இந்திய சினிமாவின் முகம் மாறத்தொடங்கியிருக்கிறது. சினிமாவின் வடிவம், கதைசொல்லல் முறை, தொழில்நுட்பம் மட்டுமல்லாது சினிமா பேசும் உள்ளடக்கமும் மாறியிருக்கிறது. சமூக வலைதளங்களின் வளர்ச்சி, ஓ.டி.டி போன்ற புதிய களங்கள் ஆகியவை காரணங்கள். தமிழ் சினிமாக்கள் சாதிப் பிரச்னைகளைப் பேசுபொருளாகக் கொண்டு உருவாகின்றன என்றால், இந்தியளவில் பல சினிமாக்கள் பெண்களின் பிரச்னைகள் குறித்து வெளிப்படையாகப் பேசத் தொடங்குகின்றன. வெப்சீரிஸ்களும் சாதியம், மதவாதம், அரசியல் பின்னணிகள், பெண்கள் பிரச்னைகள் ஆகியவற்றைப் பற்றிப் பேசத்தொடங்கியிருக்கின்றன. சமீபத்தில் வெளியான மூன்று சினிமாக்கள் பெண்களின் வாழ்க்கையை அணுகியவிதம் குறித்துப் பார்ப்போம். மூன்றுமே ஓ.டி.டி தளத்தில் வெளியான சினிமாக்கள்.
ரேணுகா சகானே இயக்கத்தில் வெளியான `Tribhanga' திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் வாழ்க்கையையும் வாழ்க்கை பெண்களையும் அணுகும் விதம் குறித்துப் பேசிய படம்.
எழுத்தாளர் நயன்தாராவுக்குக் குழந்தைகளையும் குடும்ப வேலைகளையும் கவனிப்பதைவிடவும் எழுதுவதில் மீதுதான் தீராத ஆர்வம். இதனால் மாமியாரால் அவமானப்படுத்தப்பட்டு தன் இரு குழந்தைகளுடன் குடும்பத்தை விட்டு வெளியேறுகிறார். அவரது இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடிய, ஓவியர் ஒருவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்கிறார். நயன்தாராவின் இரண்டாவது கணவரால் பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளான மகள் அனு, அந்தக் கசப்பு ததும்பும் அனுபவத்தைத் தாயின் மீதான வெறுப்பாக மாற்றிக் கொள்கிறார். அனுவும் மரபான குடும்ப வாழ்க்கைக்குள் சிக்கிக்கொள்ளாமல் ரஷ்ய இளைஞருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்கிறார். ஆனால், அந்த வாழ்க்கையும் பிரிவில் முடிய, நடிப்பிலும் ஒடிசி நடனத்திலும் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார். அனுவின் மகள் மாஸா தன் அம்மா, பாட்டி வாழ்க்கைக்கு முற்றிலும் மாறாக, கிருஷ்ணபக்தி கொண்ட ஒரு மரபான குடும்பத்துக்கு மருமகளாகிறாள். நயன்தாராவாக தான்வி ஆஷ்மி, அனுவாக கஜோல், மாஸாவாக மிதிலா பால்கர் நடித்திருக்கிறார்கள்
`மரபான குடும்ப வாழ்க்கையை ஒரு பெண் தேர்ந்தெடுப்பதுதான் சரியானது' என்ற முடிவுக்குக்கூட இந்தப் படத்தின் மூலம் பார்வையாளர்கள் வந்துவிடக்கூடிய அபாயம் உள்ளது. அதேநேரத்தில் மரபு மற்றும் மரபை மீறிய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பழியையும் சவால்களையும் ஒரு பெண்ணே சுமக்க வேண்டிய அவலத்தை இந்தப் படம் பேசுகிறது. மணவிலக்கான அல்லது லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழும் ஒரு பெண்ணின் குழந்தை சந்திக்கும் அவமானங்களைக் காட்சிப்படுத்துகிறது. மரபு மீறிய வாழ்க்கையிலும் ஆண் எப்படி ஆணாகவே இருக்கிறான் என்பதை நயனின் இரண்டாவது கணவன் நிரூபிக்கிறான். இரண்டு தலைமுறையைச் சேர்ந்த பெண்களும் தங்கள் தாய்களைப் புரிந்துகொள்ளும் இடத்தில் படம் நிறைவுறுகிறது.
இரண்டாவது படமும் அதே நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான, சமூக வலைதளத்தில் விவாதிக்கப்பட்ட `Is love enough sir?' திரைப்படம்.
அமெரிக்காவில் இருந்து வந்து மும்பையில் வசிக்கும் அஷ்வின் என்ற இளைஞனின் திருமணம் நின்றுபோகிறது. அவன் வீட்டில் பணிப்பெண்ணாகப் பணிபுரியும் ரத்னா, கிராமப்புறத்திலிருந்து வந்த இளம் விதவை. தன் தங்கையின் திருமணத்துக்காக சம்பாதிக்கும் ரத்னா, தையல் பயிற்சியும் கற்கிறார். அஷ்வினுக்கும் ரத்னாவுக்கும் இயல்பாக மலரும் காதலை ஏற்க இயலாத சூழலில் உள்ள ரத்னா, இறுதியில் எப்படிக் காதலை ஏற்று `சார்' என்பதிலிருந்து 'அஷ்வின்' என்று அவனை அழைக்கிறார் என்று கவித்துவமாக முடியும் படம். ரத்னாவாக திலோத்தமாவும் அஷ்வினாக விவேக் கோம்பரும் நடித்திருக்கிறார்கள்.
இருவேறு வர்க்கங்களைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்யும் படங்கள் நமக்குப் புதிதல்ல. சலிக்கச் சலிக்க ஏழை - பணக்காரர் காதல் சினிமாக்களைப் பார்த்துவிட்டோம். ஆனால், அதிலும்கூட பணக்காரப் பெண் ஏழை இளைஞனைக் காதலித்துத் திருமணம் செய்யும் படங்கள்தான் அதிகம். படித்த, பணத்திமிர் பிடித்த பெண்ணின் ஆணவத்தை அடக்கி ஒரு பெண் என்றால் எப்படி அடங்கி நடந்து இந்தியப் பண்பாட்டைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் முதல் தமிழ் சினிமாவின் எல்லா ஹீரோக்களுமே படமாக நடித்துவிட்டார்கள். ஒரு பணக்கார ஆண், வேலைக்காரப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்யும் படங்கள் அரிதிலும் அரிது.
உதாரணத்துக்குப் `படையப்பா'. பொறியியல் பட்டதாரியான படையப்பா (ரஜினி), வேலைக்காரப் பெண்ணான வசுந்துரா (சௌந்தர்யா)வைக் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். ஆனால், இந்தப் படம் நீலாம்பரி என்ற ஆணவம் நிறைந்த முறைப்பெண்ணா, குடும்பத்துக்கு அடக்கமான வசுந்தராவா என்ற கேள்வியின் அடிப்படையில் கட்டப்பட்டது. `அதிகமா கோபப்படுற பொம்பளை நல்லா இருக்க மாட்டா', `பொம்பளை பொம்பளையா இருக்கணும்' போன்ற ஆணாதிக்க அறிவுரைகள் நிரம்பிய மோசமான படம் `படையப்பா'.
அதே சௌந்தர்யா வேலைக்காரப் பெண்ணாக நடித்து, தன்னைவிட உயர்ந்த வர்க்கத்தில் உள்ள இளைஞனை மணக்கும் தெலுங்குப்படம் `9 நேலுலு'. தமிழில் `கண்டேன் சீதையை' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெர்ச்சுவல் ரியாலிட்டியில் ஆர்வம் கொண்ட கம்ப்யூட்டர் இன்ஜினீயரான சுரேந்திரா (விக்ரம்) வேலைக்காரப் பெண்ணான சாவித்திரி (சௌந்தர்யா)வைத் திருமணம் செய்கிறார். கணவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் அந்தப் பணத்துக்காக வாடகைத்தாயாக மாறுகிறார் சாவித்திரி. குணமடைந்த கணவரே இதை ஏற்காதபோது தன் தரப்பு நியாயங்களை சாவித்திரி முன்வைக்கும் படமே `கண்டேன் சீதையை'. `படையப்பா'வுடன் ஒப்பிடும்போது பெண் குரலுக்கான வெளி இருக்கிறது என்பதைத் தாண்டி சிறந்த படம் என்று சொல்லிவிட முடியாது.
ஆனால், மேற்கண்ட இரண்டு சினிமாக்களின் மசாலாப்பூச்சு இல்லாமல் உண்மைக்கு நெருக்கமாக எடுக்கப்பட்ட நேர்த்தியான சினிமா `Is love enough sir?' அடிப்படையில் வர்க்கப்பிரச்னையையும் சேர்த்துப் பேசும் படம். முற்போக்குச் சிந்தனையுள்ள ஆணாக இருந்தாலும், ஒரு பணிப்பெண்ணைத் திருமணம் செய்வது இன்றளவும் சாத்தியமில்லாத சூழலில் துணிச்சலான சினிமா என்று சொல்லலாம். சாதியமும் நிலப்பிரபுத்துவமும் ஆணாதிக்கமும் நிறைந்த கிராமப்புறத்திலிருந்து வரும் பெண் எப்படி நகரச்சூழலில் தனக்கான சுதந்திர வெளியைத் தேடிக் கண்டடைகிறாள் என்பதையும் இயல்பாகச் சொல்லும் படம் இது.
நெட்ஃப்ளிக்ஸ் போன்ற பெரிய தளங்களில் இல்லாது `நீஸ்ட்ரீம்' என்ற அதிகம் பரிச்சயம் இல்லாத ஓ.டி.டி தளத்தில் வெளியான, சமூக வலைதளப் பதிவுகள் வழியாகவே கவனம் பெற்ற மலையாளத் திரைப்படம் `The Great Indian Kitchen'.
ஜியோ பேபி இயக்கிய இந்தத் திரைப்படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் `முதல் பெரியாரிய இந்திய சினிமா'.
இப்படிச் சொல்லும்போது பலருக்கும் ஆச்சர்யம் இருக்கக்கூடும். பெரியார், சினிமா மீது நல்லபிப்பிராயங்கள் இல்லாதவர். மொழி, மொழிப்பற்று, இலக்கியங்கள், பண்டிதர்கள், தமிழறிஞர்கள், சினிமா முதலான கலைகள், கலைஞர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர். இவை அனைத்தும் சாதி, மதம், ஆணாதிக்கம், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு வலுசேர்க்கின்றன என்பதே பெரியாரின் விமர்சனத்துக்குக் காரணம். கலை, இலக்கியம் குறித்த பெரியாரின் அணுகுமுறை விவாதத்துக்குரியது. அதேநேரத்தில் பெரியாரின் விமர்சனமும் கரிசனமும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை.
சமையலறை பெண்களுக்கான அடிமைக்கூடங்களாக மாறுவது, தீட்டு என்னும் கருத்தாக்கத்துக்கும் பெண்ணடிமைத்தனத்துக்கும் உள்ள தொடர்பு, மதம் மற்றும் குடும்பம் ஆகிய நிறுவனங்கள் எப்படிப் பெண்களைச் சுரண்டி ஒடுக்குகின்றன என்பவையே `The Great Indian Kitchen' படத்தின் பேசுபொருள்கள். பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகளின் அடிப்படைகளும் இவையே.
சமையல், உடை, சிகை, நகை போன்ற பழக்கங்கள் எப்படிப் பெண்களை அடிமைப்படுத்துகின்றன என்பது குறித்து பெரியார் தொடர்ந்து பேசிவந்தார். பெண்கள் நகை மாட்டும் ஸ்டாண்ட் ஆக இருக்கக் கூடாது என்றார். பண்பாடு என்பதற்காகவே சேலையைக் கட்டி அழ வேண்டாம் என்றவர், வசதிக்கேற்ற ஆடைகளை அணிய வேண்டும் என்றார். பெண்கள் நீண்ட கூந்தல் வளர்ப்பது கணவன்மார்கள் இழுத்து அடிப்பதற்காகத்தான் உதவுகிறது என்றவர், `கிராப் வெட்டிக்கொள்ளும் பெண்களுக்குப் பரிசு' என்று அறிவித்தார். சமையல்கூடங்களில் பெண்கள் வதைபடுவதை எதிர்த்த பெரியார், `வீடுகளில் உள்ள சமையல்கூடங்கள் அகற்றப்பட்டு பொதுவான சமையல்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்' என்றார்.
Also Read: `கிச்சன், ராஜ்ஜியம் அல்ல; சிறை!' - நம் குடும்பங்களுக்கு #TheGreatIndianKitchen சொல்வது என்ன?
`The Great Indian Kitchen' பெண்கள் சமையலறையிலும் வீட்டுவேலைகளிலும் எப்படித் தங்கள் அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்கள் என்பதையே விரிவான காட்சிகளால் விவரிக்கிறது. அதுவும் சமையல் என்னும் அடிமைத்தொழிலை அவர்கள் விரும்பி மேற்கொள்கிறார்கள். குடும்பத்தில் உள்ள ஒவ்வோர் உறுப்பினரின் ஒவ்வொரு ரசனைக்குமான உணவைச் சமைக்க வேண்டிய நிலை. அதிலும் `அம்மியில் அரைத்தால்தான் ருசி', `கல்லில் துவைப்பதே பண்பாடு' என்னும் கட்டுப்பெட்டித்தனங்களும் பெண்களை எப்படி ஒடுக்குகின்றன என்பதைத் திரைப்படம் காட்சிப்படுத்துகிறது. நாயகி தன்னை அடிமைப்படுத்தும் குடும்பத்தைவிட்டு வெளியேறி நடக்கும் காட்சியின் பின்னணியில் ஆங்காங்கே பெண்கள் வேலை செய்வது இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் காட்சிகளை நம் கண்கள் பார்க்கும்போது, பண்பாடு, மரபு, பழக்கவழக்கம் என்னும் எதன் பெயராலும் பெண்கள் ஒடுக்கப்படுவதை எதிர்த்த பெரியாரின் குரலே நம் காதுகளுக்குள் ஒலிக்கிறது.
பெண்ணடிமைத்தனத்துக்கும் `தீட்டு' என்னும் கருத்தாக்கத்துக்கும் இடையிலான தொடர்பை நுட்பமாகக் காட்சிப்படுத்துகிறது The Great Indian Kitchen.
ராஜாராம் மோகன்ராய் முதல் பாரதியார் வரை பல சீர்திருத்தவாதிகள் பெண்கல்வி, விதவைகள் மறுமணம், குழந்தை மணம் மற்றும் உடன்கட்டை எதிர்ப்பு ஆகியவற்றை முன்வைத்துள்ளனர். ஆனால், ஆணாதிக்கத்துக்கும் சாதியத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பேசிய தனித்த சிந்தனையாளர்கள் பெரியாரும் அம்பேத்கரும்தான்.
1916-ல் வெளியான தன் முதல் நூலான `இந்தியாவில் சாதிகள்' புத்தகத்தில் சாதியத்தின் தோற்றம் குறித்து ஆராய்ந்த அம்பேத்கர் `அகமணமுறையே சாதிக்குக் காரணம்' என்று சொல்லியிருப்பார். `ஒரே சாதிக்குள் திருமணம் நடைபெறுவதன் மூலம் சாதி தொடர்ந்து காப்பாற்றப்படுகிறது. சாதித் தூய்மை கெடாமல் பாதுகாக்கும் பொறுப்பு பெண்களின்மீது சுமத்தப்பட்டது' என்பதே அந்த ஆய்வின் அடிப்படை.
``கணவனை இழந்த பெண் இன்னொரு சாதி ஆணை மணந்து சாதித்தூய்மை கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் கொண்டுவரப்பட்டது. அது முடியாதபோது விதவைக்கொடுமைகள் நடந்தன. அதேபோல்தான் குழந்தை மணமும் சாதியைக் காப்பதற்காகவே உருவானது" என்பார் அம்பேத்கர்.
இந்தியாவின் தனித்துவக் கொடுமையான `தீட்டு' தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் பெண்கள் மீதும் சுமத்தப்பட்டது. சுத்தம் X அசுத்தம் என்னும் இருமை எதிர்வுகள் மூலமே `தீட்டு' உருவானது. உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் வியர்வை, சளி, மலம், துர்நாற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள்; அசுத்தமானவர்கள்; தீண்டத்தகாதவர்கள். மறுபுறத்தில் உடலுழைப்பில் ஈடுபடாதவர்கள் வணங்கத்தக்க உயர் சாதியினர்.
`தீட்டு' என்பது சாதியுடன் மட்டும் நிற்கவில்லை. அது சடங்குகள், விழாக்கள், உணவுப்பொருள்கள், பாத்திரங்கள் என பலவற்றுக்கும் பரவியது. மாதவிடாய் என்பது அசுத்தமான ரத்தம். எனவே `தீட்டு'. இறப்பு என்பதும் மாதவிடாய் என்பதும் தீட்டு. பலர் இறப்பு வீடுகளிலும் `சடங்கான' வீடுகளிலும் சாப்பிடுவதைத் தவிர்ப்பது இன்றளவும் உள்ள நடைமுறை.
ஒருவர் இறந்துவிட்டால் அதற்கான இறுதிச்சடங்குகளைச் செய்பவர்கள், ஒதுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த நாவிதர், சலவைத்தொழிலாளர் மற்றும் `வெட்டியான்' என்றழைக்கப்படும் மயானத்தொழிலாளி. இவர்களாலும் இறப்பாலும் ஏற்படும் தீட்டை பிராமணர் கழிக்கும் நாள்தான் `கருமாதி'. இப்படி சமூகத்தின் வெவ்வேறு நிகழ்வுகளிலும் `தீட்டு' பரவியிருப்பதை உணரலாம்.
பெண்ணியம் என்பது ஒருபடித்தானதில்லை. `வெள்ளையினப் பெண்களுக்கும் கறுப்பினப் பெண்களுக்கும் ஒரேமாதிரியான பிரச்னைகள் கிடையாது' என்று `கறுப்புப் பெண்ணிய'த்தை முன்வைத்தார்கள் சந்தால்பெபே, குளோரியா யோசப் போன்ற செயற்பாட்டாளர்கள். இந்தியாவிலும் பிராமணப் பெண்களும் தாழ்த்தப்பட்டப் பெண்களும் சந்திக்கும் பிரச்னைகள் வெவ்வேறுதான். ஆனால் `தீட்டு' அவர்களை ஒன்றிணைக்கிறது. ஓர் ஆதிக்கச்சாதிப் பெண் தனக்குக் கீழுள்ள சாதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள்மீது தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் அதேநேரத்தில் தன் சாதியைச் சேர்ந்த ஆணால் தீண்டாமைக்கு உள்ளாகிறாள்.
இன்று சூழல் மாறியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் குலத்தொழிலில் இருந்து வெளியேறி கல்வி கற்று, வேறு வேலைகளுக்குச் செல்கிறார்கள். உடலுழைப்பு அதிகம் தேவைப்படாத ஐ.டி, ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனாலும் இன்னமும் உடலுழைப்பில் ஈடுபடும் அதே சாதிகளைச் சேர்ந்தவர்கள்மீது `தீட்டு' இருக்கிறது.
மறுபுறம் `தீட்டு' சாதியைச் சேர்ந்த ஆண்கள் உடலுழைப்பில் இருந்து வெளியேறி வெவ்வேறு பணிகளில் சேர்ந்துவிட்டார்கள். ஆனால், பெண்களோ இன்னமும் வீட்டுவேலைகளில் உடலுழைப்பில்தான் ஈடுபடுகிறார்கள். ஒரு பெண் படித்து வேலைக்குச் செல்லும்போது அவளுக்கான சுதந்திரவெளி உருவாகும் அதேநேரத்தில் வீட்டுவேலைகள், அலுவலக வேலைகள் இரண்டையும் செய்ய வேண்டிய இரட்டை அடிமையாகிறாள். இப்போதும் குழந்தைகளின் மலமள்ளுபவள் பெண்தான். துணி துவைப்பவள் பெண்தான். மலமள்ளுதலையும் துணிவெளுப்பதையும் இழிதொழிலாகவே பார்க்கிறது சாதியம்.
எனவே, பெண்கள் விடுதலை அடைய வேண்டுமானால் `தீட்டு' என்கிற கருத்தாக்கம், சாதியம், உடலுழைப்பு குறித்த இழிவான மனநிலை ஆகியவை ஒழிய வேண்டும். இத்தகைய நுட்பமான புரிதல் இருந்ததால்தான் பெரியார் பல சந்தர்ப்பங்களில் தாழ்த்தப்பட்டவர் விடுதலையையும் பெண்கள் விடுதலையையும் இணைத்துப் பேசுகிறார்.
``சமையல் பெண்களுக்கானதே என்னும் ஏற்பாடானது மலமள்ள ஒரு சாதி, மயிர் நீக்க ஒரு சாதி, துணி வெளுக்க ஒரு சாதி என்பதைப் போன்ற வருணாசிரமக் கொடுமையே ஆகும்" என்றார்.
``அநேக வருடப் பழக்கங்களால் தாழ்ந்த சாதியார் எனப்படுவோர் எப்படித் தாங்கள் தாழ்ந்த வகுப்பார் என்பதையும் ஒப்புக்கொண்டு தாமாகவே கீழ்ப்படியவும் ஒடுங்கவும் விலகவும் முந்துகிறார்களோ, அதுபோலவே பெண்மக்களும் ஆண்மக்களின் சொத்துகள் என்றும் ஆணுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றும் அவர்களின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்றும் நினைத்துக்கொண்டு சுதந்திரத்தில் கவலையற்றிருக்கிறார்கள்" என்றார்.
`தீண்டாமையையும் பெண்ணடிமைத்தனத்தையும் ஒழிக்காமல் இந்தியர்கள் சுதந்திரம் கேட்பதே நாணயக்கேடான விஷயம்' என்றார்.
மதம் என்னும் நிறுவனம் பெண்களை ஒடுக்குவதைக் காட்சிப்படுத்துகிறது The Great Indian Kitchen.
Also Read: எதிர்க்கருத்துகளுக்கும் இடமளித்தவர்... பெரியாரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை என்னென்ன?
பெண்களை ஒடுக்குவதில் எந்த மதமும் சளைத்ததில்லை. பெண்களை ஒடுக்குவதற்கான விதிகளை எல்லா மதநூல்களும் உருவாக்கின. `கடவுள் ஒரு மனிதரைத் தலையிலிருந்தும் இன்னொரு மனிதரைக் காலில் இருந்தும் படைத்தார்' என்று ஒரு மதம் சொன்னால் இன்னொரு மதமோ `ஆணின் விலா எலும்பில் இருந்து கடவுள் பெண்ணைப் படைத்தார்' என்றது. இன்னமும் பெண்கள் அனுமதிக்கப்படாத வழிபாட்டிடங்கள் ஏராளம். பெண்கள் பிரதமராகவோ ஒரு நாட்டின் அதிபராகவோ ஆகலாம். ஆனால், அதே பெண்கள் அர்ச்சகராகவோ போப்பாகவோ மௌலவியாகவோ மாற முடியாது. ஆண்கள் ஆன்மிக நலன்களைப் பெறுவதற்கான பணிவிடைகள் செய்வதற்கான அடிமைகள் பெண்கள் என்கின்றன எல்லா மதங்களும். எனவேதான் பெண்கள் மதநம்பிக்கையையும் பக்தியையும் விட்டொழிக்க வேண்டும் என்றார் பெரியார்.
குடும்பம் என்னும் நிறுவனம் பெண்களுக்கான வதைமுகாமாக இருப்பதைச் சொல்கிறது The Great Indian Kitchen.
பெரியார் குடும்ப அமைப்பில் பெண்களின் சுரண்டல் குறித்து தொடர்ச்சியாகப் பேசிவந்தார். திருமணம் என்னும் ஏற்பாடும் குடும்பம் என்னும் அமைப்பும் பெண்களை அடிமையாக்கவே செய்கின்றன என்றார். ``ஆண்கள் இரண்டு ஆசைநாயகிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள வேண்டும்" என்றார். ``திருமணம் என்பதை கிரிமினல் குற்றமாக்க வேண்டும்" என்றார். திருமண விழாக்களுக்குச் சென்று திருமண மறுப்புப் பிரசாரம் செய்தார். சனாதனவாதிகள் எதிர்த்ததால் மணவிலக்குச் சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் தாமதப்படுத்தியபோது ``நமது நாட்டில் மற்ற நாடுகளில் இருப்பதுபோன்ற கல்யாண ரத்துச் சட்டம் ஏற்படாமல் போகுமாயின் கல்யாண மறுப்புப் பிரசாரமும் கல்யாணமான புருஷர்களுக்கும் பெண்களுக்கும் பலதாரமணப் பிரசாரமும்தான் செய்ய வேண்டியது வரும்" என்று மிரட்டினார்.
`பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரம் அல்ல' என்றார். இன்னும் ஒருபடி மேலே போய், `பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கருப்பைகளை அகற்ற வேண்டும்' என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். `பெண்கள் பிள்ளை பெறாவிட்டால் மனித சமூகம் விருத்தி அடையாதே?' என்று கேட்கப்பட்டபோது, `மனித சமூகம் விருத்தி அடையாவிட்டால் என்ன, புல், பூண்டு, மற்ற ஜீவராசிகள் விருத்தி அடையட்டுமே! மனித சமூகம் விருத்தியடைவதைவிட பெண் விடுதலைதான் முக்கியம்' என்றார். `கற்பு என்பது கற்பிதம்' என்றார்.
உண்மையில் The Great Indian Kitchen படத்தின் இயக்குநர் ஜியோ பேபி பெரியாரைப் படித்தவரா, உள்வாங்கியவரா என்று தெரியாது. ஆனால், அவரது படம் பெரியாரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கிறது. காரணம், அது பெண்களின் அசலான பிரச்னைகளையும் அவர்கள் மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறைகளையும் பேசுகிறது.
The Great Indian Kitchen இந்திய சினிமா வரலாற்றிலும் இந்தியப் பெண்ணிய வரலாற்றிலும் ஒரு மைல்கல்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/an-analysis-on-tribhanga-is-love-enough-sir-and-the-great-indian-kitchen-movies
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக