கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன. 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் கடந்த மாதமே கல்வி நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 8-ம் தேதியிலிருந்து 9 மற்றும் 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கல்வி நிலையங்கள் திறக்கப்படவிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதில் ஏகப்பட்ட குழப்பங்களும் குளறுபடிகளும் இருப்பதாக மாணவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
Also Read: `72 மணி நேரம் முன்பு கொரோனா டெஸ்ட்; செய்யாவிடில் அனுமதியில்லை!' - மாணவர்களைக் குழப்பும் கல்லூரிகள்
`72 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து அதற்கான முடிவுகளுடன் வந்தால்தான் கல்லூரிக்குள் அனுமதி’ என சில கல்லூரிகளில் மட்டும் அறிவுறுத்தியிருப்பதாக சில தினங்களுக்கு முன்பு புகார் கிளம்பியது. ``அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அப்படியான நிபந்தனைகள் விதிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால், ஒரு சில கல்லூரிகளில் மட்டும் அடிப்படை புரிந்துணர்வற்ற சில நிபந்தனைகள் விதிக்கப்படுவது மாணவர்களைக் குழப்பத்தில் தள்ளுகிறது. கொரோனா காலத்தில் ஒவ்வொரு கல்வி நிலையமும் ஒவ்வொரு விதமான விதிமுறைகளை விதிப்பது சரியானது அல்ல" என்று பெற்றோர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.
அதேபோலத்தான் இப்போதும் ஒரு குழப்பம் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் மையம்கொண்டுள்ளது. பிப்ரவரி 8-ம்தேதி அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும். வாரத்தில் 6 நாள்கள் வகுப்புகள் நடக்கும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், சில கல்லூரிகளில் மட்டும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் வந்தால் போதும் இப்போது வர வேண்டாம் என்று கூறியிருப்பதாகச் சொல்கின்றனர். இப்படி கல்லூரி திறப்பு தொடர்பாக ஒவ்வொரு கல்லூரியும் தங்களது வசதிக்கேற்ப அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக கல்லூரி பேராசிரியர்கள் சிலரிடம் பேசியபோது, ``இப்போது ஆன்லைன் வகுப்புகள் நடப்பதால் ஊழியர்களுக்கு பாதி ஊதியம்தான் வழங்கப்படுகிறது. ஆனால், மாணவர்களிடம் முழு கட்டணத்தையும் வசூலித்துவிட்டனர். ஆகையால், இந்த ஆண்டு சில தனியார் கல்வி நிறுவனங்கள் நல்ல லாபத்தில் கொழிக்கின்றன.
பிப்ரவரி 8-ம் தேதி, அரசு அறிவித்தபடி கல்லூரிகளைத் திறந்துவிட்டால் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் இப்போது வர வேண்டாம் என்று கூறியுள்ளனர். கல்லூரிகளைத் திறக்க வேண்டும்; அதே நேரம் மாணவர்கள் வருகையைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதுதான் அரசின் உத்தரவு.
எனவே அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஏன் திறக்கவில்லை எனக் கேட்டால் மாணவர்கள் வருவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லிவிடுவார்கள். பாதுகாப்பு காரணமாக சில முடிவுகளை எடுக்கும் கல்லூரிகளும் இருக்கின்றன” என்கின்றனர் அவர்கள்.
இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலர் அபூர்வாவிடம் பேசினோம், ``8-ம் தேதி அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட வேண்டும் என்றுதான் அறிவுறுத்தியிருக்கிறோம். 8-ம் தேதிக்குப் பிறகுதான் என்ன நடக்கிறது என்று தெரியும். இதுகுறித்து நான் விசாரிக்கிறேன்” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/education/some-colleges-didnt-request-all-students-to-present-in-college-next-week
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக