி கொடுத்தால் இந்தியாவுக்கு தடுப்பூசி தரத் தயார். ஆனால், அரசாங்கத்துக்கு மட்டும்தான் தருவோம்'' என்கிறார் ஃபைஸரின் தலைமைச் செயல் அதிகாரி ஆல்பர்ட் பர்லா.
இந்நிலையில், ''கொரோனா தடுப்பூசிகள் மீதான காப்புரிமையை மருந்து கம்பெனிகள் விட்டுத் தர வேண்டும்'' என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக ஆக முயன்ற மூத்த செனட் உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ், ''உலகெங்கும் லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு ஆபத்தான சூழலில் தவிக்கும்போது, காப்புரிமையை விடாப்படியாக மருந்து நிறுவனங்கள் வைத்திருக்கக்கூடாது. காப்புரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் ஏழை நாடுகள் அவர்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை அவர்களே குறைந்த செலவில் தயாரித்துக்கொள்ள முடியும். இதுதான் மருத்துவ அறம். ஏழை நாடுகளின் நலனுக்காக மட்டுமின்றி, மேற்கத்திய உலகத்தின் நலனுக்காகவும்தான் இதைச் சொல்கிறேன். உலகின் எந்த மூலையில் கொரோனா மிச்சம் இருந்தாலும், அது உலகம் முழுக்க மீண்டும் பரவும்'' என்கிறார்.
உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் ஜிப்ரெயசஸ், ''அசாதாரணமான இந்த சூழலில் ஏழை மக்களுக்கு மருந்து நிறுவனங்கள் உதவவில்லை என்றால், வேறு எப்போது உதவி செய்வீர்கள்?'' என்று காட்டமாகக் கேட்கிறார்.
அமெரிக்கா முழுக்க இதேபோன்ற குரல்கள் வலுத்து வருவதால், உலக வர்த்தக அமைப்பில் இதுபற்றிப் பேசி, கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையைத் தற்காலிகமாக ரத்து செய்யலாமா என ஆலோசனை நடக்கிறது. அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் இதை உறுதி செய்துள்ளார்.
மருந்து நிறுவனங்கள் மனம் வைத்தால், உலகத்துக்கே மலிவுவிலையில் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும். விடியலின் பாதையும் பலரின் வாழ்வில் தெரியும். அமெரிக்கா மட்டுமின்றி பல ஐரோப்பிய நாடுகளிலும் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக மருந்து நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுப்பார்களா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!
source https://www.vikatan.com/news/policies/is-it-moral-to-protect-life-saving-drugs-in-the-name-of-patent
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக