Ad

செவ்வாய், 25 மே, 2021

'14 நாளில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதி; ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பாதித்தவர்கள் சொல்வதென்ன?'

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிர்த்தியாகம் செய்து கடந்த மே 22-ம் தேதியுடன் மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. ”துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையுடன் கருணை அடிப்படையில் அரசு வேலையும், பலத்த காயமடைந்தவர்களுக்கு அரசு வேலையும் வழங்கப்படும்” என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்போது கூறியிருந்தார். உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைக்கும்போதே இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. இதில், உயிரிழந்த சண்முகத்தின் பெற்றோர், ’அரசின் இழப்பீட்டுத் தொகையோ, அரசு வேலையோ வேண்டாம்’ எனக் கூறிவிட்டனர். கடந்த 27.10.18-ல் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களில் ஒருவர், பலத்த காயமடந்த 5 பேர், பலத்த காயமடைந்தவர்களின் 4 வாரிசுதாரர்கள் என 19 பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள்

இதில், 17 பேருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் கிராம உதவியாளர் பணியிடமும், 2 பேருக்கு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையில் சமையலர் பணியிடமும் வழங்கப்பட்டது. உயிரிழந்த கிளாட்சன், அந்தோணி செல்வராஜ் ஆகிய இருவரின் வாரிசுதாரர்களுக்கு, அந்நாளில் அரசுப்பணி ஒதுக்கிட போதிய (18 வயது) வயது நிரம்பவில்லை என்பதால், பின்னர் பணி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு கடந்த 2020-ல் பணி (கிராம உதவியாளர்) வழங்கப்பட்டது.

இதில் பெரும்பாலானோர் பட்டயம், பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள். ‘கண் துடைப்பிற்காக ஏதோ ஒரு பணியிடத்தை எங்களுக்கு அரசு ஒதுக்கியுள்ளது. எங்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கிடவேண்டும்’ எனப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர் முதல் முதல்வர் வரை கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களும், பல ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்

சாத்தான்குளத்தில் போலீஸாரால் தந்தை, மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிஸுக்கு, கடந்த 27.07.20-ல் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் ’இளநிலை வருவாய் ஆய்வாளர்’ பணி வழங்கப்பட்டது. இதையடுத்து துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை மீண்டும் வலுத்தது. “உயிரிழப்பு என்பது ஈடுகட்ட முடியாததுதான். அதற்காக பணி வழங்கியதில் அரசு பாரபட்சத்துடன் செயல்படுகிறது. எங்களுக்கும் கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்" என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ’தி.மு.க ஆட்சி அமைந்ததும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவர், பலத்த காயமடைந்தவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்படும்’ என தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார். தி.மு.க ஆட்சி அமைந்து ஸ்டாலின் முதல்வரான 14 நாட்களிலேயே சொன்னபடியே கல்வித் தகுதியின் அடிப்படையில் 19 பேருக்கு பணி நியமன ஆணைகளை கடந்த மே 21-ம் தேதி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 8 பேருக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியும், 4 பேருக்கு இளநிலை உதவியாளர் பணியும், 3 பேருக்கு ஊர்நல அலுவலர் (நிலை-2) பணியும், ஒருவருக்கு காசாளர் பணியும், ஒருவருக்கு ஈப்பு ஓட்டுநர் பணியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பணி நியமன ஆணை வழங்கும் முதல்வர்

துப்பாக்கிச்சூட்டில் பாதிகப்பட்டவர்களுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணை வழங்கிய புகைப்படத்தையும், முதல்வர் ஸ்டாலின் வழங்கிய பணி நியமன ஆணை வழங்கிய புகைப்படத்தையும் ஒன்றிணைத்து ”இதில் எது உண்மை” என குறிப்பிட்டு சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்தப்பதிவிற்கு, “இரண்டும் உண்மைதான். அது கண் துடைப்பிற்காக வழங்கப்பட்ட பணி நியமன ஆணை. இது, தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்ட நியமன ஆணை” எனக் குறிப்பிட்டு பரப்பி வருகின்றனர் தி.மு.கவினர்.

துப்பாக்கிச்சூட்டில் வாயில் சுடப்பட்டு உயிரிழந்த ஸ்னோலினின் தாயார் வனிதாவிடம் பேசினோம், “என் செல்ல மகள் என்னை விட்டுப் பிரிஞ்சு மூணு வருசம் ஆச்சுது. எதுனாலயும் அவளோட இறப்பை ஈடுகட்ட முடியாது. அவளோட ரெண்டாவது அண்ணன் (ஜான்ராஜ் மேக்டன்) மேல ரொம்ப பாசமா இருப்பா. அதனால கருணை அடிப்படையிலான வேலையை அவனுக்கே கொடுக்க சம்மதிச்சோம். கல்வித்தகுதியின் அடிப்படையில வேலை தரணும்னு முதலில் நான்தான் கலெக்டர்ட்ட மனு கொடுத்தேன். தூத்துக்குடி கலெக்டர் ஆபிஸ்ல நடந்த கொரோனா தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு வந்தபோதும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தும் எந்தப் பலனுமில்ல.

ஆட்சியர் செந்தில்ராஜ், பிரின்ஸ்டன், வனிதா, விஜயகுமார்

அதுக்குப் பிறகுதான், எம்.பி கனிமொழியம்மாவை நேர்ல சந்திச்சும் பாதிக்கப்பட்ட எல்லாருக்குமா சேர்த்து மனு கொடுத்தேன். ‘தி.மு.க ஆட்சி அமைஞ்சதும் உங்க கோரிக்கையை நிறைவேத்துறோம்’னு சொன்னாங்க. அதே மாதிரி நிறைவேறிடுச்சு. ரொம்ப சந்தோஷமா இருக்கி (அவர்களின் பேச்சு வழக்கில்’இருக்கு’ என்பதை ’இருக்கி’ என்பார்கள்). என் கணவர் கடல் தொழிலுக்குப் போயிதான் எங்க வீட்டுப்பாட்டை கழிச்சுக்கிட்டிருந்தோம். இப்போ, ரெண்டாவது மகனுக்கு கவர்மெண்ட் வேலை கிடைச்சதுனால ஓரளவு கஷ்டம் நீங்கிடும்” என்றார்.

கலவரத்தின்போது வலது தொடையில் துப்பாக்கிக் குண்டு பட்டு கால் பாதிக்கப்பட்ட விஜயகுமார், “வலது கால்ல குண்டு துளைச்சதுல எலும்பு நொறுங்கிடுச்சு. தூத்துக்குடி, மதுரை அரசு மருத்துவமனையிலன்னு இதுவரை காலில் 10 ஆபரேசன் நடந்துருக்கு. வலது கால் உயரம் குறைவாத்தான் இருக்கும். என்னால இயல்பா நடக்க முடியாது. ஒன்றரை வருசம் வீட்ல படுத்த படுக்கையாத்தான் இருந்தேன். தேர்தலுக்கு முன்னால, கோவில்பட்டியில நடந்த, ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில கலந்துகிட்டு கல்வித்தகுதிக்கு ஏற்ற வேலை தரணும்னு மனு கொடுத்தேன். தேர்தல் பிரசாரத்துலயும் எங்களோட கோரிக்கைகளை நிறைவேத்துறதா ஸ்டாலின் சார் சொன்னாங்க. சொன்னபடியே செஞ்சுட்டாங்க. ரொம்ப மன நிறைவா இருக்கு. என்னை நம்பித்தான் எங் குடும்பம் இருக்கு. இனி குடும்பத்தை நல்லாப் பார்த்துக்குவேன்” என்றார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்

“ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் பலர் மீது வழக்கு போடப்பட்டிருந்ததுனால உயர்படிப்பு படிக்க முடியாமலும், வேலைக்கு சேரமுடியாமலும், வெளிநாட்டு வேலைக்குப் போக பாஸ்போர்ட் எடுக்க முடியாமலும் ரொம்ப சிரமப்பட்டாங்க. இந்த நிலைமையில வழக்குகளைத் திரும்பப் பெற்றதை வரவேற்கிறோம். போலீஸாரால் கைது செய்யப்பட்ட சிலருக்கு காயமும், பலருக்கு மன உளைச்சலும் ஏற்பட்டதுனால ஒருநபர் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைச்ச 93 பேருக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் அறிவிச்சதுக்காகவும் அரசுக்கு நன்றியைத் தெரிவிச்சுக்கிறோம்” என்றனர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினர்.

துப்பாக்கிச்சூட்டில் வலது கால் அகற்றப்பட்டு செயற்கைக்கால் பொட்ருத்தப்பட்டுள்ள பிரின்ஸ்டன், “முதல்முறை பணி ஒதுக்கப்பட்டபோது கிராம தலையாரி (கிராம உதவியாளர்) வேலை ஒதுக்கினாங்க. இப்போ, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துல இளநிலை உதவியாளர் கிரேடில் ஊர்நல அலுவலரா தகுதிக்கேற்ற வேலை கொடுத்திருக்காங்க. அதற்காக அரசுக்கு நன்றியை சொல்லிக்கிறேன். அதே நேரத்துல துப்பாக்கிச்சூட்டுல என்னோட வலது கால் உருக்குலைஞ்சுட்டு. ஆபரேசன்ல காலை நீக்கிட்டாங்க. 80% கால் ஊனமாகி, செயற்கைக்கால் உதவியில மெது மெதுவா நடக்குறேன். 10 நிமிசத்துக்கு மேல பயணம் செய்ய முடியாத என்னால எப்படி 29 கி.மீ தூரம் இருக்குற ஓட்டப்பிடாரத்துக்கு தினமும் போயிட்டு வர முடியும்? பணி வழங்கப்பட்டதுல, அஞ்சு பேருக்கு தூத்துக்குடியிலயே பணி ஒதுக்கியிருக்காங்க.

வலது காலை இழந்த பிரின்ஸ்டன்

என்னோட உடல் நிலை கருதி தூத்துக்குடியிலேயே பணி ஒதுக்கித் தரணும்” என்றார் கண்ணீருடன். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜிடம் பேசினோம், “பிரின்ஸ்டன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கிறார். அதனால், அவர் பணி நியமன ஆணையைப் பெறவில்லை. தொற்றிலிருந்து குணமாகி பணி நியமன ஆணை பெற வரும்போது, அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அதே நிலையிலான பணியை, காலியிடத்தைப் பொறுத்து தூத்துக்குடி ஒன்றியத்திலோ அருகிலுள்ள ஊராட்சி ஒன்றியத்திலோ மாற்றுப் பணியிடமாக ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார் உறுதியாக.

கூடங்குளம் வழக்குகள்!

2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2014-ம் ஆண்டு இறுதி வரை, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களின் மீது 350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற அறுவுறுத்தலின்படி 245 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. தற்போது நிலுவையில் இருக்கும் 105 வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன், “அணு உலைக்கு எதிராக அறவழியில் போராடிய எளிய மக்கள் மீது தேசத் துரோகம்(124 ஏ), தேசத்தின் மீது போர் தொடுத்தல் (121, 121ஏ) ஆகிய பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் 37 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வள்ளியூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. 68 வழக்குகள் முதல் தகவல் அறிக்கை நிலையிலேயே இருக்கின்றன. வழக்குகள் காரணமாக, படித்த இளைஞர்கள்கூட வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முடியாத நிலை இருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின்போது இந்த வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதனால், விரைவில் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.

கூடங்குளம் போராட்டத்தில் மக்கள்

குமரி மக்களின் கூக்குரல்!

சர்வதேச சரக்குப் பெட்டக மாற்றுமுனையத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள் மீதும், ஒக்கி புயல் நேரத்தில் கடலில் உயிருக்குப் போராடிய தங்கள் உறவுகளை உயிரோடு மீட்கக்கோரியும் போராடியவர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று குமரி மாவட்ட மக்கள் சார்பாக நெய்தல் மக்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளரான குறும்பனை சி.பெர்லின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ”குமரி மாவட்டத்தில் சரக்குப் பெட்டக முனையம் என்ற பெயரில் மீனவர் நலனுக்கு எதிரான திட்டம் கொண்டுவருவதை எதிர்த்தும் ஒக்கி புயலின் போதும் போராடியவர்கள் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. அதனால் வெளிநாட்டு வேலைக்காக பாஸ்போட் பெற முடியாத நிலையில் இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்த வழக்குகள் காரணமாக இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. அதனால், வழக்குகளை ரத்து செய்ய முதல்வர் முன்வர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/victims-of-the-thoothukudi-protest-are-happy-that-the-chief-minister-has-fulfilled-his-promise-in-14-days

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக