மத்திய அரசின், புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி டெல்லியில் நடந்த வன்முறையை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
Also Read: `டிராக்டர் பேரணியில் வன்முறை... திட்டமிட்ட நாடகம்!’ - குற்றம்சாட்டும் ஆம் ஆத்மி; மறுக்கும் பா.ஜ.க
அப்போது அவர்கள், பிரதமர் மோடி மீது கடுமையாக விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு பி.ஜே.பி மற்றும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
மேலும், அதை கண்டித்து மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்தக் கூட்டத்தில், பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்.ஐ ஆகிய இஸ்லாமிய அமைப்பினரைக் கடுமையாக விமர்சித்ததுடன், நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது.
இதனால், சம்பவ இடத்துக்கு வந்து சில இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, மேலும் சில இஸ்லாமியர்கள் அங்கு கூடி, கல்யாணராமன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அது ஒருகட்டத்தில் கல்வீச்சாக மாறி, இருதரப்பினர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால், பதற்றம் ஏற்பட்டது. உக்கடம், கோவை எஸ்.பி அலுவலகம், மேட்டுப்பாளையம் பகுதியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்து, கல்யாணராமனைக் கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி மோதல் உருவாக்க முயற்சி செய்தல், தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்தல் (IPC 147, 148, 149, 504, 506(2), 153(a), 153 (b), 269) உள்பட 8 பிரிவுகளின் கீழ் மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கல்யாணராமன் மற்றும் முன்னாள் நகர்மன்ற தலைவர் சதீஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
கல்யாணராமன் அவிநாசி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல, கல்வீச்சில் காயமடைந்த வெற்றி செல்வி என்ற பெண் அளித்த புகாரின் பெயரில் அஷ்ரஃப் என்பவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கல்யாணராமனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கல்யாணராமனை விடுவிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். கோவையில் இஸ்லாமிய அமைப்பினர் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சற்று பதற்றமான சூழல் நிலவுவதால், கோவையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
source https://www.vikatan.com/news/crime/bjp-kalyanaraman-arrested-in-mettupalayam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக