Ad

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

`வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தென்னிந்தியாவிலும் வெடிக்கும்!’ - எச்சரிக்கும் சி.மகேந்திரன்

``புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி தமிழகத்தில் டிராக்டர் பேரணி போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நானும் ஒரு விவசாயி எனக் கூறும் முதல்வர் பழனிசாமி இதற்காக வெட்கப்பட வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் தெரிவித்தார்.

போராட்டம் குறித்து பேசிய மகேந்திரன்

தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த மகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், ``மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் என்பது கொரோனா பட்ஜெட் போன்று உள்ளது. கொரோனாவை காரணமாக கூறி அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான கடன் தள்ளுபடி தொடர்பாக அறிவிப்பு ஏதும் இல்லாததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். கார்ப்ரேட் நிறுவனங்களை கருத்தில் கொண்டே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க இதில் சிறப்பு திட்டங்கள் ஏதும் இடம்பெறவில்லை. இதனை சுயசார்பு பட்ஜெட் என கூறுவது வேடிக்கையாக உள்ளது.

மகேந்திரன்

டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு செவி கொடுத்து கேட்க மறுக்கிறது. போராட்ட களத்தில் நான் 15 நாட்கள் விவசாயிகளோடு தங்கியிருந்தேன். அவர்கள் உணர்வு பூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கான நிதியை ஒவ்வொரு விவசாயிகளிடமிருந்து கிராம பஞ்சாயாத்து முறையில் வரி வைத்து அவர்களாகவே வசூலித்து போராட்டத்திற்கான செலவினை செய்து வருகின்றனர். இதில் பிறர் பங்களிப்பு ஏதும் கிடையாது.

குடியரசு தினத்தன்று நடைபெற்ற பேரணியை சிலர் சதி திட்டம் தீட்டி செங்கோட்டைக்கு அழைத்துச் சென்றனர். அந்த பகுதிக்கு சென்று வந்தவர்கள் கூறியதிலிருந்து உண்மை வெளியே வந்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் நடைபெறும். வடஇந்தியாவில் நடைபெறும் போரட்டங்கள் போல் தென்னிந்தியாவிலும் இந்த போராட்டங்கள் விரைவில் வெடிக்கும்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி தமிழகத்தில் டிராக்டர் பேரணி போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நானும் ஒரு விவசாயி எனக் கூறும் முதல்வர் பழனிசாமி இதற்காக வெட்கப்பட வேண்டும். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பலரும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் என்பது புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படுகிறது. தற்போதுள்ள இந்தியா என்பது லஞ்சம், ஊழல் நிறைந்த நாடாக இருப்பதால், படித்த இளைஞர்கள் பலர் அதனை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்” தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/protest/c-mahendran-says-the-farmer-protest-will-start-in-south-india-also

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக