கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ராஜ்(35). ராணுவத்தில் பணிபுரிந்த இவர் நடத்தை சரியில்லாத காரணத்தால் அப்பணியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் வேறு வேலைக்குச் செல்லாமல் ஊரில் சுற்றிக்கொண்டிருந்திருக்கிறார். மேலும் அவர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முளகுமூடு அருகே பூந்தோப்பு பகுதியை சேர்ந்த மேரி ஜெயா (45) என்பவர், ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றிருக்கிறார். ரேஷன் கடை திறக்காததால் அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மெர்லின் ராஜ், அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் செயினை விடாமல் கூச்சல்போட்டிருக்கிறார் அந்த பெண். இதைக்கேட்டு அப்பகுதியினர் அங்கு ஓடிவந்ததால் அந்த பெண்ணை அருகில் உள்ள குளத்தில் தள்ளிவிட்டுவிட்டு தப்பி ஓடமுயன்றார் மெர்லின் ராஜ்.
ஆனால் அப்பகுதி மக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று குளத்தில் தள்ளிவிடப்பட்ட மேரி ஜெயாவை தேடினார்கள். ஆனால் அவரது சடலத்தைதான் தீயணைப்பு வீரர்களால் மீட்க முடிந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே பொதுமக்கள் தாக்கியதாலும், பொதுமக்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடியபோதும் கீழே விழுந்த மெர்லின் ராஜிற்கு காயம் ஏற்பட்டது. அவரையும் போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். மெர்லின் ராஜ் மீது வீடு புகுந்து நகை திருடுவது, வழிப்பறி, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், தக்கலை மற்றும் திருவட்டார் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு மெர்லின் ராஜ் பலமுறை சிறை சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து திருவட்டாறு போலீஸார் கூறுகையில், "மெர்லின் ராஜின் ராணுவத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். அவரது நடத்தை சரியில்லை என கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரை ராணுவத்தில் இருந்து வெளியேற்றியிருக்கிறார்கள். அதன் பிறகு தனது உடல் வலிமையைக்காட்டி பலரை அச்சுறுத்தி நகை, பணம் பறித்து வந்திருக்கிறார். இப்போது நகை பறிக்க முயன்று பெண்ணை கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவ்வந்துள்ளது. அவர் காயம் அடைந்து சிகிச்சையில் இருப்பதால், கூடுதல் விபரங்கள் குறித்து விரைவில் விசாரணை நடத்துவோம்" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/former-army-man-arrested-in-murder-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக