நாட்டுக்கோழிக் குழம்புல நல்லெண்ணெய விட்டு சோத்துல பெசைஞ்சு சாப்பிடுறது, ஆட்டு எலும்பை பஞ்சுபோல் ஆக்கி எலும்பு ரோஸ்ட் பண்றது, கறி தோசை, கறி இட்லினு அசைவத்துல முக்கி முத்து குளிக்கிறவர்கள் மதுரைக்காரர்கள்.
அவிச்ச முட்டை, ஆம்லட், ஆஃப் பாயில், ஃபுல் பாயில் என இருந்த முட்டை ஸ்பெஷல்களை முட்டைப் பொறியல், வழியல், கரண்டி ஆம்லட், குழி ஆம்லட், முட்டை குருமா, முட்டை தோசை, முட்டை பரோட்டா எனப் பல பரிமாணங்கள் எடுக்கவைத்தவர்கள் இந்த மதுரைக்காரர்கள். அதுமட்டுமல்லாமல் இப்போது மட்டன், சிக்கனில் முட்டையை உடைத்து ஊற்றி புதிதாக முட்டைக்கறி கண்டுபிடித்திருக்கிற மதுரைக்காரர்களைப் பார்த்து மற்ற ஊர்காரர்களும் கொஞ்சம் ஜெர்க் ஆகிறார்கள்.
மதுரைக்காரர்கள் மசாலாவும், மாமிசமுமாக எப்போதும் நான்வெஜ்ஜாக வாழ்பவர்கள் என சிலர் நினைக்கலாம். இவர்களுக்கு இன்னொரு பக்கமும் இருக்கு என்பது மதுரைக்குள் இறங்கிப்பார்த்தால் தெரியும்.
மல்லிப்பூ மாதிரி இட்லிக்கு நாலு வகை சட்னிங்கிற ஃபார்முலாவை மதுரைக்காரங்கதான் உருவாக்கினதா சொல்வாங்க. இட்லிக்காகவே பிரத்யேக ஹோட்டலை மதுரையில் மட்டுமில்லாமல் பல ஊர்களிலும் திறந்து வைத்திருக்கிறார்கள். இட்லி, தோசை, பொங்கல், ஊத்தாப்பம், இடியாப்பம், வடை இல்லாத ஊரே தமிழகத்தில் இல்லையென்றாலும் மதுரையில இதோட டேஸ்ட்டே தனிதான். அது ரோட்டோரம் இருக்குற அக்கா கடையோ, ஏசி வச்ச பெரிய கடையோ, ருசியை யாராலும் அடிச்சுக்க முடியாது.
வெண்பொங்கலை தூக்க மாத்திரை எனப் பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், தூக்கத்தை மறந்து க்யூவில் நின்று பொங்கலை வாங்கிக்கொண்டுபோகும் அளவுக்கு பிரபலமான கடைகள் மதுரையில் நிறைய உண்டு.
மதுரையின் உணவுப் பாரம்பரியம் என்பது ஒற்றைத்தன்மையானது அல்ல. சில நூறாண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு இடம்பெயர்ந்து வந்த பல்வறு இனக் குழுக்களின் உணவு முறைகளுடன் கலந்ததால்தான் இன்றும் தனித்து நிற்கிறது. வெரைட்டி ரைஸ் என்று சொல்லப்படும் வெண்பொங்கல், புளிச்சோறு, தயிர் சோறு, எலுமிச்சை சோறு, தக்காளி சோறு போன்ற கலவை சோறுகளும் மதுரையின் முக்கியமான உணவுகள்தான். இவ்உணவுகளை மட்டும் 3 வேளையும் உண்கிறவர்கள் மதுரையில் இருக்கிறார்கள்.
காமராஜர் சாலை, அனுப்பானடி, தெப்பக்குளம், முனிச்சாலை, பழைய குயவர்பாளையம், புதுமாகாளிப்பட்டி, மஹால், தெற்குவாசல் பகுதிகளில் பொங்கலுக்கென்றே கடைகள் நிறைந்துள்ளன. மதியம் தொடங்கும் இக்கடைகளின் வியாபாரம் நள்ளிரவு வரை நீடிக்கும். சின்ன சின்னதாக தெரியும் ஒவ்வொரு கடைக்கும் பல ஆண்டு வரலாறும் பெருமையும் தனியான வாடிக்கையாளர்களும் உண்டு.
அதில் ஒன்றுதான் முனிச்சாலை சந்திப்பில் இருக்கும் அன்னபூரணி பொங்கல் கடை. பாரம்பரியமான இக்கடையை கடந்து செல்கிறவர்களை பொங்கல், புளிச்சோறு வாசனை மூக்கை துளைக்கும். இப்பகுதி மக்கள், கலவை கலவைச்சோறுகளை புளிப்பொங்கல், எலுமிச்சை பொங்கல், தக்காளி பொங்கல் என்றே குறிப்பிடுகிறார்கள்.
அன்னபூரணி பொங்கல் கடையில் பொங்கல் சாப்பிடவும், பார்சல் வாங்கவும் மதியத்திலிருந்து கூட்டம் அலை மோதுகிறது. நெய் வாசத்துடன் மிளகு தூக்கலாக, குழைவான பொங்கலை சும்மா வாயில் வைத்தாலே அல்வா போல் தொண்டைக்குள் வழுக்கிக்கொண்டு செல்கிறது. அதை தேங்காய் சட்னி, சாம்பாரோடு மிக்ஸ் பண்ணி சாப்பிட்டால் வேறு ஒரு சுவையை தருகிறது.
அதுபோல் புளிச்சோற்றில் மினுமினுக்கும் தாளித்த வறமிளகாயும், கடலைப்பருப்பும், கூடவே வெந்தய வாசனையும் நாக்கை ஊற வைக்கும். அதன் மீது கடலை சுண்டலை பரப்பி தருவார்கள். தொட்டுக்க தேங்காய் சட்னி, சாம்பார் இருப்பதால் இரண்டு, மூன்று புளிச்சோற்றை உள்ளே தள்ளுகிறவர்கள் அதிகம் உண்டு.
இதைப்போலவே எலுமிச்சை சோறு, தக்காளி சோறு, சர்க்கரைப் பொங்கல், கேசரி என்று அசத்துகிறார்கள். பொங்கலை மட்டும் மெயின் அயிட்டமாக வைத்து பல ஹோட்டல்கள் அப்பகுதியில் பரபரப்பாக இயங்குவதை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது.
" நீண்டகாலமாக இந்த கடையை நடத்தி வருகிறோம். நாங்கள் கொடுக்கும் தனிப்பட்ட ருசிக்காக மக்கள் இங்கு வருகிறார்கள். இப்போதுதான் பொங்கல் விலையை 27 ரூபாயாக ஆக்கியிருக்கிறோம். பொங்கல், மதுரை மக்களுக்கு மிகவும் பிடித்தமானது. தனித்துவமானது. அதை இன்னும் சுவை கூட்டி தயாரித்து வழங்குகிறோம். எல்லாம் வீட்டு மசாலாவில் நல்ல பக்குவத்தில் தயாரிக்கிறோம். கூட்டம் அதிகம் வருகிறது என்பதற்காக கூடுதலாக தயாரிப்பதில்லை. அது சுவையை குறைத்து விடும் என்பதால். எப்போதும் வழக்கமான விற்பனைதான்.
வேலைக்கு செல்கிறவர்கள் மட்டுமில்லாமல் வீட்டில் உள்ளவர்களும் வாங்கிச் செல்கிறார்கள். மக்களுக்கும் திருப்தியாக உள்ளது. பொங்கலிடும் இந்த தொழில் எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது" என்கிறார் அன்னபூரணி பொங்கல் கடை உரிமையாளர் ஜெயராம்.
வெண்மை புரட்சிபோல பொங்கலிலும் புரட்சி செய்து வருகிறார்கள் மதுரை மக்கள். மதுரைக்கு வருகிறவர்கள் ஒரு எட்டு இந்த பக்கம் வந்து ஒரு வெட்டு வெட்டிட்டுப்போங்க!
source https://www.vikatan.com/food/food/madurai-special-verity-rice
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக