சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 242 ரன்கள் பின்தங்கியிருக்கிறது இந்தியா. #INDvENG
6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் என்கிற நிலையில் நான்காம் நாள் ஆட்டத்தை சென்னையின் ரவிச்சந்திரன் அஷ்வினும், வாஷிங்டன் சுந்தரும் தொடங்கினார்கள். 80 ரன்கள் கூட்டணிப்போட்டு இந்த இருவரும்தான் இந்தியாவின் சரிவை ஓரளவு தடுத்து நிறுத்தினார்கள்.
அஷ்வின் லீச்சின் பந்தில் 31 ரன்களில் அவுட் ஆனாலும், வாஷிங்டன் சுந்தர் சிறப்பான இன்னிங்ஸ் ஆடினார். 12 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் கிட்டத்தட்ட ஒருநாள் போட்டி போன்று 138 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாகவே இருந்தார் சுந்தர். ஆனால், எதிர்முனையில் விக்கெட்கள் தொடர்ந்து விழுந்ததால் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா.
241 ரன்கள் பின்தங்கி ஃபாலோ ஆனில் இருந்த இந்தியாவை, இங்கிலாந்து மீண்டும் பேட்டிங் செய்ய அழைக்கவில்லை. தங்களின் பெளலர்கள் களைத்துப்போயிருப்பதால் இன்னும் கொஞ்சம் ரன்களை சேர்த்து லீட் எடுக்கலாம் என்கிற முடிவில் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட வந்தது இங்கிலாந்து.
இங்கிலாந்தின் ஸ்பின்னர்கள் பெஸ் 4 விக்கெட்டும், லீச் 2 விக்கெட்களும் வீழ்த்தியதால், இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரையே அஷ்வினிடம் கொடுத்தார் கேப்டன் கோலி. முதல் பந்திலேயே விக்கெட் விழுந்தது. ரோரி பர்ன்ஸ் டக் அவுட். நான்காம் நாளின் முதல் செஷனின் முடிவில் 1 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்து 242 ரன் லீடிங்கோடு டாப் கியரில் இருக்கிறது இங்கிலாந்து. இன்றைய நாள் டீ பிரேக் வரை பேட் பிடித்துவிட்டு அதன்பிறகு இந்தியாவை, இங்கிலாந்து சேஸ் செய்யச்சொல்லலாம்.
இப்போதைய நிலவரப்படி சென்னை டெஸ்ட்டில் இங்கிலாந்தின் கையே ஓங்கியிருக்கிறது. இந்தியா தோல்வியைத் தவிர்க்குமா என்பது இரண்டாவது இன்னிங்ஸில் கோலி, ரோஹித் எப்படி பேட் செய்கிறார்கள் என்பதைப் பொருத்தே இருக்கிறது. ஆனால், ''கங்கா முழுசா சந்திரமுகியா மாறிட்டிருக்கா'' என்பதுபோல சேப்பாக்கம் மைதானம் அப்படியே பெளலிங்கிற்கு சாதகமாக மாறிக்கொண்டிருக்கிறது. இனி சுழற்பந்து வீச்சுதான் எடுபடும் என்பதால் நான்காம் இன்னிங்ஸில் சேஸிங் செய்து வெல்வது என்பது பேரதிசயம்தான்!
source https://sports.vikatan.com/cricket/india-all-out-for-337-runs-in-chennai-tests-first-innings
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக