Ad

புதன், 3 பிப்ரவரி, 2021

தங்கம் கடத்தல் வழக்கு: 98 நாள்கள் சிறை... 3 வழக்கிலும் ஜாமீன்! புத்தகத்துடன் வெளியேறிய சிவசங்கரன்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில், ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவி செய்ததாக கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் கைது செய்யப்பட்டார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவசங்கரன், ஸ்வப்னாவுடன் பேசுவதற்காக தனி பிளாட் எடுத்தது விசாரணையில் அம்பலமானது.

தங்கம் கடத்தலுக்கு கறுப்பு பணம் பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு, சுங்கத்துறை பதிவுசெய்த தங்கம் கடத்தல் வழக்கு மற்றும் டாலர் கடத்தல் வழக்கு என சிவசங்கரன் மீது மூன்று வழக்குகள் பதியப்பட்டிருந்தன. அமலாக்கத்துறை பதிவு செய்த கறுப்பு பணம் வெள்ளையாக்கப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ம் தேதி சிவசங்கரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தங்கம் கடத்தல் வழக்கில் சுங்கத்துறை நவம்பர் மாதம் கைது செய்தது. டாலர் கடத்தல் வழக்கில் கடந்த ஜனவரி மாதம் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ்

இதற்கிடையில் தங்கம் கடத்தல் வழக்கில் சுங்கத்துறை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததை அடுத்து நீதிமன்றம், கடந்த வாரம் சிவசங்கரனுக்கு ஜாமின் வழங்கியது. கறுப்பு பணம் சம்பந்தமாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் ஏற்கனவே கேரள உயர்நீதி மன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த நிலையில் டாலர் கடத்தல் வழக்கில் கொச்சி பொருளாதார விசாரணை நீதிமன்றம் சிவசங்கரனுக்கு நேற்று ஜாமீன் வழங்கியது.

Also Read: கேரளா தங்கம் கடத்தல்: ஸ்வப்னாவுடன் சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் கைது!

இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் இரண்டுபேர் ஜாமின் வழங்கியதன் பேரிலும், ஒவ்வொரு திங்கள்கிழமைகளிலும் சுங்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலும் சிவசங்கரனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஜாமின் வழங்கப்பட்ட கோர்ட் ஆர்டரை சிவசங்கரனின் உறவினர்கள் காக்கநாடு மாவட்ட சிறையில் நேற்று சமர்பித்தனர். இதையடுத்து 98 நாட்கள் சிறையில் இருந்த சிவசங்கரன் விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன்

சிறையில் இருந்த சமயத்தில் சிவசங்கரன் படித்த புத்தகங்களை சிறை அதிகாரிகள் அவரிடம் ஒப்படைத்தனர். புத்தகங்களுடன் வெளியே வந்த சிவசங்கரனை உறவினர்கள் காரில் திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த சிவசங்கரன் செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/kerala-gold-smuggling-case-sivasankaran-came-out-in-bail

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக