செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 பேர் பலி!
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை கலக்கமடைய செய்திருக்கிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி சராசரியாக 1,500 -க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடும் பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. ஆக்ஸிஜன் கிடைக்காமல் சுமார் 11 நோயாளிகள் நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர் என்ற தகவலும் பரவியது. நோயாளிகளின் மரணத்திற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையே காரணம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர், ``மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பில் இருந்தது. இருப்பினும் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. 11 பேர் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.
source https://www.vikatan.com/news/general-news/05-05-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக